குறள் இனிது: திட்டமிட்டு வேலை செய்யணும் குமாரு!

By சோம.வீரப்பன்

திருவள்ளுவர் தமது குறளில் அரசு, அமைச்சு, தூது போன்றவற்றின் பண்புகளை விரிவாக எடுத்துச் சொல்லி உள்ளார். நன்கு திட்டமிட்ட பின்பே, எந்தச் செயலையும் தொடங்க வேண்டும் என்று அவர் ‘தெரிந்து செயல்வகை’ அதிகாரத்தில் சொல்பவை தற்போதைய மேலாண்மை பாடத்தில் உள்ள ‘திட்டமிடுதல்’ பாடத்திற்கு இணையானவை!

இன்றைய உலகில் வர்த்தக நிறுவனங்கள், தாம் தாக்குப் பிடித்து நிற்கவும், விற்பனையில் முன்னேறவும், லாபத்தில் முதலிடம் பிடிக்கவும் மேற்கொள்ளும் பகீரத முயற்சிகள் பண்டைக்கால போர்களுக்குக் குறைந்தவை அல்ல! வெற்றி ஒன்றையே மையமாகக் கொண்டு செயல்படுவது, வேறு எந்த ஒரு செயலைக் காட்டிலும் போர் தானே? ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பு அதனால் நாம் இழக்கக் கூடியவற்றையும், பின்னர் அதனால் நாம் பெறக் கூடியவற்றையும், இறுதியில் எஞ்சியவற்றையும் ஆராய்ந்து அதன் பின்னரே அச்செயலைத் தொடங்க வேண்டுமென்கிறது திருக்குறள்!.

நாட்ஸ் மற்றும் ஆடென்னலைக் கேட்டால், ‘திட்டமிடுதல் என்பது நாம் இருக்குமிடத்திற்கும் நாம் சென்றடைய வேண்டிய இடத்திற்கும் உள்ள இடைவெளியை இணைக்கும் பாலம் ஆகும்’ என்று சொல்வார்கள்! வெறும் திட்டம் இருந்தால் போதாது; திட்டமிடுதல் அவசியம் என்பதுதான் நிதர்சனமான உண்மை! வியாபார சூழ்நிலை என்பது வேகமாக, அதிவேகமாக மாறக்கூடியது! மேலும், சந்தையில் ஓர் எதிரி, ஓர் ஆயுதம் ஒரே விதமான சண்டை என்பதில்லை! களத்தில் இறங்கி விட்டால் எந்த எதிர்ப்பையும் மீறி வெற்றி கொள்ளவேண்டும்!

அதிகம் விற்பதற்கு நம் மனதில் எழும் முதல் யோசனை விலையைக் குறைக்கலாம் என்பதே! ஆனால், நம் விலைதான் குறைவு என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்துவது எப்படி? அதிக விளம்பரத்தினால் தானே? அப்படியானால் அதற்கு அதிகம் செலவாகுமே? விலையைக் குறைத்து செலவையும் கூட்டினால் லாபம் எப்படி?

சமீபத்தில் வெளியான கல்யாண் ஜுவல்லரியின் அமிதாப்பச்சன், பிரபு விளம்பரத்திலிருந்து நீங்கள் தப்பித்திருக்க முடியாது! இவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளத்துக்கு நிறைய செலவாகி இருக்குமே! அந்தச் செலவையும் மீறி இலாபம் ஈட்டுவது சாத்தியம் என்று கணக்கிட்டுத் தானே இதில் இறங்கி இருப்பார்கள்?

உபேர் டாக்ஸி புது வாடிக்கையாளர்களுக்கு 600 ரூபாய் மதிப் புள்ள கட்டணமில்லா பயணம் தரக்காரணம் என்ன? அதே வழியை வேறு சில வாடகைக்கார் நிறுவனங்களும் பின்பற்றுவதன் ரகசியம் என்ன? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்தால் நிறுவனத்தின்பால் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படலாம். ஆனால் இலவசமாக பயணமே செய்துவிட்டால், ‘இது உண்மையே, ஆஹா எவ்வளவு விலை குறைவு! அடடா என்ன சௌகரியமான சவாரி!!’ என சேவையையே அனுபவித்து உணர்வதற்கு ஈடாகுமா?

விற்பனை வித்தகர்கள் இதையெல்லாம் கணக்கிட்டுத்தான், இப்பொழுது ஆகும் செலவைவிட நாளடைவில் இதனால் அதிக லாபம் ஈட்டலாம் என்று முடிவெடுக்கிறார்கள்! புதுப் பொருளையோ, சேவையையோ அறிமுகப்படுத்தினாலும், புதிய கிளை தொடங்கினாலும், புதுத் தொழில்நுட்பத்திற்கு மாறினாலும் இவ்வாறு யோசித்து கணக்கிட்டுச் செய்தலே நன்று! தீர்க்க தரிசியின் குறளைப் பார்ப்போமா.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்

somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE