வரி வருவாய் இந்தியாவில் குறைவா?

By இராம.சீனுவாசன்

‘நமது வரி ஜிடிபி விகிதம் (tax to gdp ratio )ஏற்புடையதல்ல. இருபத்தியோராம் நூற்றாண்டின் ஒரு நவீன அரசை செயல்படுத்த இருக்கிறோம். பொது பொருட்களையும் பணிகளையும் கேட்பது மக்களின் உரிமை, அதனை கொடுக்கவேண்டும் என்றால் இப்போதுள்ள வரி / ஜிடிபி கொண்டு அவற்றை கொடுக்கமுடியாது” என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறுகிறார்.

ஓர் அரசின் மிக முக்கிய அடையா ளங்களில் ஒன்று வரி விதிக்கும் அதிகாரமாகும். வரி இல்லாமல் எந்த அரசும் செயல்படமுடியாது. வரி என்பது மக்களிடமிருந்து கட்டாயமாக பெறப்படுகிற தொகையாக இருந்தாலும், அது மக்களின் நலனுக்காக மட்டுமே செம்மையாக பயன்படுத்தப்படுகிறது என்று மக்கள் நம்புகிறவரை வரி வருவாய் ஈட்டுவதில் சிரமம் இருக்காது.

அதே போன்று ஒவ்வொருவரின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப வரி போடுவதும், வரி வசூலிப்பதில் ஊழல் இல்லை என்பதையும் நிலை நாட்டவேண்டும். இவையெல்லாம் வரி வசூலிப்பதில் உள்ள பொது விதிகள் என்றாலும், இப்போது வரி / ஜிடிபி பற்றி பார்ப்போம்.

வரி / ஜிடிபி விகிதம்

ஒரு நாட்டில் பல்வேறு வரிகள் உள்ளன. தனிநபர் வருமான வரி, நிறுவன வருமான வரி, சொத்து வரி, போன்ற நேர்முக வரிகளும், கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி என்ற மறைமுக வரிகளும் உள்ளன. இதில் ஒவ்வொன்றிலும் வரி விகிதங்களும், வரிச் சலுகைகளும் மாறிக்கொண்டே இருப்பதால், ஒட்டுமொத்த வரி அமைப்பு சிறப்பாக உள்ளதா என்பதை கணக்கிட வரி/ஜி.டி.பி விகிதம் பயன்படுத்தப்படுகிறது.

வரி / ஜிடிபி விகிதம் என்பது ஒரு நாட்டின் மொத்த வரி வருவாய்க்கும், நாட்டின் மொத்த வருமானத்திற்கும் உள்ள விகிதமாகும். ஒரு நாட்டில் பல வரிகள் இருந்தாலும், அதனை பலதரப்பட்ட மக்கள் செலுத்தினாலும், அவை அனைத்தும் நாட்டின் மொத்த வருமானத்திலிருந்தே செலுத்தப்படுவதால் வரி /ஜிடிபி விகிதம் கணக்கிடப்படுகிறது.

அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் 2015-16 நிதி நிலை அறிக்கையில் அரசின் மொத்த வரி வருவாய் ரூ 14,49,490 கோடி இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் ஜிடிபி யில் 11.23% ஆகும். பதினான்கு லட்சம் கோடிக்கு மேல் வரி வசூலிப்பது மிகப் பெரிய தொகையாக தெரிந்தாலும், அது நமது தேசிய வருமானத்தில் 12% விடகுறைவு என்பது தெளிவாகிறது. மத்திய அரசு போலவே மாநில அரசுகளும் வரி வசூலிக்கின்றன.

2013-14-ம் நிதி ஆண்டில் 30 மாநிலங்களும் மொத்தமாக வசூலிக்கும் வரியின் அளவு ஜிடிபி விகிதத்தில் 7% தான் இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் மொத்த வரி / ஜிடிபி விகிதம் 18% தான் உள்ளதால், இவ்வளவு குறைவான வரி வருவாயில் தன்னுடைய எல்லா கடமைகளையும் செய்ய முடியாது என்பது தான் அரசின் கவலை. எனவே வரி / ஜிடிபி விகிதம் வரி அமைப்பின் செயல்பாடு பற்றி தெரிவிக்கும் ஒரு முக்கிய குறியீடு.

வரி /ஜிடிபி விகிதம் குறைவுதானா?

உலக நாடுகளின் வரி / ஜிடிபி விகிதங்களை ஒப்பிட்டால் ஓரளவிற்கு நமது நிலை என்ன என்று தெரியவரும். இந்தியாவின் அருகில் உள்ள சீனா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் வரி /ஜிடிபி விகிதம் அதிகம்தான். ஆனால் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இது குறைவு. அட்டவணை-1 இதனை தெரிவிக்கும்.

வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது வளர்ந்த நாடுகளின் வரி அமைப்பு வேறு விதமாக இருப்பதாலும், அந்நாடுகளின் பொருளாதாரம் முழுமையாக ஒழுங்கு படுத்தப்பட்டதாலும் அங்கு வரி /ஜிடிபி விகிதம் அதிகமாக இருப்பதும், அதனை இந்தியா போன்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிட முடியாது.

அதே நேரத்தில் இந்தியா மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிக வரி / ஜிடிபி விகிதம் பெற்றிருப்பதும் நமது வரி அமைப்பு ஒப்பீட்டளவில் சிறப்பாக இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் நமக்கு கூடுதலாக வரி வருவாய் தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை. அனைத்து மாநிலங்களும் சமமான வரி அதிகாரம் பெற்றிருந்தாலும் மாநிலங்களின் பொருளாதார அமைப்பு, வரி வசூலிக்கும் திறன் வேறுபடுகின்றன. குறிப்பாக மதுவின் மீதான வரி வருவாய் எல்லா மாநிலங்களிலும் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது.

இதுபோக தொழில், வியாபார துறைகளின் அளவைப் பொறுத்து மாநிலங்களின் வரி வசூலும் வேறுபடும். விற்பனை வரி, முத்திரைத்தாள் வரி, வாகன வரி போன்றவை இந்த துறைகளின் வளர்ச்சியை பொறுத்து அமையும். தொழில், வியாபாரம் போன்ற துறைகளில் முன்னேறிய மாநிலங்கள் அதிக வரி / ஜிடிபி பெற்றிருப்பதை அட்டவணை-2 விளக்கும்.

பொதுவாக வரி விகிதம் சரியாகவும், வரிச் சலுகைகளை நீக்கி, வரி நிர்வாகம் எளிமையாகவும், ஊழல் இல்லாமலும் இருந்தால் வரி / ஜிடிபி விகிதம் உயரும். அதே நேரத்தில், அதிக செல்வம் உடையவரிடம் அதிக வரி வருவாய் வசூலிப்பதும் அவசியம்.

குறிப்பாக ஏற்றத் தாழ்வுகள் அதிகம் உள்ள பொருளாதாரங்களில் இது மிக அவசியம். சிறப்பான வரி அமைப்பின் எல்லா அம்சங்களும் இந்தியாவில் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். வரி கட்டாத கருப்பு பணம் பெருகி வருவது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

வரி ஜிடிபி விகிதம் என்பது ஒரு நாட்டின் மொத்த வரி வருவாய்க்கும், நாட்டின் மொத்த வருமானத்திற்கும் உள்ள விகிதமாகும். ஒரு நாட்டில் பல வரிகள் இருந்தாலும், அதனை பல தரப்பட்ட மக்கள் செலுத்தினாலும், அவை அனைத்தும் நாட்டின் மொத்த வருமானத்திலிருந்தே செலுத்தப்படுவதால் வரி ஜிடிபி விகிதம் கணக்கிடப்படுகிறது.

இராம.சீனுவாசன் seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

35 mins ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்