சென்னை கொளத்தூரில் நினைவுப் பரிசுகளாகக் கொடுக்கும் ஷீல்டுகள், கீ செயின்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார் கு.மணிவண்ணன். அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து சென்னைக்கு தொழில் தேடி வந்தவர். இன்று வெற்றிகரமான தொழில் முனைவராக வலம் வருகிறார்.
பிளாஸ்டிக் மோல்டிங் சார்ந்த கல்வித்தகுதி இருந்தாலும், பல்வேறு தொழில் அனுபவங்களுக்குப் பிறகுதான் இந்த தொழிலை செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பல கஷ்டங்களைச் சந்தித்தாலும், அந்த கஷ்டங்கள்தான் என்ன உயர்த்தியுள்ளது என்று நம்புகிறேன். ஆரம்பத்திலேயே சோர்ந்திருந்தால் இன்று ஏதாவது ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருப்பேன்.
இதுதான் தொழில் என முடிவு செய்த பிறகு, இந்த தொழிலில் எந்தெந்த வகைகளில் முயற்சி செய்து பார்க்க முடியுமோ அவ்வளவையும் முயற்சி செய்துவிட வேண்டும் என்று துணிந்து இறங்கினேன். இதுதான் எனக்கான அடையாளத்தைக் கொடுத்தது. சிறு வயதிலேயே அப்பா, அம்மா இருவரும் இறந்துவிட்டனர். உறவினர்கள் ஆதரவும் பெரிதாகக் கிடையாது.
சின்ன சின்ன வேலைகள் செய்து படித்து முடித்து சென்னைக்கு வேலை தேடி வந்தேன். சிம்சன் உள்ளிட்ட சில நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெறுபவராக வேலை செய்திருக்கிறேன். அதற்கு பிறகு பிளாஸ்டிக் மோல்டிங் தொழிலில் இருந்த ஒரு நண்பர் அறிமுகம் கிடைத்து அவர் மூலம் தொழிலைக் கற்றுக் கொண்டேன்.
தினசரி வேலை முடிந்ததும் பம்மலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அந்த வேலைகளைக் கற்றுக்கொள்வேன். அந்த தொழிலை தனியாகச் செய்யலாம் என நம்பிக்கை வந்த பிறகு பத்தாயிரம் பணத்தைத் திரட்டி முதலீடாகக் கொண்டு இறங்கினேன். ஒரு டானிக் பாட்டிலுக்கு மூடி செய்து கொடுத்ததுதான் நான் மேற்கொண்ட முதல் தொழில். ஆனால் அந்த தொழிலில் பெரிதாக வருமானம் கிடையாது.
பிறகு என் கவனம் கீ கெயின் தயாரிப்பதில் இறங்கியது. கீ செயின் தயாரிப்பு தொழில் என்பது சிவகாசி சார்ந்த தொழிலாக இருந்தது. சிவகாசி ஏஜெண்டுகள் வருடம் முழுக்க ஆர்டர் எடுப்பார்கள். ஆனால் ஜனவரி பிப்ரவரியில்தான் சப்ளை செய்வார்கள். தவிர கீ செயின் உற்பத்தி செய்ய அடக்க விலை 50 காசு என்றால் 3 ரூபாய் வரை விலை கொடுக்க வேண்டும்.
நான் இந்த தொழிலை யோசிக்க இதுவும் ஒரு காரணம். ஆர்டர் வாங்கிய ஒரே வாரத்தில் சப்ளை செய்ய வேண்டும், விலையும் குறைவாக கொடுக்கவேண்டும். இதை இரண்டையும் தாரகமந்திரமாகக் கொண்டு ஆர்டர்கள் பிடிக்கத் தொடங்கினேன். நானே ரெடி செய்த 150 மாடல்களோடு பல நிறுவனங்களுக்கும் அலைந்து ஆர்டர் பிடித்தேன்.
கிட்டத்தட்ட பெரிய நிறுவனங்கள் முதல் சிறு வர்த்தகர்கள் வரை ஆர்டர் கொடுத்தனர். இப்போது பல வகை கீ செயின்களும் உற்பத்தி செய்கிறேன். எனது டிசைன்கள் தவிர வாடிக்கையாளர்கள் தரும் டிசைன்களும், புகைப்படம் வைத்த கீ செயின்களும் தயாரிக்கிறேன். தேவைக்கு ஏற்ப மூலப்பொருட்களை சீனாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறேன்.
கீ செயின் உற்பத்திக்கு பிறகு தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிறபோது நினைவுப் பரிசாக வழங்கும் ஷீல்டுகள் பக்கம் கவனம் செலுத்தினேன். வாடிக்கையாளர்கள் விரும்பும் லோகோ, டிசைன்களில் கொடுத்த போது பலரும் என்னை ஊக்குவித்தனர். முக்கியமாக சென்னை பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் என பல வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். இப்போது தமிழகத்தின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் பலரும் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
ஆரம்ப முதலீடு பத்தாயிரம் ரூபாய்தான். அதற்கே அவ்வளவு கஷ்டப்பட்டேன். இன்று மாதம் குறைந்தபட்சம் ரூ 10 லட்சம் வரைக்குமான ஆர்டர்கள் கிடைக்கிறது. அன்று அந்த பணத்தைக் கொண்டு நான்கு கிரவுண்ட் நிலம் வாங்கியிருந்தால் சில லட்சங்கள் அல்லது கோடிகளாக வளர்ந்திருக்கும்தான். ஆனால் தொழில் முனைவருக்குரிய திருப்தி இருந்திருக்காது. சொந்த வீடு கூட சில வருடங்களுக்கு முன்புதான் வாங்கினேன்.
ஒரு தொழிலை தொடங்குகிறோம் என்றால் அதில் உடனடி லாபம் ஆதாயம் எதிர்பார்க்காமல், அந்த தொழிலில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் ஆராய வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் நீண்ட கால நோக்கில் யோசிக்க வேண்டும்.
உடனடி லாபத்தை எதிர்பார்த்து தொழிலில் இறங்கினால் சோர்வுதான் மிஞ்சும். தொழில்முனைவராக நிலைத்து நிற்க வேண்டுமெனில் தொழிலில் விடாப்பிடியான தன்மையோடு உழைக்க வேண்டும் இதுதான் நான் கற்றுக் கொண்ட பாடம் என்றார். புதிய தொழில் முனைவர்களுக்கு இவரது அனுபவம் பாடம்தான்.
maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago