உங்கள் வரியை நீங்களே தேர்வு செய்யலாம்

வரி செலுத்த வேண்டும் என்றாலே அது பெரும்பாலானவர்களுக்கு கசப்பான விஷயம்தான். நாம் வேலை செய்து சம்பாதிப்பதில் ஒரு தொகையை வரியாக ஏன் செலுத்த வேண்டும் என்ன எண்ணம்தான் இதற்குக் காரணம். பெரும் பணக்காரர்களிடமும், அரசியல்வாதிகளிடமும் இந்த எண்ணம் மேலோங்கியதால்தான் நாட்டில் கருப்புப் பணம் அதிகரித்துள்ளது.

நீங்கள் செலுத்த வேண்டிய வரியை நீங்களே முடிவுசெய்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் எப்படியிருக்கும்? நினைத்துப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறதா.

இத்தகைய வாய்ப்பை தனது நாட்டு மக்களுக்கு அளிக்கிறது மாலி அரசாங்கம்.

ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடுதான் மாலி. குடியரசு நாடான இங்கு மக்கள் தொகை 1.45 கோடி. குறைந்த மக்கள் தொகை என்றாலும் இந்நாட்டின் வரி வருவாய் விகிதம் ஏறக்குறைய பூஜ்யம் என்ற அளவில்தான் உள்ளது.

ஒரு சதவீதம் வரி செலுத்துமாறு அரசு மக்களைக் கேட்டுக் கொண்டாலும் அதற்கும் அங்குள்ள மக்கள் மசியவில்லை. உடனே புதிய உத்தியைக் கையாண்டது. 30 சதவீதம் வரி செலுத்தப் போகிறீர்களா அல்லது 3 சதவீத வரி செலுத்தப் போகிறீர்களா என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள் என அரசு அறிவித்துள்ளது.

இத்தகைய விநோனதமான அறிவிப்பைப் பார்த்து விவரம் அறிய பிபிசி செய்தியாளர் மாலியில் உள்ள வரி வருவாய்த்துறை அலுவலகத்தைச் சென்று பார்த்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.

மாலியில் 20 சதவீதம் வரை வரி வருவாய் ஈட்ட முடியும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் ஏழை நாடான மாலியில் அது நடைமுறை சாத்தியமில்லை என்பதை நேரில் பார்த்தால் புரியும்.

ஒரு குளிர்பானம் விற்பனை செய்யும் ஒருவருக்கு 80 ஆயிரம் பிராங்க்ஸ் (160 டாலர்) வரி செலுத்த வேண்டும் என வரித்துறையினர் தெரிவித்தனர். அதை செலுத்தாததால் அவரது கடைக்கு சீல் வைத்துவிட்டனர். ஒரு வாரம் கழித்துவந்த அவரிடம் பாதி தொகையை செலுத்துமாறு வரித்துறையினர் கேட்டனர். பணமில்லை என்று கூறிய அவர் 24 பாட்டில் ஆரஞ்சு ஜூஸை அளித்தார். உடனே அவரது கடையை திறக்க வரித்துறையினர் அனுமதித்துவிட்டனர்.

வருவாய் அலுவலகத்துக்குச் சென்ற அந்த பத்திரிகையாளர் அங்கிருந்த ஊழியரிடம் தான் வரி செலுத்த வந்திருப்பதாகக் கூறினாராம். உடனே அவரை தனது மேலதிகாரியின் அறைக்கு அழைத்துச் சென்ற அவர் விவரத்தைக் கூற அவரும் நாற்காலி அளித்து வரி தொடர்பாக விவரங்களை அளித்து 3 சதவீதம் செலுத்துகிறீர்களா அல்லது 30 சதவீதமா என கேட்டுள்ளார்.

மாலியில் தான் வாங்கிய பொருள்களை பட்டியலிட்ட போது அதற்கு 3 சதவீதமாக 485 டாலர் வரி செலுத்த வேண்டும் என அதிகாரி தெரிவித்தாராம். உடனே பத்திரிகையாளரும் தொகையைத் தர சம்மதம் ஆனால் அதற்கு ரசீது தர வேண்டும் என கேட்டுள்ளார்.

வரித் தொகை செலுத்திவிட்டு வெளியேறும்போது அந்த அதிகாரி மாலியில் பெரும்பாலும் பேரம் போலத்தான் வரி வசூலிக்கப்படுவதாகக் கூறியுள்ளார். பணமாக செலுத்த முடியாதவர்கள் பொருளாக அளிப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது அந்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒரு ஆட்டை அந்த அலுவலக வாயிலில் கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து கேட்டபோது, வரித் தொகைக்காக அந்த ஆட்டை அலுவலகத்தில் கட்டிவிட்டுச் செல்வதாகக் கூறியுள்ளார்.

தொழில்நுட்பம் வளர்ந்தால் கூட இன்னமும் சில நாடுகளில் இத்தகைய வினோதமான வரி விதிப்பு முறைகள் இருக்கத்தான் செய்கின்றன.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE