குறள் இனிது: அன்பாக, ஆதரவாக...

‘என் பணியாளர்கள் நான் சத்தம் போட்டால்தான் பயப்படுவார்கள்; மதிப்பார்கள்; இல்லாவிட்டால் தலையில் ஏறி உட்கார்ந்து விடுவார்கள்” என்று பல உயரதிகாரிகள் சொல்லக் கேட்டிருப்பீர்கள்! பெரும்பாலான மேலதிகாரிகள் கடுமையாகப் பேசுவதைத் தங்கள் பதவியின் அடிப்படை உரிமை என்றே நினைக்கின்றார்கள்.

காலையில் அலுவலகம் வந்தவுடன் மேஜை மேஜை யாகச் சென்று கத்திவிட்டு திரும்புவது சிலருக்கு நித்தியப்படி பூஜை மாதிரி! இத்தகைய நடவடிக்கைகள் அவர்களுக்குத் தங்களது அதிகாரத் தோரணையைக் காட்ட ஒருவடிகாலாக அமைகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களிலும், கணினி தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் இது குறைவாக இருக்கலாம். ஆனால் பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இந்த நிலை இன்றும் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்திரையில் வந்த நாக்ரி டாட் காமின் விளம்பரத்தை உங்களில் பலரும் மறந்திருக்க மாட்டீர்கள். ஹரிசாடு என்கிற ஒரு சிடுமூஞ்சி மேலதிகாரி; அவரிடம் வேலைப்பார்க்கும் திறமையான, குறும்புக்கார உதவியாளர் வேறு வேலை கிடைக்கப்போகிற தெம்பில் இருக்கிறார். அப்பொழுது வரும் தொலைபேசி அழைப்பில் ஹரி என்னும் பெயரின் ஆங்கில எழுத்துகளை விளக்கிச்சொல்ல H-பார் ஹிட்லர் A -அரொகென்ஸ், R-ராஸ்கல் I- பார் இடியட் என்று சொல்லி நக்கலடிப்பார்! இந்த விளம்பரம் மேலதிகாரியைக் குறித்த சராசரி பணியாளரின் வெறுப்பின் வெளிப்பாட்டை தெளிவாகக் காண்பிக்கின்றது!

அரசன் தோற்றத்தில் எளிமையாகவும் பேச்சில் இனிமையாகவும் இருந்தால் உலகம் போற்றும் என்கின்றது குறள். அக்காலத்தில் அரசனுக்கு குழைகின்ற கவரியும் கொற்றவெண் குடையும் இருந்திருக்கும்! இக்காலத்தில் நிறுவனங்களின் மன்னர்களான உயரதிகாரிகளுக்கு பெரிய தனி அறை, செயலாளர், சந்திப்பதற்கு முன்அனுமதி என்று அந்தஸ்தைக் காட்டும் அங்கீகாரங்கள் போதாதா?

பல அலுவலகங்களில் உயரதிகாரிகளை யாரும் எளிதில் பார்த்துவிட முடியாது! அவர்கள் தமக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் மட்டுமே பேசுவர். இதனால் நிறுவனத்தின் அடிமட்ட நிலையில் என்ன நடக்கின்றது என்பது அவர்களுக்குத் தெரியாமலே போய்விடுகிறது. பணி செய்பவருக்குத் தானே பொருளின், சேவையின் தன்மையும் தரமும், அதை உயர்த்தும் வழியும் தெரியும். அவர்களின் நல் யோசனைகளால் பலன்பெற வேண்டுமனில், முதலில் அவர்கள் பேசத்தயங்காத சூழ்நிலை வேண்டுமில்லையா?

தவறு நடந்தால், தனியே கூப்பிட்டுக் கண்டிக்கலாம். அடுத்தமுறை அவ்வாறு நடக்கக்கூடாது என்று எச்சரிக்கலாம். பலர் முன்பு திட்டுவதால் அந்த வார்த்தைகளே நெஞ்சில் வடுவாய் நிற்குமே! மேலும் பாராட்டுவதில் தாராளம் காட்டலாமே! பலர் முன்பு பாராட்டப்படும் பணியாளர் மட்டும் உற்சாகம் அடைவதில்லை அதை கேட்கும் மற்றவர்களும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்!

கண்டிப்பைக் காட்ட சத்தமாகத்தான் பேச வேண்டுமென்பதில்லை! ஒருவரின் மௌனம் புரியாவிட்டால் அவரின் வார்த்தைகள் மட்டும் புரிந்துவிடுமா? பதவி என்பது போட்டுக் கழற்றும் சட்டை போன்றது. அதற்குள் இருக்கும் நல்ல மனிதரை வெளிக் கொணர்வோம்! பணியாளரிடமும் அன்பாக ஆதரவாகப் பேசுவோம்!

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்

somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE