சூரிய ஆற்றலில் உலகை வலம் வரும் விமானம்

சுற்றுச் சூழலைக் காக்க வேண்டும் என்பதில் அறிவியலாளர்களும் அதிக தீவிரம் காட்டுகின்றனர். சூரிய ஆற்றலில் இயங்கும் கார்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் இன்னமும் பரிசோதனை நிலையிலேயே உள்ளது. ஆனால் சூரிய ஆற்றலில் இயங்கும் விமானத்தின் மூலம் இந்த உலகை வலம் வருகின்றனர் ஸ்வீடனைச் சேர்ந்த பெர்ட்ரான்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரோ போர்ச்பெர்க்.

2003-ம் ஆண்டு சோலார் இம்பல்ஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் நிறுவனர்கள் ஆண்ட்ரே போர்ச்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்டு ஆகியோர்.

2009-ம் ஆண்டு முதலாவது விமானம் சோதனை ரீதியில் பறக்கவிடப்பட்டது. தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில் அது பறந்த தூரம் 350 மீட்டராகும்.

2010-ம் ஆண்டு 1,200 மீட்டர் உயரத்தில் 90 நிமிஷம் இந்த விமானம் பறந்தது. இரவு நேரத்திலும் பறந்து இது சாதனை புரிந்தது.

2011-ம் ஆண்டு ஸ்வீடனிலிருந்து 13 மணி நேரம் பறந்து பிரஸ்ஸல்ஸ் நகரை அடைந்தது. இதன் மூலம் இது சர்வதேச விமானமானது.

2012-ம் ஆண்டு கண்டங்களிடையே பறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது. 19 மணி நேரம் பறந்து மாட்ரிட்டிலிருந்து மொராக்கோ சென்றது.

2013-ம் ஆண்டு அமெரிக்காவில் கலிபோர்னியாவிலிருந்து அரிசோனாவுக்கு பறந்தது.

2015-ல் உலகை வலம்வரும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சோலார் இம்பல்ஸ் 2 எனப்படும் இந்த விமானம்தான் உலகின் முதலாவது சூரிய ஆற்றலில் இயங்கும் விமானமாகும்.

25 நாள்களில் உலகைச் சுற்றி வர திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களது மொத்த பயண காலம் 5 மாதங்களாகும்.

மொத்த பயண தூரம் 35,000 கி.மீ. ஆகும்.

12 நகரங்களில் மட்டும் இது தரையிறங்க உள்ளது.

கடந்த 9-ம் தேதி அபுதாபியில் கிளம்பிய இந்த விமானம் 10-ம் தேதி இந்தியாவில் அகமதாபாத் நகரை வந்தடைந்தது.

இங்கிருந்து மியான்மர், சீனா, ஹவாய், நியூயார்க் நகருக்குச் செல்லும். பிறகு புறப்பட்டு அபுதாபியைச் சென்றடையும்.

இதன் எடை 2,300 கிலோ. அதாவது ஒரு மினி வேன் அல்லது சிறிய ரக டிரக்கின் எடையாகும்.

ஆள் இல்லாத, சரக்குகள் இல்லாத ஒரு போயிங் விமானத்தின் எடை 1.80 லட்சம் கிலோவாகும்.

இதன் இறக்கை போயிங் விமானத்தை விட நீளமானது (72 மீட்டர்).

பகல் நேரத்தில் 28 ஆயிரம் அடி உயரத்திலும் இரவு நேரத்தில் 5,000 அடி உயரத்திலும் இது பறக்கும்.

விமானிகள் இதில் நிற்க முடியாது. உட்கார்ந்த படி விமானத்தை இயக்கலாம். சாய்வாக ஓய்வெடுக்கலாம்.

விமானத்தில் குளிர்பதன வசதி இல்லாததால் வெளியில் நிலவும் வெப்பம், குளிர் ஆகிய இரண்டையும் இவர்கள் அனுபவிக்க வேண்டும்.

இந்த விமானத்தில் 17,248 சூரிய சக்தியிலிருந்து மின்னுற்பத்தி செய்யும் மின்கலங்கள் உள்ளன. இவற்றிலிருந்து பெறப்படும் மின்சாரம் 4 மோட்டாரை இயக்குகிறது. இதிலிருந்து கிடைக்கும் ஆற்றல் விமானத்தின் சுழலிகளை (புரொப்பெல்லர்ஸ்) இயக்குகிறது.

விமானத்தில் உள்ள 4 லித்தியம் பாலிமர் பேட்டரிக்கும் மின்சாரம் சேகரிக்கப்படும். இது இரவில் விமானம் இயங்க உதவி செய்யும்.

இந்த விமானம் எங்கு பறக்கிறது, அதில் உள்ள பேட்டரியில் எந்த அளவுக்கு மின் சக்தி உள்ளது என்ற விவரங்கள் சோலார் இம்பல்ஸ் இணையதளத்தில் பார்க்கலாம்.

இத்திட்டப் பணிக்கான மொத்த செலவு ரூ. 900 கோடி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE