முதல் செலவு: பரஸ்பர நிதிகள்- ஒரு எளிய அறிமுகம்

By ஸ்ரீகாந்த் மீனாட்சி

“பரஸ்பர நிதிகள் என்றால் என்ன?” என்று சம்பிரதாயமாகக் கட்டுரை எழுதி உங்களைத் தூங்க வைப்பதாக உத்தேசம் இல்லை. பல முதலீட்டாளர்கள் ஒன்று சேர்ந்து பணத்தை ஒரு நிதி மேலாளரிடம் கொடுத்து என்றெல்லாம் சொல்லி விளக்க ஆரம்பித்தால் நீங்கள் அடுத்த பத்திக்கோ பக்கத்துக்கோ தாவி விடுவீர்கள் என்று தெரியும்.

ஒரு பரஸ்பர நிதியின் ஆதார வடிவம் என்ன, அது எப்படி செயல்படுகிறது என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்தான். இந்தக் கட்டுரைக் குறுந்தொடரின் பின்னொரு பத்தியில் அதையெல்லாம் நான் சொல்லத்தான் வேண்டும். ஆனால், இந்த மங்களகரமான ஆரம்பக் கட்டுரையில் அவற்றைப் பற்றிய வேறு விதமான ஒரு அறிமுகத்தோடு தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.

பரஸ்பர நிதி என்பது என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நமக்கு என்ன பயன்? அதை நாம் உபயோகிப்பது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு மட்டும், ஒரு நுகர்வோர் என்ற அளவில், என்ன விடைகள் என்று பார்க்கலாம்.

எல்லா முதலீட்டுச் சாதனங் களுக்குமே அடிப்படையில் ஒர் ஒற்றுமை உண்டு. அவற்றில் ஒன்றிடம் நாம் பணத்தைக் கொடுக்கிறோம்; பின்னொரு நாளில் திரும்பக் கேட்கிறோம். அப்படித் திரும்பக் கேட்கும் போது நமக்குக் கிடைக்கும் பணம் அதிகமாக இருந்தால் லாபம், இல்லையென்றால் நஷ்டம். மிக எளிமையான வங்கி வைப்பு நிதியிலிருந்து, அதி நுட்பமான ஆப்ஷன் வர்த்தகம் போன்றவை வரை இந்த உண்மை மாறாது. இந்த இடத்திலிருந்து தொடங்கலாம்.

நமக்குப் பரிச்சயமான வங்கி வைப்பு நிதியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வங்கி வைப்பு நிதிக்கு ஒரு கால அவகாசம் உண்டு; ஒரு வருடாந்திர வட்டி விகிதம் உண்டு. அந்தக் கால அவகாசத்திற்குப் பின்னர் பணம் உங்களுக்கு வட்டியோடு திரும்பி வரும். இப்பொழுது இந்த கட்டமைப்பைச் சற்று நெகிழ்த்தலாம்.

இந்தக் கால அவகாசம் என ஒன்று இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போது கேட்டாலும் ஓரிரு நாட்களில் அந்த நாள் வரையான வட்டியோடு உங்களுக்கு உங்கள் பணத்தைத் திருப்பித் தந்து விடுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டால், நீங்கள் பரஸ்பர நிதிக்கு கொஞ்சம் நெருங்கி வந்து விட்டீர்கள்.

இன்னமும் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம். அவர்கள் கொடுக்கும் வட்டி விகிதம் உத்திரவாதமானதில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பணத்தைத் திருப்பிக் கேட்கும் போது, அன்றைய நிலையில் எவ்வளவு “லாபம்” சேர்ந்திருக்கிறதோ அதை உங்கள் மூலதனத்தோடு சேர்த்துக் கொடுத்து விடுவார்கள் என்று சொன்னால் இன்னமும் அருகில் வந்து விட்டீர்கள்.

(இந்த லாபம் என்பது அப்படி இல்லாமல், நஷ்டமாகவும் இருக்கலாம்; அப்படி இருந்தால் உங்கள் முதலீட்டி லிருந்து அது குறைக்கப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். இப்போது அபசகுணமாகப் பேச வேண்டாம், அதைப் பிறகு பார்க்கலாம்).

இப்படிப்பட்ட வடி வத்தில் ஒரு முதலீட்டுச் சாதனம் இருக்க வேண்டு மென்றால், அதற்குத் தேவை என்ன? ஒவ்வொரு நாளும் அந்த முதலீட்டின் மதிப்பை நிர்ணயிக்க, பிரசுரிக்க, பயன்படுத்த ஒரு குறியீடு தேவை. அப்பொழுதுதானே நீங்கள் பணத்தை எந்த நேரத்தில் கேட்டாலும் சரியாக ஒரு மதிப்பைக் குறித்து உங்களுக்குக் கொடுக்க முடியும்?

இந்த மதிப்பை எப்படிச் செயல்படுத் துகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு இரண்டு உதாரணங் களைப் பார்க்கலாம். அவையும் நமக்குப் பரிச்சையமானவையே. ஒன்று தங்கம்; மற்றது வீடு (அல்லது மனை). இவை இரண்டுமே சந்தையில் மதிப்பு ஏறி இறங்குபவை.

இவற்றின் அன்றாட மதிப்பை நாம் எப்படி அறிகிறோம்? அவற்றில் ஒவ்வொன்றிற்கும் ஒரு அளவை நிர்ணயித்து அந்த அளவின் மதிப்பை வைத்து சந்தை ஏற்ற இறக்கத்தை கணக்கிடுகிறோம். தங்கத்திற்கு ஒரு கிராம் என்பதின் விலையைப் பயன்படுத்துகிறோம். ஒரு வட்டாரத்தில் உள்ள வீடுகளின் மதிப்பை ஒரு சதுர அடியின் மதிப்பினைக் கொண்டு நிர்ணயிக்கிறோம்.

பரஸ்பர நிதிகளுக்கும் அப்படி ஒரு அலகு உருவாக்கப்பட்டிருக்கிறது (அளவைகளில் மிகக் குறைந்த அளவு ஒரு ‘அலகு' எனப்படும்). இதை ஆங்கிலத்தில் ‘யூனிட்' என்கிறார்கள். ஒவ்வொரு பரஸ்பர நிதியும் இத்தகைய யூனிட்டுகளாகத்தான் வாங்கப்படு கின்றன; விற்கப்படுகின்றன. இந்த யூனிட்டுகளின் மதிப்பு ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே வரும் (சந்தை நிலவரத்திற்கேற்ப). ஒவ்வொரு பரஸ்பர நிதியும் தனது யூனிட் ஒன்றின் விலை என்ன என்பதை அன்றாடம் கட்டாயமாக வெளியிட வேண்டும்.

இங்கிருந்து, ஒரு முதலீட்டாளராக இப்பொழுது ஒரு பரஸ்பர நிதியை எப்படி பயன்படுத்தலாம் என்பதைச் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு நிதியின் ஒரு யூனிட்டின் விலை ஒரு குறிப்பிட்ட நாளில் ஐம்பது ரூபாய் என்று இருந்தால், நீங்கள் அதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் உங்களுக்கு 200 யூனிட்டுகள் கிடைக்கும். இரண்டு மூன்று வருடங்கள் கழித்து நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால், அவர்கள் தாங்கள் கொடுத்த யூனிட்டுகளைத் திரும்பக் கேட்பார்கள்.

அதாவது, நீங்கள் வாங்கிய யூனிட்டுகளை யாரிடமிருந்து வாங்கினீர்களோ அவர்களிடமே நீங்கள் விற்று விடலாம். நீங்கள் விற்கும் தினத்தில் அந்த யூனிட்டுகள் ஒவ்வொன்றிற்கும் என்ன விலையோ அதைக் கொடுத்து அவர்கள் நீங்கள் விற்பவற்றை வாங்கிக் கொள்வார்கள்.

உதாரணத்திற்கு ஒரு யூனிட்டின் விலை அன்று எண்பது ரூபாய் என்று இருந்தால், உங்களுக்குக் கையில் பதினாராயிரம் ரூபாய் கிடைக்கும். உங்களுக்கு எல்லாவற்றையுமே விற்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. சில யூனிட்டுகளை மட்டும் (உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறதோ அவ்வளவு) விற்கலாம் என்ற வசதியும் உண்டு.

இப்படி மொத்தமாகத்தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. எப்படி வங்கி வைப்பு நிதியில் மாதாந்திர முதலீடுகள் (ரெகரிங் டெபாசிட்) செய்யலாமோ அது போல, பரஸ்பர நிதிகளிலும் மாதா மாதம் ஐநூறு, ஆயிரம், ஐயாயிரம் என்று எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

இந்தக் கட்டுரையில் நான் சற்றே எளிமைப்படுத்தி இருக்கிறேன் என்றாலும், ஒரு பரஸ்பர நிதியைக் கையாள்வது என்பது இதை விட ரொம்பக் கடினமானது இல்லை.

எல்லா முதலீட்டுச் சாதனங்களுக்குமே அடிப்படையில் ஒரு ஒற்றுமை உண்டு. அவற்றில் ஒன்றிடம் நாம் பணத்தைக் கொடுக்கிறோம்; பின்னொரு நாளில் திரும்பக் கேட்கிறோம். அப்படித் திரும்பக் கேட்கும்போது நமக்குக் கிடைக்கும் பணம் அதிகமாக இருந்தால் லாபம், இல்லையென்றால் நஷ்டம்.

srikanth@fundsindia.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

மேலும்