மார்ச் மாதம் நெருங்கி வரும்போதுதான் நமக்கு வருமான வரி குறித்த சிந்தனை வந்து சேர்கிறது. அதுவரையில் அது குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருப்போம். கடைசியில் மார்ச் மாதம் சம்பளத்தில் மொத்தமான வரிப் பிடித்தம் செய்யப்படுகிறபோது மட்டும் வருத்தப்படுவோம்.
ஆனால் ஆண்டில் ஆரம்பத்திலேயே இதற்கு திட்டமிட்டால் வருமான வரி குறித்த கவலையில்லாமல் இருக்கலாம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். சம்பாதித்த பணத்தை இப்படி வரியாக செலுத்துகிறோமே என்கிற வருத்தமும் வேண்டாம்.
இப்படி முன் கூட்டியே திட்டமிடுவதன் மூலம் அரசு அனுமதிக்கும் பல்வேறு வரிச் சேமிப்பு திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.
ஆனால் இதற்கு நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே திட்டமிடுதல் அவசியம். முன்னேற்பாடு இல்லாமல் கடைசி நேரத்தில் கண்ட வகைகளிலும் முதலீடு செய்வது பலன் தராது.
தவிர இந்த முதலீட்டுத் திட்டங்களை அவசரத்தில் தேர்வு செய்வதன் மூலம் அதன் பாதுகாப்பு, அதிலிருந்து கிடைக்கும் வருமானம், அதை எளிதில் பணமாக்கும் வாய்ப்பு மற்றும் அதற்கான செலவுகள் குறித்தெல்லாம் யோசிப்பதில்லை.
வரிச் சேமிப்புக்கு என்று நமது வருமானத்தை வளர்ச்சி இல்லாமல் முடக்குவதும் சரியான செயல்பாடு அல்ல.
அந்த வகையில் ஒரு தனிநபர் எந்த எந்த வகைகளில் வரிச் சலுகை பலன்களை அனுபவிக்க முடியும் என்று பல வருமான வரி தணிக்கையாளர்களிடம் (ஆடிட்டர்) பேசியதிலிருந்து பொதுவாக ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருப்பவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.
மேலும் மூத்தக் குடிமக்கள் சிறப்புச் சலுகையாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் ரூ.3 லட்சம் வரையிலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் ரூ.5 லட்சம் வரையிலும் வருமான வரி கட்டத் தேவை இல்லை.
ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேற்படுகிறபோது வரி கட்ட வேண்டியிருக்கும். ஆனால் குறிப்பிட்ட முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படுகிறது.
இதன்படி ரூ.2.50 லட்சத்துக்கும் மேற்படும் ஆண்டு வருமானத்தி லிருந்து ரூ.1.5 லட்சம் வரை வருமானத்துக்கு வரிச்சலுகை பெறலாம். அதை எந்தெந்த வகை களில் பெற முடியும் என்பதைப் பார்க்கலாம். பொதுவாக பிஎஃப் முதலீடு, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியம் செலுத்துவது வீட்டுக்கடனுக்கு செலுத்தும் வட்டி போன்றவற்றுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கும்.
மருத்துவக் காப்பீடு பிரீமியம்
மருத்துவக் காப்பீட்டுக்கு செலுத்தும் ஆண்டு பிரீமிய கட்டணத்துக்கு வரி சலுகை பெறலாம். ஒரு ஆண்டில் மருத்துவக் காப்பீடு பிரீமியத்துக்கு ரூ.15,000 வரை வரிச்சலுகை கிடைக்கிறது.
மூத்த குடிமக்களுக்கு ரூ.20,000 வரையிலான பிரீமியத்துக்கு வரிச் சலுகை பெறலாம். ப்ளோட்டர் பாலிசியில் மூத்தக் குடிமக்களை இணைந்திருந்தால் இதற்கு ரூ.20,000 வரை வரி சலுகை பெறலாம்.
வீட்டுக் கடனுக்கான வட்டி
வீட்டுக் கடன் வாங்கி திரும்பச் செலுத்தும் வட்டியில் ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரி சலுகை உள்ளது. (அந்த வீட்டில் குடியிருந்தால் மட்டும்) ஆனால் வீட்டை வாடகைக்கு விட்டு, அதை வருமானமாகக் காட்டினால், திரும்ப செலுத்தும் முழு வட்டிக்கும் வரி சலுகை கிடைக்கும்.
கணவன் மனைவி இருவரும் வருமானம் ஈட்டும்பட்சத்தில் கூட்டாக வீட்டுக்கடன் வாங்கினால், இருவரது ஆண்டு வருமானத்திலிருந்தும் தனித்தனியே அசல் மற்றும் வட்டி வரி சலுகை பெற முடியும்.
வரிச்சலுகை முதலீடுகள்
சிலவகை முதலீடுகளை மேற் கொள்வதன் மூலமும் வரிச்சலுகை கிடைக்கும்.
குறிப்பாக நமது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் பிஎப் தொகைகூட ஒரு வகை முதலீடுதான். இதற்கு வரிச்சலுகை உண்டு. இந்த கணக்கில் கூடுதலாக பணத்தை செலுத்த வசதியும் உள்ளது.
நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே பணியாற்றும் நிறுவனத்தில் இது குறித்து சொல்லிவிட வேண்டும். இடையில் சேரவோ வெளியேறவோ முடியாது.
சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியம் அதிகமாக எதிர்பார்ப்பவர்கள் மற்றும் சம்பளத்தில் பிஎஃப் பிடித்தம் செய்யப்படாத பிரிவினர் பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் வங்கி வைப்பு நிதி போன்ற வழிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கும் வரி சலுகை உள்ளது.
இதர முதலீடுகள்
அஞ்சலகங்களில் செய்யப்படும் தேசிய சேமிப்புப் பத்திரம். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். தேசிய ஓய்வூதிய திட்டம். வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் (இஎல்எஸ்எஸ்)
ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம்
பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதன்முறையாக முதலீடு செய்பவர்களுக்கு முதலீட்டுத் தொகையிலிருந்து 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000 வரை வரிச்சலுகை கிடைக்கும். 80சி முதலீடு தவிர, கூடுதலாக இந்தச் சலுகை தரப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வரிச்சலுகை பெற ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
வீட்டு வாடகை
தற்போது குடியிருந்துவரும் வாடகை வீட்டுக்குத் தருகிற வாடகை தொகைக்கும் வரிவிலக்கு சலுகை உள்ளது.
ஆனால் மொத்த சம்பளத்திலிருந்து 10 சதவீத தொகை வாடகையாகத் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நகரம், நிறுவனத்திலிருந்து பெறும் வீட்டு வாடகை படியை பொறுத்துக் இதற்கான சலுகை கிடைக்கும்.
கல்விக் கடன்
மகன் அல்லது மகளுக்காக வாங்கிய உயர் கல்வி கடனுக்கான திரும்ப செலுத்தும் வட்டிக்கு வரிச் சலுகை உண்டு. மேலும் கடனைக் கட்டத் தொடங்கி, எட்டு ஆண்டு களுக்கு மட்டுமே இந்த வரி சலுகை கிடைக்கும்.
மருத்துவச் செலவுகள்
வருமான வரி செலுத்துபவர்களைச் சார்ந்துள்ள செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கான மருத்துவச் செலவில் ரூ.50,000 (தீவிர பாதிப்புக்கு ரூ.1 லட்சம்) வரை வருமான வரி சலுகை கிடைக்கும். அதுபோல எய்ட்ஸ், புற்றுநோய், நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட தீவிர நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவுகளுக்கு அதிக பட்சமாக ரூ.40,000 வரை வரிச் சலுகை கிடைக்கும். மூத்த குடி மக்களுக்கு ரூ.60,000 வரை சலுகை கிடைக்கும்.
80சி முதலீட்டு வாய்ப்புகள்
இஎல்எஸ்எஸ் (ELSS Equity Linked Savings Schemes) அல்லது டாக்ஸ் சேவர் மியூச்சுவல் ஃபண்டுகள்.
மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கும் ரிட்டையர்மென்ட் பெனிஃபிட் பென்ஷன் திட்டங்கள்
என்பிஎஸ் (NPS National Pension System)
இபிஎஃப் (EPF Employee Provident Fund)
பிபிஎஃப் (PPF Public Provident Fund)
வங்கி மற்றும் என்ஹெச்பி (NHB National Housing Bank) டெபாசிட்டுகள்
ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்
a. யூலிப் திட்டங்கள்
b. எண்டோவ்மென்ட் திட்டங்கள்
c. பென்ஷன் திட்டங்கள்
அஞ்சலகச் சேமிப்புகள்
a. 5 வருட டைம் டெபாசிட்
b. சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்
c. என்எஸ்சி (NSC National Savings Certificate)
நீரை மகேந்திரன்
maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago