“தயவு செய்து இது மாதிரி ஆபத்தான கட்டுரைகளைப் பிரசுரிக்க வேண்டாம். தமிழ் நாட்டில் இருப்பவர்கள் சிறு முதலீட்டாளர்கள்; எண்ணிக்கையில் அதிகமானவர்கள். இவர்கள் இந்த கட்டுரையை நம்பி பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் செய்தார்கள் என்றால் முதலுக்கு யார் என்ன உத்திரவாதம்?”
இரு வாரங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் வெளிவந்த ‘உறங்கும் பணமும், உழைக்கும் பணமும்’ என்ற கட்டுரைக்கு வந்த ஒரு எதிர்வினை இது.
இவர் மட்டுமல்ல, நான் சந்தித்த சில நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இதே கேள்விதான் - ‘போட்ட பணத்துக்கு யார் கேரண்டி? அதோட பாதுகாப்புக்கு என்ன உத்திரவாதம்?’
பங்குச்சந்தை சார்ந்த முதலீடு என்ற பேச்சு ஆரம்பித்தாலே பலரும் கேட்கும் முதல் மற்றும் கடைசிக் கேள்வி இது தான். முதலுக்கு உத்திரவாதமில்லாத போது மற்றவற்றைப் பேசி என்ன பயன் என்பதுதான்.
இழப்பு யாருக்கு?
இதற்கு என்ன பதில்? பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் முதலுக்கு உத்திரவாதம் இல்லை என்பது உண்மைதான். அதனால்தான் இவற்றை பாதுகாப்பற்ற (‘ரிஸ்கான’) முதலீடுகள் என்கிறோம். ஆனால், பாதுகாப்பற்ற முதலீடுகளை முற்றிலும் புறக்கணிப்பதனால் யாருக்கு இழப்பு? புறக்கணிப்பவருக்குத்தான்.
ஒரு பொருளை ஒருவர் உங்களிடம் கொள்ளை லாபத்துக்கு விற்கிறார். நீங்களும் அதை சந்தோஷமாக சிரித்துக் கொண்டே வாங்குகிறீர்கள் என்றால் யாருக்கு நஷ்டம்? உங்களுக்குத்தான். அதுதான் இந்த விஷயத்திலும் நடக்கிறது.
பங்கு வர்த்தகம்
நிதி நிர்வாக விஷயத்தில் இதை வேறு விதமாகப் பார்க்கலாம். சுலபமாகப் புரிவதற்காக எளிமைப்படுத்திச் சொல்கிறேன். மும்பையில் இருக்கும் ஒருவர் ஒரு நிறுவனத்தின் பங்கினை (பங்குச் சந்தையில்) வாங்குகிறார். அதனால், அந்தப் பங்கின் மதிப்பு உயர்கிறது.
அந்தப் பங்கு விலையை ஆதாரம் காட்டி, அந்த நிறுவனம் வங்கியில் தொழில் வளர்க்க 14% வட்டியில் (உதாரணத்திற்கு) கடன் வாங்குகிறது. அந்தத் தொகையை வைத்து நிறுவனத்தை நடத்தி லாபமீட்டுகிறது, பங்கு விலை மேலும் உயர்கிறது.
இன்னொரு பக்கம், வங்கி இது போன்ற நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதற்காக பொது மக்களிடமிருந்து கடன் வாங்குகிறது. நிறுவனங்களிடமிருந்து 14% வட்டி வாங்க முடியும் என்று தெரியும். வங்கியின் செலவுகள் மற்றும் லாபம் போக கடன் கொடுக்கும் பொது மக்களுக்கும் 9% வட்டி கொடுக்க முடியும்.
நீங்கள் வங்கிக்குப் போய் டோக்கன் எடுத்துக் கொண்டு காத்திருந்து கொடுக்கும் பணத்தை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு பிரச்சினை இல்லாமல் உங்கள் 9% வட்டியை “உத்திரவாதமாகத்” தருகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். இதில் இருக்கும் ஒவ்வொரு படியிலும் லாபம் இருக்கிறது. நீங்கள் வாங்கும் வட்டிக்கு அதிகமாகவே வங்கி நிறுவனத்திடமிருந்து வட்டி வசூலிக்கிறது. நிறுவனமோ அது கொடுக்கும் வட்டிக்கு அதிகமாகவே லாபம் ஈட்டுகிறது. இல்லையேல், வங்கியும் சரி, நிறுவனமும் சரி தொழில் நடத்த முடியாது.
இப்போது சொல்லுங்கள் - சுற்றி வளைத்துப் பார்த்தாலும் அடிப்படை உண்மை என்ன? மும்பையில் இருக்கும் அந்தப் பங்கு முதலீட்டாளருக்கு நீங்கள் மிகவும் சலுகை விலையில் உங்கள் பணத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். அவர் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு லாபம் ஈட்டி, அடுத்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கப் புறப்பட்டு விட்டார். மீண்டும் உங்கள் வைப்பு நிதிக்காக உங்களிடம் வருவார்.
இலவசம் இல்லை
இப்பொழுது புரிகிறதா, உங்கள் ‘உத்திரவாதத்திற்கு’ நீங்கள் கொடுக்கும் விலை? எதுவுமே வாழ்க்கையில் இலவசம் இல்லை. அது மட்டும்தான் உத்திரவாதம்.
இன்னொரு விஷயத்தினையும் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் எல்லா விஷயத்திலுமே உத்திரவாதத்துடன் தான் செயல்படுகிறோமா? சரி, தவிர்க்க முடியாத விஷயங்களில் ஏதாவது ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும், ஆனால் பண விஷயத்தில் அப்படிச் செய்ய வேண்டுமா என்று கேட்கலாம். சரி, பண விஷயத்தை மட்டுமே எடுத்துக் கொள்வோம், உத்திரவாதம் உள்ள முதலீடுகள் மட்டும்தான் செய்கிறோமா?
தங்கத்தின் விலைக்கு யார் உத்திரவாதம்?
இன்றளவும், தங்கத்தின் விற்பனை மிக அதிகமாக இருப்பது இந்தியாவில், அதுவும் தமிழகத்தில்தான். தங்கத்தின் விலைக்கு யார் உத்திரவாதம்? இரண்டாண்டுகளுக்கு முன்பு எட்டாத உயரத்தில் இருந்த தங்கத்தின் விலை, சென்ற ஒரு வருடத்தில் ஏற்ற இறக்கமாகத்தானே இருக்கிறது?
நமக்குப் பிடித்த இன்னொன்று வீடு, நிலம் ஆகியவை. அவற்றின் விலைக்கு உத்திரவாதம் உள்ளதா? சமீப காலமாக வீட்டு விலைகள் மந்த கதியில் தானே உள்ளன? பணவீக்கத்தை கணக்கில் கொண்டு பார்த்தால், விலை குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
ஆனால் இது போன்ற விஷயங்களில் நாம் தர்க்க முறைகளை நம்புவதில்லை. ஏதாவது கேட்டால், “இல்ல சார், இன்னிக்கு இல்லாட்டியும் என்னிக்காவது ஒரு நாள் சூப்பராப் போகும் சார்” என்பார்கள்.
தொலைநோக்கு முதலீடுகள்
அதுதான் முரண்நகை. இதே “என்னிக்காவது ஒரு நாள்” தர்க்கம் தான் பங்கு வர்த்தகம் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளுக்கும் பொருந்தும். இதைத்தான் நிதி ஆலோசகர்கள் “தொலை நோக்கு முதலீடுகள்” என்று சொல்கிறார்கள். ஆனால் வீட்டு விஷயத்தில் இதை நம்புபவர், மற்ற விஷயங்களில் இதை நம்ப முடிவதில்லை.
இத்தனைக்கும், ஒரு வீட்டை நினைத்த நேரத்தில் சட்டென்று விற்றுவிட முடியாது. கறுப்பு, வெள்ளை, வரிச்செலவு என்று பல பிரச்சினைகள் உண்டு. பங்கு வர்த்தகம் சார்ந்த முறைகளில், இன்று விற்றால் மூன்று நாளில் பணம். ஒரு வருடம் வைத்து விற்றிருந்தால், முழு வரி விலக்கும் உண்டு.
ஒட்டு மொத்தத்தில், இரண்டு விஷயங்களை உறுதியாகச் சொல்ல முடியும் - ஒன்று, உத்திரவாதம் தரும் எந்த முதலீட்டிற்கும் ஒரு விலை உண்டு. அது லாபத்தில் குறைவு என்ற ரூபத்தில் உங்களிடமிருந்து (மறைமுகமாக) வசூலிக்கப்படும்.
இரண்டு, அப்படி உத்திரவாதம் தராத எந்த முதலீட்டிலும், ஒரு அடிப்படைப் பாதுகாப்பற்ற தன்மை (ரிஸ்க்) இருக்கத்தான் செய்கிறது. சரியாக முதலீடு செய்தல், முதலீட்டுத் தொகுப்பை முறையாகப் பராமரித்தல், திட்டமிட்டுச் செயல்படுதல் போன்ற எளிய முறைகளைப் பயன்படுத்தினால், இந்த உத்திரவாதமின்மையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
பங்குச்சந்தை சார்ந்த முதலீடு என்ற பேச்சு ஆரம்பித்தாலே பலரும் கேட்கும் முதல் மற்றும் கடைசிக் கேள்வி இது தான். முதலுக்கு உத்திரவாதமில்லாத போது மற்றவற்றைப் பேசி என்ன பயன் என்பதுதான். ஆனால், பாதுகாப்பற்ற முதலீடுகளை முற்றிலும் புறக்கணிப்பதனால் யாருக்கு இழப்பு? புறக்கணிப் பவருக்குத்தான்.
ஸ்ரீகாந்த் மீனாட்சி
srikanth@fundsindia.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago