சராசரி சந்தேகம்: பொருள்களை வாங்குவது எப்படி?

By இராம.சீனுவாசன்

கடைகளில் பொருட்களை வாங்கும்போது எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு யோசனை இந்த பொருளுக்கு சரியான விலைதான் கொடுக்கிறோமா? ஒரு சிறிய பேனாவை ஐந்து ரூபாய்க்கு வாங்கினாலும், அதன் உற்பத்தி செலவு எவ்வளவு இருக்கும்? என்ன லாபம்? என்ற கேள்விகள் எல்ேலாருக்கும் எழும் சாராசரி சந்தேகங்கள்தான். இதற்கு என்னதான் விடை?

சந்தையில் நிலவும் போட்டி

பொதுவாக ஒரு பொருளை எல்லா விற்பனையாளரும் ஒரே விலையில் விற்கும் போது இந்த சந்தேகம் தீர்ந்து போனதாக நினைக்கலாம். விற்பனை யாளர்களிடையே நிலவும் போட்டி ஒவ்வொரு வியாபாரியும் குறைந்த விலையில் விற்க முயற்சித்து சந்தை விலை உற்பத்தி செலவுக்கு சமமாக இருக்கும் என்பது ஒரு கோட்பாடு.

பேனா, கைபேசி, போன்ற பலப்பொருட்களுக்கு இது பொருந்தும். ஆனால், பல நிறுவனங்களின் பொருட்களை ஒரே வியாபாரியிடமிருந்து வெவ்வேறு விலைகளில் வாங்க முடியும் என்பதையும் பார்த்திருக்கிறேன். நம்முடைய பேரம் பேசும் திறமையின்மை, நமக்கு அந்த பொருளின் தேவையில் உள்ள தீவிரம் எல்லாம் அப்பொருளின் விலையை உயர்த்திவிடும்.

எந்த வீட்டில் குழந்தை அழுகிறதோ அந்த வீட்டை சுற்றியே பலூன் வியாபாரி சுற்றுவது போல. சந்தையில் சரியான போட்டி நிலவாதபோது நுகர்வோருக்கு சாதகமாக சந்தை இருப்பதில்லை.

இணையதளங்கள்

இப்போதெல்லாம் இணையதளங்கள் மூலம் வியாபாரம் பெருகி விட்ட பிறகு, வியாபாரிகளிடையே விலை வேறுபாடும் குறையும் என்பது ஒரு கணிப்பு. பேருந்து, விமான போக்குவரத்து, திரை அரங்கங்கள் போன்ற வியாபாரங்களில் இதனை பார்க்கமுடிகிறது.

எல்லா நிறுவனங்களும் ஒரே இணையதளத்தில் டிக்கெட் விற்பதால், விலைகளில் பெரிய வேறுபாடு இல்லை. அல்லது அதிக விலைக்கு அதிக வசதிகளை செய்வதாக நிறுவனங்கள் கூற வேண்டியுள்ளது. ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற இணையதள வியாபார இடங்களில் விலை வேறுபாடுகள் குறையத் துவங்கியுள்ளன.

வேறு சிலர் பொருட்களின் விலை களை ஒப்பீடு செய்வதற்கென்றே இணைய தளங்களை நடத்துகின்றனர். சிலர் தாங்கள் வாங்கிய பொருளின் விலைக்கும் அதன் பயன்பாட்டு தரத்திற்கும் உள்ள தொடர்பற்றி விரிவாக எழுதி இணைய தளத்தில் வெளியிடுகின்றனர், அதற்காக இணையத்தளங்களும் உள்ளன.

பேரம் பேசுவதற்கென்றே இணைய தளங்கள் உண்டு. ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு நீங்கள் கொடுக்க நினைக்கும் அதிகபட்ச விலையை கூறினால், அந்த விலையில் பொருளை கொடுக்க நினைக்கும் வியாபாரி உங்களை தொடர்பு கொள்வார். மீண்டும் அடுத்த முறை அதைவிட குறைவான விலைக்கே நீங்கள் பொருளை வாங்க முயல்வீர்கள். இப்படி பொருளின் சரியான உற்பத்தி விலையில் பொருளை வாங்கமுடியும் என்ற முயற்சி தொடர்கிறது.

இப்படி ஒரு புறம் சரியான விலையை நிர்ணயிக்க நுகர்வோர் முனைய, மற்றொரு புறம் நம்மை குழப்ப வியாபாரிகள் இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர். கவர்ச்சியான விளம்பரங்கள், நாம் பயன்படுத்தும் இன்டர்நெட் எண்ணை வைத்து நமக்கு தேவைப்படும் பொருளை விளம்பரப்படுத்துவது என அவர்களும் போட்டி போடுகின்றனர்.

தினந்தோறும் ஒரு சில பொருட்களை மட்டும் மிக குறைந்த விலையில் விற்பது, குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில் வாங்கினால் 90% கழிவு, பொருள் அல்லது புத்தக அறிமுக நாளன்று கழிவு என பல வித்தைகளை வியாபாரிகளும் காட்டத் துவங்கியுள்ளனர்.

இந்த விலைக் கழிவுகள் எல்லாம் எப்படி சாத்தியம் என்று யோசித்தால் தலை சுற்றுகிறது. இப்படி இணையதளம் ஒரு பெரிய வியாபார இடமாக மாறிவருவதை பார்க்கமுடிகிறது.

வியாபார வெளிப்படை தன்மை

ஒரு வியாபாரத்தில் இருவர் உள்ளனர்.விற்பனையாளர் - வாடிக்கையாளர். வாடிக்கையாளருக்கு பொருளின் தரம், உற்பத்தி செலவு தெரியவேண்டும். தரம் அல்லது உற்பத்தி முறை பற்றி வெளிப்படை தன்மை வேண்டும், இதனை Operation Transparency (OT) என்று குறிப்பிடுவர்.

அதே போல் ஒரு பொருளின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது, குறிப்பாக உற்பத்தி செலவின் வெவ்வேறு அம்சங்கள் என்ன உழைப்பாளிகளின் கூலி என்ன, போக்குவரத்து செலவு எவ்வளவு என்பதற்கு Cost Transparency (CT) என்று பெயர்.

எத்தனை உணவகங்களில் அடுப்பங் கரையை நமக்கு காண்பிப்பார்கள்? காட்டினால் அது OT. சில உணவகங்களில் இதனை ஒரு கடமையாக செய்கிறார்கள். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு வாடிக்கையாளரை அழைத்து தங்கள் செய்முறையை காட்டுவது உண்டு.

உணவு பதப்படுத்தும் பெரிய நிறுவனங்கள்கூட இவ்வாறு செய்கின்றன. ஆனால் இதன் மூலம் உற்பத்தி செலவை நம்மால் அறியமுடியாது.

ஒரு பொருளின் விலை அட்டையில் அப்பொருளின் உற்பத்தி செலவை பகுத்து கூறுவது CT. ஹார்வேர்டு நிர்வாக கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் காவ்யா மோகன் என்பவர் நடத்திய ஒரு ஆய்வில் CT வியாபாரத்தை பெருக்குவதாக தெரியவந்துள்ளது.

வியாபாரிகளுக்கு CTயில் உள்ள தயக்கம், லாப அளவு தெரிய வந்தால் நுகர்வோர் பொருளை வாங்க தயங்குவர் என்பதாகும். இதனை பொய் என இந்த ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. லாப அளவையும் மற்ற செலவுகளையும் சேர்த்து வெளிப்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பொருட்களை வாங்கிசென்றனர்.

லாபம் அதிகமாக இருந்தும் வியாபாரம் தொடர்ந்து நடந்தது, வாடிக்கை யாளருக்கும், வியாபாரிக்கும் ஒரு நெருக்கமே வந்ததாக தெரிகிறது. ஒரு பொருளின் இரண்டு வண்ணங்களை கொடுத்து ஒரு வண்ண பொருளுக்கு CTயும் மற்றொரு வண்ண பொருளுக்கு விலை மட்டும் கொடுத்த பொது, CT உள்ள பொருளையே அதிகம் வாங்கினர்.

ஆனால் CT மூலமாக மிக பெரிய லாபத்தை விற்பனையாளர் பெறுகிறார் என்று தெரிந்தால் வாடிக்கையாளர்கள் அப்பொருளை ஒதுக்கத்தான் செய்தனர். லாபம் ெகட்ட வார்த்தை இல்லை, வியாபாரிகள் ஐயப்பட தேவை இல்லை என்பது தெளிவு.

வாடிக்கையாளரை பற்றி எனக்கு தெரியவேண்டாமா என்று வியாபாரி கேட்பது எனக்கு கேட்கிறது. ஒரு குறிப்பிட்ட நுகர்வோரின் தேவையின் தீவிரம் தெரிந்தால் அதனை வியாபாரி பயன்படுத்தி சுரண்டவே முயல்வார்.

நோயாளியின் தீவிரம் மருத்துவருக்கு தெரியும். அவர் அறம் சார்ந்து சேவை செய்யவில்லை என்றால் தன் சேவைக்கு என்ன விலை வைப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.

ஆக, வியாபாரிக்கு நுகர்வோரை பற்றி தெரிவதைவிட ஒவ்வொரு நுகர்வோருக்கும் வியாபாரி பற்றி தெரிவது தான் முக்கியம்.

லாப வரம்பு தெரிந்தால் நுகர்வோர் எப்படி பொருட்களை வாங்குவார்கள் என்ற தயக்கம் உற்பத்தியாளருக்கு இருக்கலாம். ஆனால் ஹார்வேர்டு நிர்வாக கல்லூரியில் மாணவர்கள் நடத்திய ஆய்வில் விலையில் வெளிப்படைத்தன்மை இருக்கும் பட்சத்தில், வியாபாரம் உயரும் என்று தெரியவந்துள்ளது.இதிலிருந்து லாபம் கெட்ட வார்த்தை இல்லை என்பதை வியாபாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

51 mins ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்