அவசியமாகும் மருத்துவ சேவை

By இராம.சீனுவாசன்

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் சுகாதார செலவுகள் குறைவுதான். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9% தான் சுகாதார செலவு, இதில் 30% தான் அரசின் பங்கு. பிரேசில் 8.9%, சீனா 5.1%, தென் ஆப்பிரிக்கா 8.7%, அமெரிக்கா 17.7 சதவீதத்தை சுகாதாரத்துக்கு செலவு செய்கின்றன.

இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்ட வாழ்நாள் 66 வருடமாக இருக்க, பிரேசிலில்74, சீனாவில் 75, தென் ஆப்பிரிக்காவில் 59 மற்றும் அமெரிக்காவில் 79 ஆக உள்ளன. மருத்துவ செலவை உயர்த்துவதும், குறிப்பாக அரசின் சுகாதார செலவை உயர்த்துவதும், எல்லோருக்கும் மருத்துவ வசதிகள் சென்று சேர்வதும் உறுதிப் படுத்தவேண்டிய அவசியம் உள்ளது.

தேசிய சுகாதார கொள்கை 2015

டிசம்பர் 31, 2014 அன்று மத்திய அரசு புதிய தேசிய சுகாதாரக் கொள்கை 2015 வரைவை தனது இணையதளத்தில் பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்டு வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறையில் அரசின் பங்கை அதிகரித்து அனைவருக்கும் சுகாதாரச் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்வது இக்கொள்கையின் நோக்கம்.

குழந்தை பிறப்பின்போது குழந்தை இறப்பது, தாய் இறப்பது, பாதுகாப்பான குழந்தை பிறப்பு என பல குறியீடுகளில் இந்தியா நல்ல முன்னேற்றத்தை அடைந்தாலும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் அடையவேண்டிய இலக்குகள் உயரத்தில் உள்ளன. குறிப்பாக மாநிலங்களுக்கிடையே சுகாதார முன்னேற்றத்தில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. அதே போல் கிராம-நகர வேறுபாடுகளும் உள்ளன. தமிழகம் சுகாதார துறையில் முன்னேறிய மாநிலமாக கருதப்பட்டாலும், பஞ்சாப், கேரளம், ஹரியாணா போன்ற மாநிலங்கள் நம்மைவிட சில சுகாதார குறியீடுகளின்படி முன்னேறியுள்ளன.

சுகாதார துறை சவால்கள்

குழந்தைகளுக்கான தடுப்பூசி, கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களின் சுகாதார சேவைகள் போன்றவை இன்னமும் எல்லோரையும் சென்றடையவில்லை. 61% குழந்தைகள்தான் முழுமையான தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். 70% தாய்மார்கள்தான் முழுமையான பேறுகால சுகாதார சேவைகளை பெற்றுள்ளனர். ஆகவே, எல்லோருக்குமான அடிப்படை சுகாதார சேவையை உறுதி செய்வது மிகஅவசியம்.

எளிதில் பரவக்கூடிய நோய்களான போலியோ, தட்டம்மை, யானைக்கால் நோய் போன்றவற்றை நாம் பெருமளவில் குறைத்துவிட்டாலும், குறிப்பிட்ட சில இடங்களில் இது போன்ற நோய்களின் தீவிரம் அதிகம். NRHM போன்ற கிராம சுகாதாரத்திட்டங்கள் வெற்றியடைந்தாலும், அடிப்படை சுகாதார சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அவற்றை மேலும் செம்மையாக செயல்படுத்துவது அவசியமாகிறது. அதே போல் நகர அடிப்படை சுகாதார சேவையை விரிவுபடுத்தவும் செம்மையாக்கவும் பொது செலவுகளை உயர்த்தவேண்டும்.

வாழ்க்கை முறை நோய்கள், பரம்பரை நோய்கள், விபத்து உதவி, எனப் பலவகை சுகாதார சேவைகளின் தேவை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இவற்றால் மக்களின் சொந்த சுகாதார செலவுகள் உயர்ந்து கொண்டே போகிறது.

சில மாநில அரசுகள் சுகாதார காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. இதனால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களும் அதிகம் செலவாகும் உயர்தர மருத்துவ சிகிச்சைகளை பெறமுடிகிறது. மத்திய அரசும் இது போன்றதொரு திட்டத்தை (RSBY) செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன என்று இந்த கொள்கை வரைவு சுட்டிக்காட்டி அதனைக் களையவேண்டும் என்று கூறுகிறது. இன்றும் பெரும் பகுதி நோயாளிகள் தனியார் துறை மருத்துவமனையை சார்ந்திருக்கின்றனர்.

எனினும், இத்துறையில் உள்ள ஒழுங்கீனங்களை களையவேண்டியுள்ளது. போலி மருத்துவர்கள், தேவையற்ற மருத்துவ சோதனைகள், சரியான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை என்ற பல நிலைகளில் அரசின் கண்காணிப்பு தேவைப்படுகிறது.

பாரம்பரிய மருத்துவத் துறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா ஆகியவற்றின் தேவைகள் இப்போது அதிகரித்துள்ளன. இவை நவீன முறையுடன் இணைந்தே இப்போது அரசு துறைகளில் செயல்படுகின்றன. இத்துறைகளை விரிவுபடுத்துவதும் அவசியம்.

கொள்கையின் நோக்கங்களும் திட்டங்களும்

நம் முன் உள்ள எல்லா சவால்களையும் சமாளிக்க நாட்டின் பொது சுகாதாரச் செலவை நாட்டின் மொத்த உற்பத்தியில் 5%ஆக உயர்த்தவேண்டும். ஆனால், இதனை உடனடியாக சாதிக்க முடியாது என்பதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசின் சுகாதார செலவு நாட்டின் உற்பத்தியில் 2.5% உயரவேண்டும், அதில் 40% மத்திய அரசின் செலவாக இருக்கவேண்டும். இதற்காக கூடுதல் வரி விதிப்பு செய்வதுகூட ஆராயப்படும். அரசின் செலவுகளில் 50% சுகாதார நிபுணர்களை, பணியாட்களை நியமிக்க செலவு செய்யப்படும்.

எல்லோருக்கும் சுகாதாரம் என்ற நிலையை உறுதி செய்யவேண்டும். இதற்காக சுகாதாரத்தை ஒரு உரிமையாக்கும் (Right to Health Care) திட்டத்தையும் செயல்படுத்த இந்த கொள்கை வரைவு அறிவுறுத்துகிறது. மாநிலங்களும் தங்களின் சுகாதார செலவுகளை உயர்த்த முடிவுசெய்தால் அதற்கு இணையாக மத்திய அரசு சுகாதார உறுதி திட்டத்தை செயல்படுத்தமுடியும்.

என்ன செய்யவேண்டும்?

சுகாதார துறையில் பல சவால்கள் எளிதில் சமாளிக்கக்கூடியவை. அரசின் சுகாதாரச் செலவை உடனடியாக உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக வரி வருவாயை சிந்தாமல் சிதறாமல் வசூலிக்கவேண்டும். மருத்துவ கல்வியை விரிவாக்கும்போது அதன் மீதான கட்டுப்பாடுகளும் முறையாக பின்பற்றப்படுவதை கண் காணிக்கவேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் நீக்க ஒழுங்குமுறை ஆணையம் வேண்டும். அப்போதுதான் சரியான விலையில் ஒழுங்கான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்யமுடியும். பொது மருத்துவமனைகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதுடன், மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும். மருத்துவ காப்பீடு விரிவாக்கும் போது, தனியார் மருத்துவ சேவைகளுக்கான விலைகளும் உயரும். இதிலும் ஒழுங்குமுறை ஆணையத்தின் தேவை உள்ளது.

எனவே மற்ற சந்தைகளில் உள்ளது போல் “மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம்” அமைப்பது புதிய சுகாதாரக் கொள்கையின் முக்கிய அம்சமாக இடம்பெறவேண்டும்.

சுகாதார துறையில் பல சவால்கள் எளிதில் சமாளிக்கக்கூடியவை. அரசின் சுகாதாரச் செலவை உடனடியாக உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக வரி வருவாயை சிந்தாமல் சிதறாமல் வசூலிக்கவேண்டும். மருத்துவ கல்வியை விரிவாக்கும்போது அதன் மீதான கட்டுப்பாடுகளும் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணிக்கவேண்டும்.

இராம.சீனுவாசன்

seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்