காலத்துக்கு ஏற்ற பிரான்சைஸி தொழில்கள்

By நீரை மகேந்திரன்

அமெரிக்காவின் முன்னணி ரொட்டி தயாரிப்பு நிறுவனம் சென்னையில் கடை திறக்கிறது. இங்கிலாந்தில் புகழ்பெற்ற காபி திருச்சியில் கிடைக்கிறது. உலக அளவில் முன்னணி பிரைடு சிக்கன் பிராண்ட் திருநெல்வேலியில் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமானது?

திருச்சியிலும் திருநெல்வேலியிலும் தங்களுக்கான நுகர்வோர்கள் இருக்கிறார்கள் என்று இந்த நிறுவனங்கள் எப்படி வந்து இறங்கின? புரிந்து கொள்வது ரொம்ப சுலபம்... மாறிவரும் பொருளாதார உலகில் நமது பாரம்பரிய தொழில் அறிவு மட்டும் போதாது. புதிய தொழில்களை நோக்கிப் போகவேண்டும் என்கிற நமது தேடல்தான்.

தொழில் தொடங்க ஆசை இருக்கிறது. ஆனால் இதற்கு முன் தொழில் அனுபவம் இல்லை என்பவர்களுக்கு பொருத்தமானது பிரான்சைஸி தொழில்கள்தான். என்ன தொழில், எப்படி தொடங்குவது என்கிற குழப்பம் இல்லை. இதுதான் தொழில். இதை இப்படி நடத்த வேண்டும். இவ்வளவு லாபம் வரும். என்று எல்லா கணக்குகளும் தெளிவாகக் கிடைத்துவிடும்.

தொழிலை ஏற்று நடத்தி அதிலிருந்து வரும் லாபத்தை பகிர்ந்து கொண்டால் போதும். தொழில் தொடங்குவதில் உள்ள ஆரம்ப பயம் கிடையாது. முதலீடு செய்வதற்குத் தயாராக இருந்தால் போதும் என்பதுதான் இதன் சிறப்பு. ஏற்கெனவே மக்களின் மனதில் பதிந்த, வியாபார வாய்ப்புள்ள நிறுவனமாக பார்த்து இந்த உரிமையை வாங்கினால் போதும்.

எங்கேயோ இருக்கும் ஒரு நிறுவனத்தோடு சேர்ந்து எப்படி தொழில் செய்வது? அதில் என்ன லாபம் கிடைக்கும்? அவர்களை எப்படி நம்புவது? அந்த தொழில் நமது ஊருக்கு பொருத்தமாக இருக்குமா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

எந்த தொழிலை தேர்ந்தெடுப்பது?

குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை பிரான்சைஸி முறை வந்துவிட்டது. கார் சர்வீஸ், கம்ப்யூட்டர் சர்வீஸ், உணவகம், காபி கடை, அழகு நிலையம் என எல்லா தொழில்களிலும் பிரான்சைஸி வாய்ப்பு வந்துவிட்டது. நமது முதலீட்டுக்கு ஏற்ப அல்லது நமக்கு உள்ள அனுபவத்துக்கு ஏற்ப தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அல்லது நமது பகுதியில் எந்த தொழிலை செய்தால் வருமானம் வரும் என்கிற அடிப்படையில் தொழிலை தேர்வு செய்து கொள்ளலாம்.

பயமே வேண்டாம்

உங்களுக்கு உணவக தொழில்மீது ஆர்வம் உள்ளது. அல்லது அனுபவம் உள்ளது. வழக்கமான உணவகம் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள். ஆனால் அந்த ஏரியாவில் எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்று சொல்ல முடியாது. அல்லது வெற்றிபெற தேவையான சில அடிப்படை ஆய்வுகளை செய்ய மாட்டோம்.

அதாவது திட்ட மதிப்பு, ஆரம்ப செலவுகள் எவ்வளவு? நமக்கான வாடிக்கையாளர்கள் யார்? மூலப்பொருட்கள் சப்ளை, விளம்பரம் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் ஒருங்கிணைக்கும் திறமை நம்மிடம் இருக்காது ஆனால் இந்த துறையில் பிரான்சைஸி கிடைத்தால் சம்பந்தபட்ட நிறுவனமே இந்த எல்லா வேலை களையும் பார்த்துக் கொள்ளும். தொழிலை நடத்துவதற்கான எந்த பின்புலமும் நமக்குத் தேவையில்லை. வாடிக்கையாளர் சேவையை சிறப்பாக அளித்தால் போதும்

மூதலீடு எவ்வளவு

என்ன தொழில், அதன் வாய்ப்புகள், நுகர்வோர் யார் என்பதைபொறுத்து முதலீடு இருக்கும். சில நிறுவனங்கள் முன் வைப்புத் தொகை மட்டும் வாங்கும். இந்த முதலீட்டை எத்தனை வருடங்களில், அல்லது மாதங்களில் திரும்ப எடுக் கலாம் என்கிற உத்திரவாதமும் கொடுக் கப்படலாம். தொழிலுக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் பிரான்சைஸி வாய்ப்புகள் உள்ளன.

ஒப்பந்த மீறல்

குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொடுப்பதற்கு மட்டுமே பிரான்சைஸி வாங்குகிறோம் என்றால் அதைத்தாண்டி நமது விருப்பத்திற்கு ஏற்ப வேறு விற்பனை மற்றும்,சேவைகளுக்கு மாறக்கூடாது. இதனால் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு குறையும். இது பிரான்சைஸி ஒப்பந்தத்தை மீறும் செயல்.

அடையாளமே நிரந்தரம்

குறிப்பிட்ட நிறுவனம் என்றால் இது தான் அடையாளம் என்று மக்கள் மனதில் பதிந்திருக்கும். அதை மாற்றக் கூடாது. அதுதான் வியாபார மதிப்பு. அமரும் இருக்கைகள், சுவர் களின் வண்ணம், உள் அலங்காரம் போன்றவை அந்த நிறுவனத்தின் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். இது போன்ற நிரந்தரமான அடையாளத்தை மாற்றக் கூடாது.

மைய நிர்வாக உதவி

வாடிக்கையாளர்களிடம் ஊழியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற அடிப்படை பயிற்சிகள், அவர்களது திறன் மேம்பாட்டு பயிற்சிகள் என எல்லா உதவிகளையும் நிறுவனம் கொடுக்கும். வியாபார, சேவை நடவடிக்கைகள், கையிருப்பு, நமது தேவைகள் போன்றவை மைய நிர்வாக அமைப்பின் மூலம் கண் காணிக்கப்படும்.

ஆனால் தலையிடுதல் இருக்காது. ஆனால் வாடிக்கையாளர் சேவையை நிறுவனமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். தவிர மூலப்பொருட்கள், விளம்பரம், அலங்காரம், தொழில் தொடர்பான இதர பயிற்சிகள், தேவை யான கருவிகள், அனைத்தையும் நிறுவ னமே வழங்கிவிடும்.

கல்வி நிறுவன பிரான்சைஸி என்றால் பாடத்திட்டங்களும், ஐஸ்கிரீம் தொழில் என்றால் குளிர்சாதன பெட்டிகள் போன்றவற்றையும் நிறுவனமே கொடுக்கும். அந்த பகுதிக்கு, அல்லது வருமானத்துக்கு எத்தனை பணியாளர்கள் தேவை, போன்ற விஷயங்களில் கூட சம்பந்தபட்ட நிறுவனத்தின் கவனம் இருக்கும்.

பிரான்சைஸி தகுதி

இது சம்பந்தபட்ட தொழிலைப் பொறுத்தது. குறிப்பாக உணவக தொழிலை தேர்ந்தெடுக்கிறோம் என்றால் எவ்வளவு சதுர அடி இடம், மக்கள் நெருக்கம், போக்குவரத்து வசதி பார்க்கிங் வசதி போன்றவற்றின் அடிப்படையில்தான் பிரான்சைஸி வாய்ப்பு கிடைக்கும். இதுவும் நேரடி ஆய்வுக்கு பிறகே தீர்மானிக்கப்படும். இடவசதி அதிகமாக இருந்து மக்கள் நெருக்கம் இல்லை என்றால் பலனில்லை. மக்கள் நெருக்கம் மிகுந்த இடமாக இருக்கும். ஆனால் பார்க்கிங் வசதி, மற்றும் இடைஞ்சல்கள் இருந்தாலும் அந்த இடம் பயன்படாது. இப்படி பல விஷயங்களையும் பார்க்க வேண்டும்.

பொதுவாக புதிதாக தொழில் தொடங்கி நமது பிராண்டை மக்கள் மனதில் நிலைக்க நீண்ட காலம் பிடிக்கும். இதற்கு காலத்தை செலவிடுவதைவிட பரிச்சயமான பிராண்டுகள் சார்ந்த தொழிலில் இறங்கினால் நேரடியாக தொழிலில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்பதுதான் இதன் சாதகமான அம்சம். காலம் மாறி வருகிறது. நாம் பாரம் பரிய தொழில் சிந்தனைகளை வைத்துக் கொண்டு எதிர்காலத்தை திட்டமிடு வதைவிட, மாறிவரும் பொருளாதார சூழலுக்கு ஏற்பவும், நுகர்வு தேவைக்கு ஏற்பவும் நமது தொழில் சிந்தனைகள் மாறலாம்தானே...

புதிதாக தொழில் தொடங்கி நமது பிராண்டை மக்கள் மனதில் நிலைக்க நீண்ட காலம் பிடிக்கும். இதற்கு காலத்தை செலவிடுவதைவிட பரிச்சயமான பிராண்டுகள் சார்ந்த தொழிலில் இறங்கினால் நேரடியாக தொழிலில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்.

கட்டுப்பாடான சுதந்திரம்

பிரான்சைஸி தொழில்களைப் பொறுத்தவரையில் அது உங்கள் சொந்தத் தொழில் கிடையாது. தொழிலை விரிவாக்கம் செய்யவோ, உங்கள் விருப்பம்போல மாற்றங்களைச் செய்யவோ, சுதந்திரமாக செயல்படவோ முடியாது. பிரான்சைஸி வழங்கும் நிறுவனத்தின் ஒப்பந்தங்கள், விதிமுறைகள் படியே இயங்க முடியும். வருமானத்தின் அடிப்படையில் லாபமும் வரையறுக்கப்பட்டிருக்கும். வேறு ஊர்களில் அந்த தொழிலுக்கான பிரான்சைஸி வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சந்தையில் நிலவும் போட்டி அல்லது உள்ளூர்காரர்களுக்கான வாய்ப்பு என்று போகலாம். இந்த நடைமுறைகளில் நிறுவனத்துக்கு நிறுவனம் மாற்றங்கள் இருக்கும்.

நீரை மகேந்திரன்

maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

45 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்