முதல் செலவு: நமது எதிர்காலம் நமது பொறுப்பு

By ஸ்ரீகாந்த் மீனாட்சி

சமீப நாட்களில் செய்திகளில் அதிகம் அடிபடும் விஷயம் பெரிய நிறுவனங்கள் சிலவற்றில் நிகழும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள். இவை நிகழ்த்தப்படும் விதம், அளவு, யார் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப்பட்ட முறை ஆகியவை பல தரப்பு மக்களிடமிருந்து கடும் விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது. ஆயினும் இது போன்ற நிகழ்வுகள் இன்றும் சரி, எதிர்காலத்திலும் சரி அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கும்.

பொருளாதாரத்தை நோக்கி…

காரணம், நமது நாட்டின் பொருளாதார முறையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் தவிர்க்க இயலாத மாற்றங்கள். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சந்தைப் பொருளாதாரத்தின் முழுமையான வடிவத்தை நோக்கி இந்தியா மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.

அது அமெரிக்க வடிவமாக இருக்குமா ஐரோப்பிய வடிவமாக இருக்குமா என்பது குறித்து யூகங்கள் இருக்கலாம். அதில் எவ்வளவு, எத்தகைய இந்தியக் கூறுகள் இருக்கும் என்ற கேள்விகள் இருக்கலாம். ஆனால், இந்த நகர்வு நடந்து கொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய பொருளாதார வடிவத்தில், பணியிடத்தில் நிரந்தரமின்மை என்பது ஒரு அம்சமாகவே இருக்கும். எவர் எப்படி பணிநீக்கம் செய்யப்படலாம் என்பதில் சில வரைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் கொண்டு வந்தாலும், ஆட்குறைப்பு என்பது அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கும். நிரந்தர வாழ்நாள் வேலைக்கான உறுதி என்பது எந்த ஒரு நிறுவனமும் தனது ஊழியர்களுக்குத் தர இயலாத ஒன்று.

தற்காப்பு நடவடிக்கை

இந்த சூழ்நிலையில், ஒவ்வொரு வரும் தமக்கு பொருளாதார நெருக்கடி எதுவும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யோசிக்க வேண்டும். நமது குடும்பத்தின் எதிர்கால வளத்திற்கு நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தற்காப்பு சிந்தனையோடு இரண்டு விஷயங்களைச் செயல்படுத்த வேண் டும்.

முதல் விஷயம், சேமித்தலுக்கும் முதலீட்டிற்கும் முன்னுரிமை அளித்தல். இன்று பலரும் சேமிப்பு என்பதையே செலவுகள் போக எஞ்சியிருக்கும் பணம் என்றுதான் புரிந்து கொள்கிறார்கள். இந்த சிந்தனையே மாற வேண்டும்.

வாரன் பஃபெட் சொன்னது போல், ‘செலவுகள் போக மிச்சத்தை சேமிக்காதீர்கள்; சேமித்தது போக மிச்சத்தை செலவு செய்யுங்கள்’. அத்தியாவசிய செலவுகளுக்கு இந்த அறிவுரை பொருந்தாது என்றாலும், முடிந்த வரை அதிகம் சேமிக்க வேண்டும் என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ள இவ்வாக்கியம் உதவும்.

இந்தப் பகுதியின் தலைப்பே இதற்குச் சான்று. ‘முதல் செலவு’ என்ற இந்தப் பகுதியில் சேமிப்பு பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? சேமிப்பு என்பது நமது முதல் செலவாக இருக்க வேண்டும் என்பதல்லவா பொருள்?

`சேமிப்பு நமக்கு உழைக்க வேண்டும்’

இப்படிச் சேமிக்கப்பட்ட பணம் வங்கிக் கணக்கில் தூங்காமல் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதும் முக்கியமானது. அதாவது நமது சேமிப்பு நமக்காக உழைக்க வேண்டும்.

இதை இப்படிப் பார்க்கலாம் - நமது குடும்பத்தின் நிதி நிர்வாகத்திற்கு நாம் தானே முதலாளி? இது ஒரு சிறு நிறுவனம் போன்றது தானே? அப்படி இருக்கையில் உங்கள் சேமிப்பு என்பது உங்களது ஒரு பணியாளர் போல உங்களுக்காக உழைத்து உங்கள் வளத்தைப் பெருக்குவதே அப்பணியாளரின் வேலை.

இப்படி நிர்வாக மேலாண்மை ரீதியாக யோசித்தால் சில விஷயங்கள் சட்டென்று பிடிபடும். உங்கள் ஊழியர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் அல்லவா? அதே போல், உங்கள் சேமிப்பும் உங்களுக்காக சிறப்பாக உழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும்.

எப்படி முதலீடு செய்தால் சிறந்த லாபம் ஈட்டித் தர முடியுமோ அப்படிச் செய்ய வேண்டும். ஒரு ஊழியரை வருடத்திற்கு ஒரு முறை ‘அப்ரைசல்' செய்வது போல் முதலீடுகளையும் மேற்பார்வை மற்றும் மீளாய்வு செய்ய வேண்டும்.

சேமிக்கும் பழக்கம் வேண்டும்

இரண்டாவது விஷயம், இந்த சேமிப்பு/முதலீட்டுப் பழக்கத்தை வாழ்க் கையில் எவ்வளவு முன்னதாக முடியுமோ அவ்வளவு முன்னதாகத் தொடங்க வேண்டும். காரணம், ‘காம்பவுண்டிங்' எனப்படும் லாபத்தின் மேல் லாபம் சம்பாதிக்கும் முறை சிறப்பாக உங்களுக்காக செயல்படுவதற்கு அதுவே சிறந்த வழி.

அதாவது உங்கள் முதலீடு மட்டும் உங்களுக்கு உழைக்கவில்லை, உங்கள் முதலீடு ஈட்டும் லாபமும் உங்களுக்காக உழைக்கின்றது. இப்படி இருக்கையில், உங்கள் பணம் எத்தனை அதிக காலம் முதலீடாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பன்மடங்கு லாபம் சம்பாதிக்க வழி வகுக்கும்.

இதை ஒரு சிறு உதாரணம் மூலமாக எளிதில் புரிந்து கொள்ளலாம். ஒருவர் தனது இருபத்தி ஐந்தாவது வயதில் முதலீடு செய்யத் துவங்குகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்; இன்னொருவர் தனது முப்பதாவது வயதில் அதே போல் முதலீடுகளைத் துவங்குகிறார் எனக் கொள்ளுங்கள்.

இருவரும் ஒரே அளவு மாதாந்திர முதலீடு - மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் - செய்கிறார்கள் , சமமான விகிதத்தில் - 12% - லாபம் ஈட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். இருவரும் முப்பது வருடங்கள் (ஓய்வை நெருங்கும் வயது வரை) முதலீடு செய்தால், ஐந்தே வருடங்கள் முன்னதாகத் தொடங்கியவரின் முதலீட்டுக் கணக்கில் கடைசியாக ரூபாய் 64 லட்சமும், பின்னவர் கணக்கில் சுமார் ரூபாய் 35 லட்சமும் இருக்கும். அதாவது சுமார் 45% வித்தியாசம்!

இன்றே செய்

ஆதலால், நாம் எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக இந்த சேமிப்பு+முதலீடு என்ற பழக்கத்திற்குள் நுழைகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ‘நாளை செய்ய நினைப்பதை இன்றே செய்; இன்று செய்ய நினைப்பதை இப்பொழுதே’ என்ற கபீரின் வரிகள் தாம் இங்கு பொருந்தும். குறிப்பாக புதிதாக வேலை தொடங்கும் இளைஞர்கள் அவசியம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் இது.

ஏனெனில் அவர்கள் எந்த நிறுவனத்திற்காக உழைக்கிறார்களோ அந்த நிறுவனம் தனது எதிர்காலம் குறித்த அக்கறையில் என்னவாயினும் செய்யும். மாறாக, நமது குடும்ப நிதி வளம் என்பது நமது நிர்வாகத்திற்கு உட்பட்டது. அதை சரியாக நிர்வகிப்பது நமது கடமை. நமது எதிர்காலம் நமது பொறுப்பு.

உங்கள் ஊழியர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் அல்லவா? அதே போல், உங்கள் சேமிப்பும் உங்களுக்காக சிறப்பாக உழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும். எப்படி முதலீடு செய்தால் சிறந்த லாபம் ஈட்டித் தர முடியுமோ அப்படிச் செய்ய வேண்டும்.

srikanth@fundsindia.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்