சரியும் பெட்ரோல் விலை: நொறுங்கும் உலகப் பொருளாதாரம்

By இராம.சீனுவாசன்

நொறுங்கும் உலகப் பொருளாதாரம்

கடந்த இரண்டு மாதங்களாக உலக அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் குறைய ஆரம்பித்துள்ளதால் பொருளாதாரம் உயரவேண்டும் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பு. ஆனால் இந்த வீழ்ச்சி உலகப் பொருளாதாரத்தின் சிக்கல்களை நன்கு எடுத்துரைக்கிறது.

வீழும் பெட்ரோலிய பொருட்களின் விலைகள்

ஜூன் 18, 2014 அன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 114.25 டாலர் என்ற விலையிலிருந்து டிசம்பர் 29 அன்று 58.31 டாலராகக் குறைந்தது. இது ஆறு மாதத்தில் ஏற்பட்ட 50% விலை வீழ்ச்சி. உற்பத்திக்கான அடிப்படை பொருட்களில் ஒன்று பெட்ரோல். இதனின் விலை மட்டும் சரிகிறதா அல்லது மற்ற உள்ளீட்டுப் பொருட்களின் விலைகளும் சரிகிறதா என்பதைப் பார்க்கவேண்டும்.

இரும்பு கனிமத்தின் விலை கடந்த ஒரு வருடத்தில் 40% குறைந்துள்ளது. பல விவசாயப் பொருட்களின் விலைகள் உலக அளவில் குறையத் துவங்கியுள்ளன. அதே போல் எரிவாயு, நிலக்கரி, செம்பு, தங்கம் ஆகியவற்றின் விலைகளும் குறைகின்றன. இப்படி ஒட்டுமொத்தமாக எல்லா உள்ளீட்டு பொருட்களின் விலைகள் குறைவதற்கு என்ன காரணம்?

பொருளாதார தேக்க நிலை

உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதுதான் இப்போதைய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, இந்தியா தவிர வளர்ச்சிப் பாதையில் எந்த பொருளாதாரமும் இல்லை. கடந்த ஒரு ஆண்டில் சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது, அடுத்த ஆண்டும் இதே நிலைதான் இருக்கும்.

பெட்ரோல் விலை வீழ்ச்சியால் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளான மத்திய கிழக்கு நாடுகள், ரஷியா, வெனிசூலா, லிபியா போன்ற நாடுகளும் கடுமையான பொருளாதார பின்னடைவைச் சந்திக்கின்றன. உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் போது, உற்பத்திக்கான தேவை குறையும், அதனால் பெட்ரோல் போன்ற உள்ளீட்டுப் பொருட்களின் விலைகளும் குறையும். இதுதான் இப்போது நடந்ததாகத் தெரிகிறது. ஆனால் இது உண்மையின் ஒரு பக்கம் மட்டுமே.

ஷேல் பெட்ரோல்

உலக நிதி சிக்கல் ஏற்பட்ட 2007-08 ஆண்டுகளில் பெட்ரோல் விலை $150 (ஒரு பீப்பாய்) என்ற உச்ச நிலையை அடைந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் வட டோக்லாவில், கனடாவின் அல்பெர்டா எண்ணெய் வயலில் உள்ள பெட்ரோல் எடுக்க பெரிய முதலீடுகளை பல நிறுவனங்கள் செய்தன. 2010 பிறகு 20,000 எண்ணெய் கிணறுகள் துவங்கப்பட்டு இப்போது நாளொன்றுக்கு 9 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் எடுப்பதாக `தி எகனாமிஸ்ட்’ பத்திரிகை தெரிவிக்கிறது.

உலகின் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியாவைவிட இது 10 லட்சம் பீப்பாய்தான் குறைவு. இந்த ஷேல் பெட்ரோல் எடுப்பதற்கு சராசரியாக ஒரு பீப்பாய்க்கு 55 டாலர் ஆகும் என்றும், இதுவே வரும் காலங்களில் புதிய தொழில்நுட்பம் வரும்போது மேலும் குறையும் என்றும் சிலர் கூறுகின்றனர். இதனால் உலகில் பெட்ரோல் உற்பத்தி பெருக அதனின் விலை வீழ்ச்சி அடைந்தது.

ஒபெக்-கின் கணக்கு

மத்திய கிழக்கு நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) கடந்த மாதம் பெட்ரோல் விலையை நிலைப்படுத்த தனது உற்பத்தியைக் குறைத்துக்கொள்ளும் என்று நினைத்தோம். ஆனால் சவுதி அரேபியா பெட்ரோல் உற்பத்தியை குறைக்கவேண்டாம், இன்னும் சில காலம் பெட்ரோல் விலை வீழ்ச்சி அடைந்தால் ஷேல் நிறுவனங்கள் மூடப்படும், அப்போது மீண்டும் விலை ஏறும் என்று கூறி உற்பத்தியைக் குறைக்கும் முடிவை நிறுத்தியது.

சவுதி அரேபியாவிற்கு பெட்ரோல் சந்தையில் தான் முதன்மை நாடாக இருப்பதை நிலைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் தன்னிடம் உள்ள அந்நிய செலாவணி கையிருப்பைக் கொண்டு இன்னும் சில காலம் தாக்குப்பிடிக்கலாம் என்பது அதனின் கணக்கு. ஆனால் ரஷியா உட்பட பல பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இந்த விலை சரிவால் பெரிய பொருளாதார சிக்கலில் உள்ளன. இந்த விலை குறைவால் சில ஷேல் நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் சரியத்துவங்கியுள்ளது. ஆனால் இது தொடருமா என்பது தெரியவில்லை.

உலகப் பொருளாதாரம்

பெட்ரோல் விலை சரிவினால் உலகப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டைன் லெகார்ட் கூறுகிறார். பெட்ரோல் விலை குறைய பணவீக்கம் குறையும். எனவே மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கும், இதனால் முதலீடு தேவை அதிகரித்து உற்பத்தி உயரும் என்பது ஒரு கணக்கு.

மேலும் பெட்ரோல் விலை குறைந்தால் மாற்று எரிசக்தியை பயன் படுத்துவதும், அதற்கான தொழில்நுட்ப முதலீடுகள் குறையும். அதே நேரத்தில் மக்கள் அதிகமாக பெட்ரோலை பயன்படுத்த புவி வெப்பம் அடைதல் அதிகரிக்கும், பருவநிலை மாறும், வரும் காலங்களில் சுற்று சூழல் பாதிப்படையும் என்பதும் மற்றுமொரு மதிப்பீடு.

இந்தியாவில்...

கச்சா எண்ணெய் விலைபாதியாகக் குறைந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை பாதியாகக் குறைய வில்லை. மத்திய அரசு இரண்டு முறை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிகரித்தது. நவம்பர் 12 அன்று பெட்ரோல் டீசலுக்கு லிட்டருக்கு ரூ 1.50-ம்; டிசம்பர் 2 அன்று பெட்ரோலுக்கு ரூ 2.25 மற்றும் டீசலுக்கு ரூ.1 கலால் வரி உயர்த்தப்பட்டது.

அதேபோல் ஜனவரி 2 அன்றுகூட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரித்தது. இதனால் இவற்றின் விலைகள் ஏறவில்லை, அரசுக்கு கூடுதலாக வரி வருவாய் ரூ.10,000 கோடிக்கு மேல் வரும். மாறாக இந்த கூடுதல் வரி இல்லாமல் இருந் திருந்தால் பெட்ரோல் டீசலின் விலைகள் மேலும் குறைந்திருக்கும். அதே போல் பெட்ரோல் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய மானியத்தொகையும் குறைந்துள்ளது. இவ்வாறு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அரசுக்கு சாதகமாக உள்ளது.

உலகப் பொருளாதாரம் வளரும்போது எண்ணெய் தேவை அதிகரிக்கும். ஷேல் எண்ணெய் உற்பத்தி குறையும் போதும் எண்ணெய் விலை அதிகரிக்கும். பெட்ரோல் சந்தையின் எதிர்கால ஜோசியம் யாருக்கு தெரியும்?

இராம.சீனுவாசன்

seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

39 mins ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்