இந்தியாவில் தொழில் உற்பத்தி துறையை (Manufacturing Sector) மீண்டும் வளர்த்தெடுக்க தொழிலாளர் சட்டங்களை சீரமைக்கவேண்டும், தொழில் துறைக்கு எளிதில் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கவும், வேலையிலிருந்து எடுக்கவும் வகை செய்யும் திருத்தங்களை செய்ய மத்திய, மாநில அரசுகள் செய்யத் துவங்கியுள்ளன. பிரதமர் சூளுரைக்கும் ‘Make in India’ என்ற மந்திரத்தின்படி உலகத்திற்கான ஒரு தொழில் உற்பத்தி தேசமாக இந்தியாவை மாற்ற இந்த வகை தொழிலாளர் சட்ட சீரமைப்பு தேவையா?
தொழிலாளர் சட்ட சீரமைப்பு
மத்திய மாநில அரசுகளின் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர் சட்டங்கள் இருந்தாலும், Industrial Disputes Act, 1947 (IDA) அதிக சர்ச்சைக்கு உள்ளானது. இச்சட்டத்தின்படி 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ள நிறுவனத்தில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் நிரந்தர தொழிலாளர்களை வேலையிலிருந்து எடுக்கமுடியாது.
தொழிலாளர் சங்கம் முதல் எல்லாமே தொழில் உற்பத்தி துறையின் வளர்ச்சியை பாதிப்பதாக கூறுகின்றனர். இதனால்தான் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை உற்பத்தித் துறையில் அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர். மற்ற துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1991-ல் தொடங்கிய பொருளாதார சீர்திருத்தம் தொழிலாளர் சட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் தொழில் துறையில் உற்பத்தி பெருக்கமும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் போதும் அதனை ஒப்பந்த தொழிலாளர் கொண்டே சமாளித்து வருகிறோம்.
சந்தை மாற்றத்திற்கு ஏற்ப தொழில் நிறுவனத்தின் உற்பத்தி மாறும்போது, தொழிலாளர்களை மட்டும் நிரந்தரமாக வைத்துக்கொள்ளமுடியாது, எனவே ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சேவைத் துறையிலும் இன்று அதிகமாக உள்ள BPO முதல் IT வரை எல்லா துறைகளிலும் முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்கள் தான்.
IDA படி 100 தொழிலாளர்களுக்கும் மேல் உள்ள தொழில் நிறுவனத்தில் தான் நிரந்தர தொழிலாளியை வேலையை விட்டு நீக்க மாநில அரசின் ஒப்புதல் வேண்டும், இதன் அளவை 300 தொழிலாளர்கள் என்று கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநில அரசு சட்ட திருத்தம் செய்தது. இதனால் தொழிலாளர்களை வேலைக்கு வைப்பதும், எடுப்பதும் பெரிய நிறுவனங்களுக்குகூட எளிதாகிவிட்டது. இதனால் தொழில் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு பெருகும் என்பது எதிர்பார்ப்பு.
ஒரு நிறுவனத்தில் தொழில் சங்கம் துவங்க அந்நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களில் 15% பேர் உறுப்பினர்களாக இருந்தால் போதும் என்ற விதியை கடுமையாக்கி, 30% தொழிலாளர்கள் இருந்தால்தான் சங்கம் துவங்க முடியும் என்று ராஜஸ்தான் அரசு சட்ட திருத்தம் செய்துள்ளது. அதே போல் தொழில் பயில்வோர் (Apprenticeship Act) சட்டத்தை எளிமையாக்கியுள்ளது. இவற்றினால் தொழில் சங்கங்களின் ஆதிக்கம் குறைவதும், தொழிலாளர்களுக்கான திறன் அதிகரிப்பது ஊக்குவிக்கப்படும் என்பது கருத்து.
இது போன்ற தொழிலாளர் சட்ட திருத்தங்களை மற்ற மாநில அரசுகளும் விரைவில் செய்ய முயலும். மத்திய அரசும் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பை குறைப்பதற்கும் வேறு பல மாற்றங்களுக்கும், சட்டதிருத்தங்களை செய்ய முனைந்துள்ளது.
தொழிலாளர் சட்ட திருத்தங்களின் தாக்கம்
தொழிலாளர் சட்டங்களை கடுமையாக செயல்படுத்தாத மாநிலங்களில் முறை சார்ந்த உற்பத்தியும் (organized manufacturing) அதிக தொழிலாளர்கள் கொண்ட பெரிய தொழில் (labour-intensive big firms) நிறுவனங்கள் வளர்ந்துள்ளதாகவும்; தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக உள்ள மாநிலங்களில் தொழிலாளர்-மையமாக உள்ள உற்பத்தி நிறுவனங்கள்கூட வளரவில்லை என்றும், முறை சாராத சிறிய தொழில் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன என்றும் சில ஆராய்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டின் மொத்த உற்பத்தியில்கூட தொழிலாளர்-மைய உற்பத்தி குறைந்து, நவீன தொழில்நுட்பமும், அதிக இயந்திரங்களை பயன்படுத்தும் தொழில்களின் உற்பத்தியும் உயர்ந்துள்ளது. மேலும் தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக இல்லாத மாநிலங்களில் தொழிலாளர் உற்பத்தி உயர்ந்துள்ளது என்பதும் ஒரு ஆராய்ச்சியின் வெளிப்பாடு.
இவற்றிற்கெல்லாம் எதிர்மறையான ஆராய்ச்சி முடிவுகளும் உண்டு. 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தால் கடுமையான தொழிலாளர் சட்டங்களை எதிர்கொள்ளவேண்டும், எனவே சிறிய தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஜவுளித் துறையின் கீழ் 10 தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் அதிகம். இவை 90 தொழிலாளர் வரை நிறுவனத்தை பெரிதாக்க முடியும்.
ஆனால் போதுமான கடன் வசதி இல்லாமலும், துணிகளை சந்தைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களும், கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதும், என்ற பல காரணங்களை இந்த தொழில் வளர்ச்சிக்கான தடை கற்களாக உள்ளன என்பதை சுட்டிக்காட்ட முடியும். அதேபோல் தொழில் வளர்ச்சிக் குறைவாக உள்ள மாநிலங்களில் கடுமையான தொழிலாளர் சட்டங்கள் ஒரு காரணமாக இருந்தாலும் அது மட்டுமே ஒரே ஒரு காரணமாக இருக்க முடியாது. அம்மாநிலங்களில் பலதுறைகளில் அரசின் மெத்தன போக்கும், திறமையின்மையும் கூட பிரதான காரணங்கள் என்பதை மறுக்கமுடியாது.
பல தருணங்களில் மத்திய மாநில அரசுகளும் தொழிலாளர் சட்டங்களை சரிவர அமல்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு. அதன்படி, தொழிலாளர் சட்டங்கள் சரிவர செயல்படாத இடங்களில் அல்லது துறைகளில் உற்பத்தி பெருகியிருப்பதாக எந்த ஆராய்சியும் கூறவில்லை. தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக இருந்திருந்தால் 2007-ல் துவங்கிய பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து பல லட்சம் தொழிலாளர்கள் எப்படி வேலையை இழந்திருக்க முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது.
தொழிலாளர் சட்டங்களை திறமையாக செயல்படுத்தி, தொழிலாளர் திறமையை ஊக்குவிக்கும் சூழல் மட்டுமே தொழில் துறை வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைக்கும். அதே நேரத்தில் தொழிலாளர் பாதுகாப்பு, தொழிலாளர் திறன் வளர்ச்சிக்கான வாய்ப்பு, தொழில் முனைவுக்கான பொருளாதார சூழல் என்ற பல முனைகளில் நாம் செயல்பட்டால் மட்டுமே தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தமுடியும்.
தொடர்புக்கு: seenu242@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
38 mins ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago