அதிகரிக்கும் அந்நிய முதலீடு!

By செய்திப்பிரிவு

வணிக செய்தியாளர்களுக்கு `இன்று என்ன தலைப்பு கொடுப்பது’ என்று தலைப்புக்கு பஞ்சம் ஏற்படும் அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகள் அடிக்கடி புதிய உச்சத்தைத் தொட்டன. குறிப்பாக மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு பங்குச்சந்தையின் ஏற்றம் அதிகமாக இருந்தது. உபயம்- அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்.

இந்தியாவில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டதிலிருந்து அதிகபட்ச அந்நிய முதலீடு நடப்பு 2014-ம் ஆண்டில்தான். இத்தனைக்கும் 2014-ம் ஆண்டு முடிவதற்கு இன்னும் ஒரு மாதம் முழுவதுமாக இருக்கிறது. நடப்பாண்டில் இதுவரை அந்நிய நிறுவன முதலீடு 3,966 கோடி டாலர் அளவுக்கு (நவம்பர் 24 வரை) இருக்கிறது.

இதற்கு முன்பாக 2010-ம் ஆண்டு 3,945 கோடி டாலர் வந்ததே அதிகபட்ச முதலீடாக இருக்கிறது. இதில் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு 1,553 கோடி டாலரும், இந்திய கடன் சந்தையில் 2,413 கோடி டாலர் முதலீடும் வந்திருக்கிறது. இந்த உயர்வுக்கு இந்திய ரூபாயின் நிலையான தன்மையும் ஒரு காரணமாகும். வளர்ந்து வரும் முக்கிய நாடுகளின் நாணயங்கள் 4 சதவீத அளவுக்கு சரிய டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரிதாக சரியவில்லை.

கடன் சந்தை முதலீடு

இந்திய அரசு பத்திரங்களில் 10 ஆண்டு வருமானம் 8.15 சதவீதமாக இருக்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது நீண்ட காலத்தில் ஸ்திரமாக இருப்பதால் முதலீடு அதிகமாக இருக்கிறது. அதிகரிக்கும் இந்த முதலீடு காரணமாக இன்னொரு சிக்கல் உருவாகி இருக்கிறது.

அதாவது இந்திய அரசாங்க பத்திரங்களில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 2,500 கோடி டாலர் மட்டுமே முதலீடு செய்ய முடியும். கிட்டத்தட்ட இந்த அளவை தொட்டுவிட்டதால், மறைமுகமாக கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

பங்குச்சந்தை முதலீடு

அந்நிய முதலீடு காரணமாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த ஒரு வருடத்தில் 33.9 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆசியாவின் மற்ற முக்கிய சந்தைகளுடன் ஒப்பிடும்போது சென்செக்ஸ் வருமானம் அதிகமாக இருக்கிறது. மேலும் பல முக்கியமான பங்குகளில் அந்நிய முதலீடும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

காரணம் என்ன?

புதிய அரசு பொறுப்பேற்றவுடன் செய்துவரும் சீர்த்திருத்த நடவடிக்கைகள் அந்நிய முதலீடு அதிகரிக்க முக்கிய காரணமாகும். தவிர சர்வதேச அளவில் அதிகரித்துவரும் பணப்புழக்கமும் ஒரு காரணம். அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமான கடந்த சில ஆண்டுகளாகவே ஊக்க நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டன. இந்த ஊக்க நடவடிக்களை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில்தான் அமெரிக்க மத்திய வங்கி நிறுத்தியது. ஆனாலும் மற்ற நாடுகள் ஊக்க நடவடிக்கைகளை தொடர்ந்தன.

அமெரிக்க ஊக்க நடவடிக்கைகளை நிறுத்திய சில நாட்களில் ஜப்பான் தனது ஊக்க நடவடிக்கைகளை ஆரம்பித்தது. பொருளாதாரத்தை பலப்படுத்தவும் பணவாட்டத்திலிருந்து தப்பிக்கவும் ஊக்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்போவதாக ஜப்பான் மத்திய வங்கி அறிவித்தது. ஜப்பான் மத்திய வங்கி ஊக்க நடவடிக்கைகளை அறிவித்த அன்று ஜப்பானின் முக்கிய சந்தையான நிக்கி 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது.

இதேபோல ஐரோப்பிய யூனியனிலும் மிக குறைந்த பணவீக்கமே நிலவுகிறது. பணவீக்கத்தை அதிகரிக்க மேலும் ஊக்க நடவடிக்கைகள் வழங்கப்படும் என்று நவம்பர் மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ திராகி தெரிவித்தார். சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணப்புழக்கம் காரணமாக அந்நிய முதலீடு அதிகரித்தது.

எதிர்காலம் எப்படி?

இதுவரை அந்நிய முதலீடு நன்றாக இருக்கிறது என்பதற்காக இனிமேலும் அந்நிய முதலீடு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. வரும் காலத்தில் அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே இருக்கும். இதுவரை இந்தியாவுக்கு வந்த முதலீட்டில் கடன் சார்ந்த முதலீடுதான் அதிகம். ஒரு வேளை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் பட்சத்தில் கடன் சந்தையில் இருக்கும் அந்நிய முதலீடு பங்குச்சந்தைக்கு மாறலாம், அல்லது புதிய முதலீடு வரலாம். அதேபோல வரும் காலத்தில் நேரடி வரி விதிப்பு, சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது மற்றும் மற்ற கொள்கை முடிவுகளை அரசு எப்படி எடுக்கிறது என்பதை பொறுத்து அந்நிய முதலீடு இருக்கும்.

அந்நிய முதலீடு பங்குச்சந்தையில் ஏற்றத்தை கொடுத்தாலும், முதலீடு வெளியேறும் போது பங்குச்சந்தைகள் சரியும். இதைவிட அந்நிய முதலீட்டை வெளியே எடுக்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரியவும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மரத்தடி முதல் வால் ஸ்ட்ரீட் வரை

மிகவும் பழமையான பங்குச்சந்தை லண்டன் பங்குச்சந்தையாகும். 1698-ம் ஆண்டு எல்.எஸ்.இ. ஆரம்பிக்கப்பட்டது. 200 வருடங்களுக்கு முன்பு (1792) முன்பு நியூயார்க் நகரின் மரத்தடியில் 24 நபர்களுடன் பங்குவர்த்தகம் தொடங்கியது. இப்போது அந்த இடத்தின் முகவரி 68 வால் ஸ்ட்ரீட். இதே போல இந்தியாவிலும் 22 பங்குத்தரகர்கள் 1850களின் மத்தியில் ஆலமரத்தில் பங்குவர்த்தகம் செய்திருக்கிறார்கள். 1875-ம் ஆண்டு முறையாக பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

1994-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய பங்குச்சந்தை (என்.எஸ்.இ.) ஆரம்பிக்கப்பட்டது. ஒரே வருடத்தில் பி.எஸ்.இ.யின் வர்த்தகத்தை தாண்டியது என்.எஸ்.இ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்