திருக்குறளில் பங்குச்சந்தை முதலீடு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் ஒரு குறளிலும் வள்ளுவர் கையாளும் உவமை ஒன்று முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளது. ஒரு அமைச்சர் தனது மன்னரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கு, “அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்” என்று அமைச்சியல் அதிகாரத்தில் ஒரு குறள் சொல்கிறது.
அதாவது அமைச்சர் மன்னருடன் பழகுவது நெருப்புடன் பழகுவதற்கு ஒப்பானது என்கிறார் வள்ளுவர். ஒருவர் நெருப்பிடமிருந்து மிகவும் விலகி இருந்தால் குளிரும்; மிகவும் நெருக்கமாகச் சென்றால் சுட்டு விடும். ஆகையால், ஒரு இடைப்பட்ட அண்மையில் இருப்பதே சிறந்தது. அது போலத் தான் ஒரு மன்னனிடம் அமைச்சர் பழக வேண்டும் என்பது குறளின் கருத்து.
இதற்கும் பங்குச்சந்தை முதலீட்டிற்கும் பொருத்தம் உள்ளதா? உள்ளது! ஒரு வகையில் பார்த்தால் பங்குச் சந்தை என்பது ஒரு வசீகரிக்கும் நெருப்பு போல. அதில் முதலீடே செய்யாமல் விலகி இருந்தால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. அதே சமயத்தில், அளவு கடந்த ஆர்வத்தோடு உள்ளே நுழைந்து விளையாடுவதும் ஆபத்தானது. இரண்டுக்கும் இடைப்பட்ட தொலைவில் இருப்பதே நல்லது.
இரண்டு வழி
எனது அனுபவத்தில் இந்த இரண்டு வகை மனிதர்களையும் நிறைய பார்த்திருக்கிறேன். ஒன்று, ‘அதெல்லாம் வெறும் சூதாட்டம் சார், நமக்கெதுக்கு’ என்று ஒதுங்கி இருப்பவர்கள்; இன்னொன்று, ‘நமக்கு அது சரி வரல சார், ஒரு தடவை போய் நல்லா கைய சுட்டுக்கிட்டேன், போதும்னு வெளிய வந்துட்டேன்’ என்று சொல்பவர்கள்.
இந்த இரு தரப்பு மனிதர்களையும் பங்குச் சந்தைக்கு ஒரு ‘இடைப்பட்ட அண்மை’க்குக் கொண்டு வருவதே முக்கியமான பணி. ஒதுங்கி இருப்பதன் அபாயத்தை முன்னவர்களுக்கு உணர்த்த வேண்டும்; பின்னவர்களுக்கு சந்தையில் பங்கெடுக்க சரியான வழியைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.
அதென்ன ‘சரியான வழி’? எப்படி அது நமக்குப் பங்குச்சந்தையின் ஆபத்துகளை குறைத்து, அதன் ஆதாயங்களைக் கொடுக்கும்? பரஸ்பர நிதி அல்லது மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் கூட்டு முதலீட்டு முறைதான் இந்த சிறப்பான வழி. இந்த வழியில் பல சிறப்புகள் இருந்தாலும், இரண்டு முக்கியமான விஷயங்கள் இம்முறையை ஒரு சாதாரண முதலீட்டாளருக்கு ‘நேரடி’ பங்குச் சந்தை முதலீட்டினை விட சிறப்பான முறையாக ஆக்குகின்றன.
கேள்விகள்
முதல் விஷயம், பங்குத்தேர்வு. பங்குச்சந்தையில் நுழைய எத்தனிக்கும் எந்த முதலீட்டாளரும் எதிர்கொள்ளும் முதல் பிரச்னை இது. ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு இருக்கையில் எதை வாங்குவது? எப்பொழுது வாங்குவது? எப்பொழுது விற்பது? என்ன விலையில்? இது போன்ற கேள்விகள் ஒரு சாமானிய முதலீட்டாளரால் எளிதில் பதில் காண முடியாத கேள்விகள்.
‘இது நல்ல ஸ்டாக், உடனே வாங்குங்க’ என்று யாராவது சொல்வதைக் கேட்டு வாங்கி விட்டு, என்ன செய்வது என்று தெரியாமல் தினமும் அதன் மதிப்பைப் பார்த்து விற்கலாமா, கூடாதா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் தான் அதிகம். அப்படியே ஓரிரு முறை லாபம் கண்டு விட்டாலும், அதே மாதிரி பல வருடங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது மிகமிகக் கடினம்.
மியூச்சுவல் ஃபண்ட்
மாறாக பரஸ்பர நிதி என்று வரும் பொழுது ஒரு முதலீட்டாளர் தனது பணத்தினை ஒரு ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் அதை ஒரு கைதேர்ந்த நிதி மேலண்மை நிபுணரிடம் கொடுத்து விடுகிறார். அவரது முழுநேர வேலையே நிதி நிர்வாகம் தான். மேலும் அவருக்கு பங்குகளை ஆராய்ச்சி செய்து ஆலோசனை கூற ஒரு குழுவே இருக்கும்.
உலக சந்தைகளின் நிலவரம், பணப்புழக்க நிலை, அரசாங்கக் கொள்கை நிலைப்பாடுகள், நிறுவனங் களின் மேலாண்மைத் திறன்கள், ஏற்றுமதி/இறக்குமதி நிலவரம், பணவீக்கத்தின் திசை என ஏராளமான விஷயங்களை ஒவ்வொரு தினமும் ஆராய்ந்து சரியான துறைகளில், சரியான பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீட்டு வர்த்தகம் செய்வது என்பது இது போன்ற ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பிற்கே சாத்தியம்.
நீண்ட கால திட்டமிடல்
இரண்டாவது நன்மை, பரவலாக முதலீடு செய்ய முடிதல் (diversification). ஒரு சாமானிய தனி முதலீட்டாளர் தனது சேமிப்பினைக் கொண்டு அதிகபட்சம் ஒரு ஐந்து முதல் பத்து நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய முடியும். அதுவும் கூட அவ்வப்பொழுது மட்டுமே. மாதம் ஒரு ஐயாயிரம் ரூபாய் முதலிடு செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு பரவலாக பல பங்குகளில் முதலீடு செய்வது என்பது அசாத்தியமான விஷயம்.
ஆனால் ஒரு பரஸ்பர நிதி என்பது பல்லாயிரம் பேர்களின் முதலீடுகளைக் கூட்டி முதலீடு செய்வதனால், ஒரே சமயத்தில் பல நூறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய முடியும். மாதத்திற்கு ஒருவர் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் கூடப் போதும், அந்த ஃபண்டு பங்கெடுக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அந்த முதலீட்டிலிருந்து ஒரு துளி போய் சேர்ந்து விடும்; அதன் பயன் முதலீட்டாளருக்கு வந்து விடும்.
இப்படிப் பரவலாக்குவதால் ஒரு முதலீட்டாளருக்குக் கிடைக்கும் முக்கியமான ஆதாயம், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் இருக்கும் ஆபத்து (ரிஸ்க்) குறைவது. தனி முதலீட்டாளர்களின் நேரடி முதலீடுகளினால் இந்த வகையில் ஆபத்தைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.
ஆகையால், சந்தையில் நேரடியாகப் பங்கெடுக்காமல், இவ்வாறு பரஸ்பர நிதிகளின் மூலமாகச் செல்வதில், ஆதாயங்களில் பெரும் பகுதியும், ஆபத்தில் சிறு பகுதியும் முதலீட்டாளரைச் சென்றடைகிறது. திட்டமிட்ட நீண்ட கால முதலீடுகளுக்கு உலகெங்கும் பேணப்படும் இந்த முறையை விடச் சிறந்த முறை வேறொன்றில்லை.
ஒரு பரஸ்பர நிதி என்பது பல்லாயிரம் பேர்களின் முதலீடுகளைக் கூட்டி முதலீடு செய்வதனால், ஒரே சமயத்தில் பல நூறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய முடியும். மாதத்திற்கு ஒருவர் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் கூடப் போதும், அந்த ஃபண்டு பங்கெடுக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அந்த முதலீட்டிலிருந்து ஒரு துளி போய் சேர்ந்து விடும்.
ஸ்ரீகாந்த் மீனாட்சி
srikanth@fundsindia.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago