பன்முக பயன்பாட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட் கார்டு!

By இராம.சீனுவாசன்

அரசின் சேவைகளை துரிதமாகவும் சிறப்பாகவும் செய்யவேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அரசின் பல சேவைகளில் ஒன்று DCT (Direct Cash Transfer). முதியோர் ஓய்வுதியம், மாணவர்களின் படிப்பு ஊக்கத்தொகை (Scholarship), கிராம வேலைவாய்ப்பு ஊதியம், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உதவித் தொகை எனப்பல திட்டங்களில் அரசு மக்களுக்கு DCT செய்கிறது.

இவ்வாறான தொகைகளை பெற பயனாளிகள் அரசு அலுவலகத்திற்கு வரவேண்டும் அல்லது தபால் துறை பண மாற்று (postal money order) முறையைப் பயன்படுத்தவேண்டும். இவை இரண்டிலும் பயனாளிகளுக்கு முழு பணத் தொகை சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முந்தைய ஆந்திர அரசு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த முயற்சியின் சாதக பாதங்களை ஆராய அமெரிக்காவின் மூன்று பொருளியல் வல்லுனர்கள் முன்வந்தனர். (Muralidharan, K, P Niehaus and S Sukhtankar (2014), ‘Building state capacity: Evidence from biometric smartcards in India’, Working Paper No. 19999, National Bureau of Economic Research, USA)

ஒரு சில மண்டலங்களில் ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட்டது, அதற்கு பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் மற்ற மண்டலங்களில் ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட்டன. ஸ்மார்ட் கார்டுகள் பெற்ற மண்டலங்களின் மக்களுடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட் கார்டுகள் பெறாத மண்டலங்களிள் மக்கள் குறைவாகவே DCT-யின் பயன்பாட்டை அடைந்துள்ளதாக 1.9 கோடி மக்களிடம் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

ஸ்மார்ட் கார்டு பெறாத மண்டலங்களை ஒப்பிடும்போது, ஸ்மார்ட் கார்டு பெற்ற மண்டலங்களில் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலைக்கும் ஊதியம் பெறும் நாளுக்கும் உள்ள இடைவெளி 29% குறைந்தும், 39% அதிக நிலைத் தன்மையுடன் கூலியைப் பெற்றனர்.

இரு மண்டலங்களில் இந்த திட்டத்தின் செலவுகள் ஒன்றாக இருக்க, ஸ்மார்ட் கார்டு உள்ள மண்டலங்களில் மக்களின் கூலித் தொகை ஒரு வாரத்திற்கு 24% அதிகமாகவும், திட்டத்தொகை விரையமாவது 3௦.8% இருந்து 10.8%ஆக குறைந்தது.

இதே போல் ஸ்மார்ட் கார்டு உள்ள மண்டலங்களில் 5% பயனாளிகளுக்குக் கூடுதலாக முதியோர் ஓய்வூதியம் சென்று அடைந்தது. இது மட்டுமல்லாமல் இத்திட்டத்தில் பணம் விரையமாவது 49% குறைந்தது. நூறுநாள் வேலை திட்டம், முதியோர் ஓய்வூதியம் ஆகிய திட்டங்களில் உள்ளவர்களில், ஸ்மார்ட் கார்டு பெற்ற பயனாளிகள் இந்த ஸ்மார்ட் கார்டு தங்களின் பயன்பாட்டை உயர்த்தியுள்ளதாக தெரிவித்தனர்.

ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட மண்டலங்களில் 5௦% பயனாளிகளுக்குத்தான் ஸ்மார்ட் கார்டுகள் கொடுக்கமுடிந்தது. அதே மண்டலங்களில் மற்ற பயனாளிகள் எப்போதும் போல பழைய முறைப்படி பயன்பாட்டை அடையலாம் என்ற முறையும் இருந்தது. இந்த இரண்டு வருடங்களில் ஸ்மார்ட் கார்டு வழங்க செய்யப்பட்ட செலவைவிட அதனால் ஏற்பட்ட கூடுதல் பயனின் ரூபாய் மதிப்பு அதிகம். எனவே DCT போன்ற திட்டங்களில் ஆதார் கார்டு போன்ற முறையை பயன்படுத்தி வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவது பலவழிகளில் சிறப்பாக இருக்கும் என்று இந்த ஆய்வு முடிக்கிறது.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தினால் தாங்கள் ஆதாயம் அடைவது குறையும் அரசு அமைப்பில் உள்ளவர்கள் இதன் செயல்பாடுகளை நிறுத்த முயல்வது இயற்கை. அதனையும் மீறித்தான் ஆதார் போன்ற ஸ்மார்ட் கார்டு திட்டங்களை செயல்படுத்தவேண்டும். எல்லா இடங்களிலும் வங்கி அமைப்புகளை உருவாக்குவதும் ஒரு சவாலாக இருக்கும். ஆனால் வங்கிகள் உள்ள நகரங்களில் கிராமங்களில் இதனை உடனடியாக அமல்படுத்தி அதே நேரத்தில் மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தவேண்டும்.

ஆதார் கார்டு வழங்கும் திட்டத்தை ஒரே ஆட்சி காலத்தில் செயல்படுத்த முடியாது. இந்திய போன்ற நாடுகளில் அதிக ஆண்டுகளாகும். அமெரிக்காவில் இது போன்ற திட்டங்களை ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கு மாற்ற 15 வருடங்கள் ஆனதாகத் தெரிகிறது. இன்று 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதுபோன்ற ஸ்மார்ட் கார்டுகள் மூலம் DCT நடைபெறுகிறது.

ஸ்மார்ட் கார்டுகள் Bio-metric முறைப்படி தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள், இது ஒருவரின் கை ரேகை போன்ற மனித உடலின் அடையாளங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது, ஸ்மார்ட் கார்டை பயன்படுத்த படிப்பறிவு தேவை இல்லை. ஒருவரின் கை ரேகையும் அவரின் ஸ்மார்ட் கார்டில் உள்ள கை ரேகையும் ஒன்றாக உள்ளதா என்பதை எளிதில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

இப்போது உள்ள அடையாள அட்டைகளில் ஒருவரின் புகைப்படம் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இவ்வாறான அடையாள அட்டையை எளிதில் மறுபிரதி எடுத்து அதில் உள்ள விவரங்களை மாற்றலாம். ஆனால் bio-metric ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள விவரங்களை மாற்றி எடுக்க முடியாது. மேலும் ஒருவரே இரண்டு இடங்களில் இவ்வாறான அடையாள அட்டைகளை எடுத்தாலும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஸ்மார்ட் கார்டுகளை எங்கெல்லாம் பயன்படுத்துகிறோமோ அங்குள்ள விவரங்கள் அனைத்தும் ஒரு கம்ப்யூட்டரில் பதிவாகிவிடும்.

ஸ்மார்ட் கார்டுகளில் மற்ற அட்டைகளில் உள்ள விவரங்களையும் சேமிக்க முடியும். உதாரணமாக வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு), ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம் என்ற பலவற்றையும் இதில் சேர்க்கமுடியும். எனவே பல அட்டைகளுக்கு பதிலாக இந்த ஒரு அட்டையே எல்லா வேலைகளையும் செய்யும். இதில் உள்ள தொழிநுட்ப பிரச்சனைகளை அறிவியல் உலகம் சாமாளித்து வருகிறது. எப்படி இருந்தாலும் புகைப்பட அடையாள அட்டையை விட ஸ்மார்ட் கார்டு சிறந்தது.

- seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்