பேமென்ட் வங்கிகள் எதற்கு?

அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்க வேண்டும் என்ப தற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஜன் தன் யோஜனா மூலம் சில கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டன.

கிராமப்புறங்களுக்கு வங்கிச் சேவையை கொண்டு சேர்ப்பது எப்படி என்பதற்காக ரிசர்வ் வங்கியின் தற்போதைய துணை கவர்னர் நசிகேஷ் மோர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் பேமென்ட் வங்கிகள் மற்றும் சிறிய வங்கிகளை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் படி கடந்த ஜூலை 17-ம் தேதி பேமென்ட் வங்கிகளுக்கான வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் மற்றும் வங்கித்துறை வல்லுநர்களின் கருத்தை கேட்டறிந்த பிறகு நவம்பர் 27-ம் தேதி இறுதி விதிமுறைகளை அறிவித்தது. பேமென்ட் வங்கிகள் யாருக்கு, எதற்காக, அவை கொடுக்கும் சலுகைகள் ஆகியவற்றை பார்ப்போம்.

யார் ஆரம்பிக்கலாம்?

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மொபைல் நிறுவனங்கள், சூப்பர் மார்கெட் நிறுவனங்கள், சாதாரண நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை ஆரம்பிக்க முடியும். பொதுத்துறை நிறுவனம் பேமென்ட் வங்கி ஆரம்பிக்க முடிவு செய்தால் அரசிடம் முறையான அனுமதி வாங்கவேண்டும். மேலும் பேமென்ட் வங்கி ஆரம்பிக்க நினைக்கும் நிறுவனங்களின் குறைந்தபட்சம் கடந்த ஐந்து வருடங்களின் நிதி நிலைமை, பிஸினஸ் அனுபவம் ஆகியவை இருக்க வேண்டும்.

என்ன கிடைக்கும்?

சாதாரண வங்கிகளை போலவே இவை செயல்படும். சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு தொடங்கலாம். இவை தனியாக கிளைகள் அமைத்துக்கொள்ளலாம். ஏடிஎம் வைத்துக்கொள்ள முடியும். டெபிட் கார்டு வழங்கலாம். டெபாசிட் பெறலாம். இண்டர்நெட் சேவை கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து ரெமிட் டன்ஸ் பெறலாம். இதன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்துக்கொள்ளலாம். மியூச்சுவல் பண்ட், இன்ஷூரன்ஸ், பென்ஷன் திட்டங்களை இவை விற்க முடியும்.

ஆனால்! பேமென்ட் வங்கிகளால் கிரெடிட் கார்டு வழங்க முடியாது. டெபாசிட் வைக்க முடியுமே தவிர கடன் கொடுக்க முடியாது. மேலும் வங்கி அல்லாத நிதி நிறுவனம் செய்யும் மற்ற சேவைகளை செய்ய முடியாது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் வைக்க முடியாது. மேலும் வெளிநாட்டு இந்தியர்கள் இதில் கணக்கு தொடங்க முடியாது. மேலும் டெபாசிட்களுக்கு எவ்வளவு வட்டி என்பது குறித்தும் இன்னும் தெளிவான விவரங்கள் இல்லை. சாதாரண வங்கிகள் கடன் கொடுப்பதால், டெபாசிட்டுக்கு நல்ல வட்டி கொடுக்க முடியும்.

மேலும், இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் முதலீடு செய்யும் தொகையை வேறு இடங்களில் டெபாசிட் செய்து கிடைக்கும் தொகையை பேமென்ட் வங்கிகள் வட்டியாக வழங்கும். இது சாதாரண வங்கி கொடுக்கும் வட்டியை விட குறைவாக இருக்கும் என்பது பெரும்பாலான வங்கியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

பேமென்ட் வங்கி தொடங்க விரும்பும் நிறுவனங்கள் 2015 ஜனவரி 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அனுமதி கிடைத்த 18 மாதங்களுக்குள் பேமென்ட் வங்கியை தொடங்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

பேமென்ட் வங்கிகள் எதற்கு?

$ வங்கியின் பெயரில் பேமென்ட் பேங்க் என்று இருக்க வேண்டும்.

$ நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் டெபாசிட் வைக்கலாம்.

$ ஏடிஎம் கார்டு, இண்டர்நெட் பேங்கிங் வசதி உண்டு

$ ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் வைக்க முடியாது

$ கிரெடிட் கார்ட் வழங்க முடியாது. கடன் கொடுக்க முடியாது.

$ மியூச்சுவல் பண்ட், இன்ஷூரன்ஸ், பென்ஷன் திட்டஙக்ள் விற்க முடியும்.

$ என்.ஆர்.ஐ. இந்த வங்கியில் கணக்கு தொடங்க முடியாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE