அனைவருக்கும், எக்காலத்திலும் ஏற்ற முதலீடு!

By சொக்கலிங்கம் பழனியப்பன்

பல முதலீட்டாளர்களிடம் பணத்தை வாங்கி, அப்பணத்தை நிறுவனப் பங்குகளிலோ அல்லது வட்டியை ஈட்டித் தரும் கடன் பத்திரங்களிலோ அல்லது தங்கம் போன்ற உலோகங்களிலோ முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வருமானத்தை பகிர்ந்து கொடுப்பதுதான் மியூச்சுவல் ஃபண்டுகளின் அடிப்படை வேலை. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மிகவும் ஸ்திரத்தன்மையுடன் செயல்படுவதற்கான அமைப்பை நமது அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டு வாரியம் செபி (SEBI Securities and Exchange Board of India) ஆகும். இந்தியாவில் மிகவும் திறமையாகவும், துரிதமாகவும் செயல்படும் சில கட்டுப்பாட்டு வாரியங்களில் செபியும் ஒன்றாகும். செபியின் இரும்புப் பிடியில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இயங்குவதால், பொது மக்கள் முழு நம்பிக்கையுடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ரியல் எஸ்டேட்டின் விலையில், தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருப்பது போல மியூச்சுவல் ஃபண்டுகளின் விலையிலும் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதை பொது மக்கள் அறிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

ஆனால் இந்த ஏற்ற இறக்கம் எல்லாம் குறுகிய கால அடிப்படையில்தான். நீண்ட நாட்களில் பார்க்கும் பொழுது மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் கட்டாயம் லாபத்தைத்தான் தரும் மேலும் பிற முதலீடுகளைவிட உயரிய லாபத்தைத் தரும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பங்கு சார்ந்தவை, கடன் சார்ந்தவை, கலப்பினம் என மூன்று வகையாக பிரித்துக் கொள்ளலாம். இவை மூன்றில் சில்லரை முதலீட்டாளர்களிடம் மிகவும் பிரபலமானது பங்கு சார்ந்த திட்டங்கள்தான். ஏனென்றால், இவை தான் நீண்ட காலத்தில் அதீத வருமானத்தை முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது; கொடுத்துக் கொண் டிருக்கிறது; கொடுக்கவல்லது.

பங்கு சார்ந்த திட்டங்கள், தாங்கள் பொதுமக்களிடமிருந்து திரட்டும் பணத்தை முழுக்க முழுக்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்போஃஸிஸ், டாடா குழும நிறுவனங்கள், ஐசிஐசிஐ வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், பிர்லா குழும நிறுவனங்கள், மத்திய அரசாங்க நிறுவனங்கள் போன்ற பல தரமான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் உங்களின் வருமானம் எவ்வளவு ஏறியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் ஓய்வுபெற்றவர் என்றால், உங்களின் வருமானத்திற்கும் உங்கள் குழந்தைகளின் வருமானத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு வளமாக வாழ்கிறார்கள் என்பதையும், இந்தியா எவ்வளவு வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதையும், வெளிநாடு வாழ் இந்தியர்களும், வெளிநாட்டவரும் சரமாரியாக வந்து இந்தியாவில் வேலையில் சேருவதையும், தொழில் துவங்குவதையும் வைத்தே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்திய பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியினால், வெளிநாட்டில் கிடைக்கும் வேலைகளை உதறித் தள்ளுமளவிற்கு நமது இளைஞர்கள் இன்று வந்துவிட்டார்கள்.

இந்த வளர்ச்சியையெல்லாம் ஒருசேர நீங்கள் எங்கு காண முடியும்? பங்குச் சந்தையிலும், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும்தான். நம்மில் பலருக்கு நமது அன்றாட வேலைகளைப் பார்ப்பதற்கே போதுமான அவகாசம் இல்லை. பிறகு எங்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்வது? மேலும் 99% முதலீட்டாளர்கள் அவ்வாறு செய்யும் பொழுது கையைச் சுட்டுக் கொள்கிறார்கள்.

பங்குச் சந்தை பற்றி போதிய ஞானம் இல்லை, அறிந்து கொள்ள விருப்பமில்லை/ போதிய அவகாசம் இல்லை; ஆனால் பங்குச் சந்தை கொடுக்கும் உயரிய வருமானம் நீண்ட காலத்தில் வேண்டும் என நினைப்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் கனகச்சிதமாகப் பொருந்தும்.

முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் பல வகையான சொத்து/ முதலீட்டு வகைகளில் (நிலம், வீடு, தங்கம், வெள்ளி, பிக்ஸட் டெபாஸிட், பாண்டுகள்), முதலீட்டிற்கு மிகவும் சுலபமானது மியூச்சுவல் ஃபண்டுகள்தான். ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் நிலத்தில் முதலீடு செய்ய முடியாது, தங்க ஆபரணத்தில் முதலீடு செய்ய முடியாது, பிக்ஸட் டெபாஸிட்டில் போட முடியாது ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், முதலீட்டாளர்களின் பணத்தைத் திறம்பட முதலீடு செய்வதற்கு சிறந்த ஃபண்ட் மேனேஜர்களை நியமித்துள்ளன. மேலும் மிகவும் உன்னதமான செயல்முறைகளைக் கொண்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ஒரு வெளிப்படையான முதலீடு இன்று இந்தியாவில் இல்லை. நீங்கள் தங்க ஆபரணம் வாங்கினால், தங்க நகைக் கடைக்காரர் நமக்கு 22 காரட் நகையைத்தான் தந்தாரா அல்லது ஏதேனும் குறைவான தரமுள்ள நகையை தந்துவிட்டாரா என்று சந்தேகம் எழும்.

ஆனால் நீங்கள் போட்ட ஆயிரம் ரூபாய் எங்கெங்கு என்ன சதவிகிதத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை எப்பொழுது வேண்டுமானாலும் கம்ப்யூட்டரை தட்டினால் தெரிந்து கொள்ளலாம்.

வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத் தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத் தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்? சற்று சிந்தியுங்கள்! இந்த 8.75% வட்டிக்கு நீங்கள் வருமான வரி வேறு கட்டியாக வேண்டும். பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பொழுது, 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால், வரும் லாபத்திற்கு வருமான வரி ஒரு பைசா கூட கட்ட வேண்டாம்.

உங்களுக்கு 5 வருடங்களுக்கு மேல் தேவைப்படாத பணத்தை, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யுங்கள். மொத்தமாகவும் முதலீடு செய்யலாம், மாதா மாதமும் முதலீடு செய்யலாம். பலரும் மாதா மாதம் முதலீடு செய்வதை இன்றைய தினத்தில் பழக்கமாகக் கொண்டுள்ளனர். அது பலருக்கு சௌகரியமாக உள்ளது. திடீரென்று பணம் உங்களுக்குத் தேவைப்பட்டால், அன்றைய மதிப்பில், உடனடியாக பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. இன்சூரன்ஸ் போல பாலிசியை பாதியில் நிறுத்தி விட்டால், பணம் கிடைக்காது அல்லது கழிவு போகக் கிடைக்கும் என்ற பிரச்சினையெல்லாம் மியூச்சுவல் ஃபண்டுகளில் இல்லை.

இவையெல்லாம் போதாது என்று இன்று சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், மாதா மாதம் முதலீடு செய்பவர்களுக்கு இலவசமாக ஆயுள் காப்பீட்டை வேறு வழங்குகின்றன. இந்த ஒரு உயரிய முதலீட்டு வாகனம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்றடைய வேண்டும்! அனைத்து மக்களும் நமது இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதுடன், அந்த வளர்ச்சியின் ரசத்தையும் அனுபவிக்க வேண்டும். அந்த ரசத்தை அனுபவிக்க சாமானியனுக்கு உள்ள ஒரே எளிமையான வழி மியூச்சுவல் ஃபண்டுகள்தான்!

வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?

prakala@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்