இனி காலையில் 5 மணிக்கு எழுந்து கொள்ளவேண்டும். ஒரு மணிநேரம் நடைபயிற்சி போக வேண்டும். கோபம் குறைத்துக்கொள்ள வேண்டும் என ஒவ்வொருவரும் புத்தாண்டுக்கு ஏதாவது சபதம் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் சபதம் எடுப்பதை விட இந்த சபதத்தை நிறைவேற்றுவதுதான் ஒவ்வொருவருக்கும் பெரிய சவால்.
இது போல ஒவ்வொருவரும் 2015-ம் ஆண்டில் பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த புத்தாண்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அவை...
சரக்கு மற்றும் சேவை வரி
சரக்கு மற்றும் சேவை வரியை 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி அமல்படுத்த போவதாக அரசு தெரிவித்திருந்தாலும், தமிழ்நாடு, குஜராத், ஒடிசா, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்துவதற்கு முன்பு பல விளக்கங்களை கேட்டிருக்கின்றன. இந்த விளக்கங்களுக்கு பதில் சொல்லி கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வரி விதிப்பு முறை இருப்பதால், வரிச் சலுகைகள் இருக்கும் மாநிலங்களில் தொழில் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. இப்போது அனைத்து மாநிலங்களிலும் ஒரே வரி என்பதால் உற்பத்தி இன்னொரு இடத்துக்கு மாறும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் ஜேட்லி சமாளிக்க வேண்டும்.
வருமான வரி விலக்கு
வரும் பிப்ரவரி மாதம் முழுமையான பட்ஜெட்டை தாக்க செய்ய இருக்கிறார் ஜேட்லி. சில மாதங்களுக்கு முன்பு நடுத்தர மக்களுக்கு அதிக வரி விதிக்க கூடாது. வரிச்சலுகை கொடுத்து, சேமிப்பை அதிகரிக்க வேண்டும். அவர்கள் செலவழித்து அதன் மூலம் மறைமுக வரி வசூலிக்க வேண்டும் என்றார். அதே சமயம் அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றும் பேசினார். இப்போது 2.5 லட்ச ரூபாய் வரைக்குமான ஆண்டு சம்பளம் வாங்குபவர்களுக்கு வரி இல்லை. இந்த எல்லையை விரிவு படுத்துவாரா என்பதற்கு பிப்ரவரி இறுதிவரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.
காப்பீடு மற்றும் நிலக்கரி மசோதா
இந்த இரண்டு மசோதாக்களும் நீண்ட நாட்களாக ஜேட்லிக்கு தலைவலியை கொடுத்துக் கொண்டிருப்பவை. மக்களவையில் இவை நிறைவேறினாலும், மாநிலங்களவையில் நிறைவேறாமல் இருக்கிறது. கூட்டு கூட்டத்தை கூட்டியாவது நிறைவேற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார். பல ஆண்டுகளாக கிடப்பில் இருப்பவற்றை இந்த வருடமாவது நிறைவேற்ற வேண்டும்.
திட்டக் கமிஷனுக்கு மாற்று?
திட்டக் கமிஷனை கலைத்து புதிய அமைப்பை உருவாக்க முடிவு செய்துவிட்டார்கள். இதற்கு பெரும்பாலான மாநில அரசுகளின் ஆதரவும் இருக்கிறது. ஆனால் இந்த அமைப்புக்கு பெயர், அதிகாரங்கள், மாநில அரசின் பங்கு, செயல்படும் விதம் போன்றவற்றை வகுத்தாக வேண்டும். ஜி.எஸ்.டி.க்கு பிறகு இந்த புதிய அமைப்பிலும் மாநில அரசுகளுடன் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.
ரூபாய் மதிப்பு
ரூபாய் மதிப்பு இன்னமும் அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. வரும் ஆண்டில் ரூபாய் மதிப்பு சரிவு இருக்கலாம் என்று மும்பையில் இருக்கும் பங்குச்சந்தை நிபுணர் நம்மிடம் தெரிவித்தார். அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தும் போதோ, அமெரிக்க வளர்ச்சி அதிகமாகும் போதோ டாலர் பலமடைந்து ரூபாய் சரிவை சந்திக்கலாம்.
ரூபாய் சரிவை தடுக்க ஏற்றுமதி, அந்நிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ), அந்நிய நிறுவன முதலீடு(எப்.ஐ.ஐ.) மற்றும் என்.ஆர்.ஐ. முதலீடு ஆகிய முக்கியமான நான்கு வழிகள் இருக்கின்றன. ஏற்கெனவே ஏற்றுமதி வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது. அந்நிய முதலீடு பெரிய அளவில் இல்லை. பங்குச்சந்தைக்கு சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு அந்நிய முதலீடு இருந்தாலும், இந்த முதலீடு அடுத்த வருடம் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதேபோல இருக்கும் முதலீடும் வெளியே செல்லலாம்.
குறிப்பிட்ட எல்லைக்குள் ரூபாயின் மதிப்பை வைத்திருக்க ஆர்பிஐ இலக்கு நிர்ணயம் செய்யவில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஆனால் ஜேட்லி இப்படி கூறமுடியாது.
பணவீக்கம்-வட்டி குறைப்பு
ஒருபுறம் பணவீக்கம் இப்போது பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது. ஆனாலும் பணவீக்கம் இதே நிலையில் தொடர்ந்தால் மட்டுமே வட்டி விகிதத்தை குறைக்க முடியும், மேலும் தேவையை தீர்மானிப்பது மட்டுமே ரிசர்வ் வங்கி செய்கிறது, உற்பத்தி செய்ய வேண்டியது மத்திய அரசு என்று தெரிவித்துவிட்டார் ரகுராம் ராஜன்.
ஏற்கெனவே வளர்ச்சி குறைவாக இருக்கிறது. இந்த நிலையில் பணவீக்கம் குறைந்து பணவாட்டம் வந்துவிட்டால், என்னவாகும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்ததும் பணவீக்கம் குறைய காரணமாகும். இந்த நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். பணவீக்கம் இதே நிலைமையில் நீடிக்கும் வரை வட்டி குறைப்பு இல்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்து விட்ட நிலையில் சீரான பணவீக்கத்துக்கு உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்டவற்றை ஜேட்லி செய்யவேண்டும்.
நிதிப் பற்றாக்குறை
ஜேட்லியும், நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹாவும் செல்லும் இடமெல்லாம் நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதத்துக்குள் (ஜிடிபியில்) குறைப்போம் என்று தெரிவித்து வருகிறார்கள். இதற்காக செலவுகளை குறைப்போம் என்றும் தெரிவிக்கிறார்கள்.
இதில் எந்த செலவு என்பது முக்கியம். மானியங்கள், கல்வி மற்றும் மருத்துவ செலவு என சாதாரண மக்களுக்கு செய்யும் செலவுகளில் கைவைப்பதா இல்லை வரி ஏய்பவர்கள் மீது கைவைப்பதா என்று என்பதுதான் பட்டிமன்றமே.
அதே சமயம் பங்கு விலக்கல் மூலம் 2015-ம் ஆண்டு 50,000 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. பங்கு விலக்கல் மூலம் நிதியை திரட்ட முடியுமா? நிதிப் பற்றாக்குறையை இலக்கிற்குள் கட்டுப்படுத்த முடியுமா என்பது ஜேட்லிக்கு பெரும் சவால்தான்.
இப்போது 2.5 லட்ச ரூபாய் வரைக்குமான ஆண்டு சம்பளம் வாங்குபவர்களுக்கு வரி இல்லை. இந்த எல்லையை விரிவு படுத்துவாரா என்பதற்கு பிப்ரவரி இறுதிவரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.
தொடர்புக்கு: karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago