எ
ல்லா வில்லன்களுக்கும் ஒரே பிளாஷ்பேக்தான். ஆனால் அனைத்து பொருளாதார நெருக்கடிகளுக்கும் ஒரே காரணம் நிச்சயமாக இருக்க முடியாது. பொதுவாக விவரிக்க வேண்டும் எனில் நிதியை சரியாக கையாளாதது என்று கூறலாம். கிழக்கு ஆசிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு 20 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இந்த நெருக்கடி நடந்த பிறகு 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் பெரிய மந்த நிலை உருவானது. 2011-ம் ஆண்டு ஐரோப்பிய பகுதியில் மந்த நிலை உருவானது. இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த நாடுகளின் உண்மையான நிலைமை தெரியவரும். ஆனால் கிழக்காசிய பொருளாதார நெருக்கடியை சந்தித்த நாடுகள் தற்போது நல்ல நிலையில் இருக்கின்றன என்றே கூறலாம்.
சிங்கப்பூர், ஹாங்காங், தைவான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா மற்றும் தென் கொரியா ஆகிய கிழக்காசிய நாடுகளில் 1990களில் நல்ல வளர்ச்சி இருந்தது. நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் நன்றாகவே இருந்தது. ஆனால் 1997-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி வரை மட்டுமே இந்த நிலை. ஜூலை 2-ம் தேதி தாய்லாந்து அரசு டாலருக்கு நிகரான தன்னுடைய கரன்ஸியின் மதிப்பைக் குறைத்தது. அதன் தொடர்ச்சியாக கிழக்காசிய நாடுகளின் முக்கியமான சந்தைகள் சரியத்தொடங்கின.
நெருக்கடிக்கு என்ன காரணம்?
1980-களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மிதமிஞ்சிய வளர்ச்சி இருந்தது. அதனால் உபரி பணத்தை எங்கு முதலீடு செய்வது என்னும் பரிசீலனையில் இறங்கின. கிழக்காசிய நாடுகள் வளரத்தொடங்கிய காலம். இந்த நாடுகளுக்கு குறைந்த வட்டியில் பணம் தேவை. அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தேவை என்பதால், கிழக்காசிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் டாலரில் கடன்களை வாங்கத் தொடங்கின. இப்படி நிறுவனங்கள் வாங்கி குவித்ததால் வெளிநாட்டு கடன் தொகை அதிகரித்துக்கொண்டே சென்றது. நிறுவனங்களிடம் ஓரளவுக்கு பணப்புழக்கம் இருந்ததால் இந்த பணப்புழக்கம் காரணமாக மக்கள் கையிலும் பணம் புரளத்தொடங்கியது.
ஆனால் துரதிஷ்டவசமாக மக்கள் சேமிக்கவில்லை. மாறாக செலவு செய்தனர். அந்த செலவிலும் பொருட்கள் இறக்குமதி அதிகம் நடந்தது. மாறாக நிறுவனங்கள் வாங்கிய கடனும் கூட முழுமையாக ஆக்கப்பூர்வமாக செலவு செய்யப்படவில்லை, நிறுவனங்கள் சொத்துகளை வாங்கவும், தற்காலிகமாக பங்குகளின் விலையை உயர்த்துவதற்கும் அந்த நிதியை பயன்படுத்தின. வெளிநாட்டு முதலீடு குறித்த எந்தவிதமான அக்கறையும், கவனிப்பும் இல்லாமல் அதிக முதலீடு கிழக்காசிய நாடுகளுக்கு வந்தது.
முதலீடு என்பது ஒருவழி பாதையல்லவே. முதலீடு செய்தவர்களுக்கு திருப்பி கொடுத்தாகவேண்டுமே? முதலீடு செய்தது மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த தொகையும் கணிசமாக அதிகரித்தது. அதாவது நடப்புக் கணக்கு பற்றாக்குறை மிகவும் அதிகரித்திருந்தது. உதாரணத்துக்கு 1996-ம் ஆண்டு தாய்லாந்தில் 8சதவீதம், வியட்நாமில் 8.2சதவீதம் அளவுக்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை இருந்தது. கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் 4 சதவீதத்துக்கு மேல் நடப்பு கணக்கு பற்றாக்குறை இருந்தது.
நாடுகளின் ஜிடிபி மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன் (கிழக்காசிய நாடுகளில்) 100 சதவீதத்தை தாண்டி இருந்தது. அதிகபட்சம் 180 சதவீதம் வரை வெளிநாட்டுக் கடன் இருந்தது.
ஒருபுறம் நிறுவனங்கள் வாங்கிய கடன், மறுபுறம் நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்னும் பிரச்சினை இருந்தது. இவற்றை சமாளிக்க, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். ஒரே வழி டாலருக்கு நிகரான கரன்ஸி மதிப்பைக் குறைக்க வேண்டும் என்பதால் இந்த முடிவை தாய்லாந்து எடுத்தது. சீட்டுக்கட்டு போல அனைத்தும் ஆட்டம் கண்டன. தாய்லாந்து பங்குச்சந்தை சரிந்ததைத் தொடர்ந்து கிழக்காசிய நாடுகளின் பங்குச்சந்தைகள், அமெரிக்க பங்குச்சந்தை என அனைத்தும் ஆட்டம் கண்டன. தாய்லாந்து கரன்ஸியை மதிப்பிழக்க செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1994-ம் ஆண்டு டாலருக்கு நிகரான தன்னுடைய நாணய மதிப்பை சீனா குறைத்தது. இதனால் சீனா பொருட்களுடன் சர்வதேச சந்தையில் போட்டியிட வேண்டிய கட்டாயமும் கிழக்காசிய நாடுகளுக்கு உருவானது.
இந்த பிரச்சினை காரணமாக தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. விலை உயர்ந்த பொருட்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. புதிய வேலை கிடைக்கவில்லை. அரசின் செலவுகளும் குறைந்தன. இந்த பிரச்சினையை சமாளிக்க சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) முன்வந்தது. இந்த நாடுகளின் நிதி நிலைமையை சீராக்க நிதி உதவி வழங்கியது. பல பில்லியன் டாலர் தொகையை நிபந்தனைகளுடன் ஐஎம்எப் வழங்கியது. 1999-ம் ஆண்டிலிருந்து இந்த நாடுகளின் நிலைமை மேம்படத் தொடங்கியது. பொருளாதாரம் உயர்வடைவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின.
1997-ல் இந்தியா!
கிழக்காசிய பகுதியில் பதற்றம் இருந்தாலும், அந்த பதற்றம் இந்தியாவில் இல்லை. கிழக்காசிய நாடுகள் சிறிய நாடுகள் என்பதால் பொருளாதார சீர்திருத்தங்களை விரைவாக செய்தனர். அதனால் அந்நிய முதலீடு விதிமுறைகளை மிகவும் எளிமைப்படுத்தி இருந்தனர். ஆனால் இந்தியாவின் வெளிநாட்டு கடன் மிகவும் குறைவு. வெளிநாடுகளில் இருந்து அவ்வளவு எளிதாக கடன் வாங்கிவிடமுடியாது. இன்னும் சொல்லப்போனால் 1991-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்த போது பெரும்பாலான தொழில் அமைப்புகள் அந்த சீர்திருத்தங்களை எதிர்த்திருக்கின்றன. அதாவது நிறுவனங்களே அந்நிய முதலீடு குறித்து எச்சரிக்கையாக அப்போது இருந்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கூட அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) மூலமாகதான் அந்நிய முதலீடு இந்தியாவுக்குள் வர முடியும். இந்த கடுமையான உத்தரவு காரணமாக ஆசிய நாடுகளுக்கு வந்த நெருக்கடி இந்தியாவுக்கு வரவில்லை.
அடுத்தது சீனாவா?
எப்போதெல்லாம் சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போது அடுத்த சரிவு சீனாவில் என்னும் வாதம் எழும். மார்கன் ஸ்டான்லியின் வல்லுநர் ரூசிர் ஷர்மாவும் இந்த கருத்தை கூறியிருக்கிறார். அவர் கூறியிருக்கும் காரணங்களில் ஒன்று சீனாவின் கடன் அளவு. ஆனால் இதற்கு எதிர்கருத்தும் இருக்கிறது. சீனாவில் நடப்பு கணக்கில் உபரி இருக்கிறது. அதாவது வெளிநாட்டு கடனை நம்பி சீனா இல்லை. தவிர சீனாவில் இருக்கும் கடன், சீன வங்கிகள் கொடுத்தவைதான். மேலும் சீனாவில் சேமிப்பு விகிதம் அதிகம் என்பதால் இப்போதைக்கு சரிவு வராது என்னும் வாதமும் இருக்கிறது.
தற்போதைய நிலை
20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடும் போது கிழக்காசிய நாடுகளின் தற்போதைய நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாடுகளில் நடப்பு கணக்கு பற்றாக்குறை இருந்தது. ஆனால் தற்போது நடப்பு கணக்கில் உபரி இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக இருந்தது. தாய்லாந்து -9 சதவீதமும், இந்தோனேசியா -13 சதவீதம் சரிந்திருந்தது. பெரும்பாலான நாடுகள் சரிவிலே இருந்தன. ஆனால் தற்போது வளர்ச்சி பாதையில் அந்த நாடுகள் இருக்கின்றன. அதேபோல ஜிடிபியில் வெளிநாட்டு கடன் 100% 180 சதவீதம் என இருந்த இந்த நாடுகளின் தற்போதைய கடன் அளவு 30,40 சதவீதம் என்னும் அளவில் உள்ளன. வெளிநாட்டு கடன் அதிகரிப்பது ஆபத்து என்பதே கிழக்கசிய நாடுகள் உணர்த்தும் பாடம்.
தனிமனிதனோ, நாடோ அளவுக்கு மிஞ்சிய கடனால் பேரழிவே ஏற்படும்.
KARTHIKEYAN.V@THEHINDUTAMIL.CO.IN
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago