சி
னிமாவில்தான் பார்த்திருப்போம்... கை வண்டி இழுக்கும் ஏழை, ஒரு பாட்டு முடிவதற்குள் மிகப் பெரிய பணக்காரனாவதையும், செல்வச் செழிப்புடன் வாழ்ந்த பணக்காரன் ஏழை ஆவதையும். இது நிஜ வாழ்க்கையிலும் அவ்வப்போது நடக்கிறது. சமீபத்திய உதாரணம் விஜய்பாத் சிங்கானியா.
இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் விஜய்பாத். நாட்டின் முன்னணி ஆடை நிறுவனமான ரேமண்ட்டின் முன்னாள் தலைவர். 20 ஆண்டுகள் கஷ்டப்பட்டு நிறுவனத்தை உயரத்துக்குக் கொண்டு சென்றவர். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருந்த இவர் தற்போது, வாடகை வீட்டில் கார், டிரைவர் கூட இல்லாமல் தனது 78-வது வயதில் கஷ்ட ஜீவனம் செய்து வருகிறார். காரணம் மகன் கவுதம். சினிமாவையும் மிஞ்சும் திருப்பங்களுடன் கூடிய சிங்கானியாவின் வாழ்க்கையில் என்ன தான் பிரச்சினை?
மும்பையில் மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜேகே ஹவுஸ்தான் பிரச்சினைக்குக் காரணம். 1960-ம் ஆண்டு கட்டப்பட்ட 14 மாடி கட்டிடமான இதில் 4 சொகுசு வீடுகள், ரேமண்ட்டின் துணை நிறுவனமான பார்த்தியன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டில் அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, விஜய்பாத், அவரது மகன் கவுதம், மறைந்த சகோதரன் அஜய்பாத் சிங்கானியாவின் மனைவி மற்றும் அவரது 2 சகோதரர்களுக்கு தலா ஒரு வீடு அதில் கொடுக்கப்பட வேண்டும். அதுவரை வாடகை வீட்டில் குடியிருக்கும்போது, அதற்கான வாடகையை ரேமண்ட் தர வேண்டும். இதுதான் ஒப்பந்தம்.
பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, 36 மாடி கட்டிடமாக ஜேகே ஹவுஸ் உருவெடுத்தது. ஆனால் ஒப்பந்தப்படி மகன் கவுதம் யாருக்கும் வீடு ஒதுக்கித் தரவில்லை. அதோடு, இவரின் வங்கிக் கணக்குகளை பார்த்து வந்த ரேமண்ட் நிறுவனத்தின் 2 ஊழியர்கள் திடீரென காணவில்லை. வங்கிப் புத்தகம், ஆவணங்களை அனைத்துடனும் மாயமாகி விட்டார்கள். இதனால் சாப்பாட்டுக்கே பிரச்சினை. சிங்கானியாவின் கோபத்துக்கு இதுதான் காரணம்.
`ரேமண்ட் நிறுவனத்தில் எனக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பு பங்குகளை கவுதமுக்கு கொடுத்தேன். ஒப்பந்தப்படி வாடகை பாக்கியாக ரூ.4.77 கோடி தர வேண்டும். ஆனால் கவுதம் அதையும் தராமல் என்னை ஏமாற்றி விட்டான்' எனப் புகார் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டிருந்த காரும், டிரைவரும் நிறுத்தப்பட்டு விட்டன. கிராண்ட் பாரடி ஹவுஸில் தங்கியிருந்தார். அதற்கு மாத வாடகை ரூ.7 லட்சம். ஒப்பந்தப்படி அதை தருவதாக ஒப்புக்கொண்ட ரேமண்ட் நிறுவனம் அதையும் தர மறுக்க, நடுத் தெருவுக்கு வர வேண்டிய நிலைமை அவருக்கு.
`தந்தையும் மகனும் சண்டை போட்டுக் கொண்டு நீதிமன்றம் வரலாமா.. அப்படி வருவது உங்களுக்கும் நல்லதல்ல. நிறுவனத்துக்கும் நல்லதல்ல. நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளலா மே..' என மும்பை உயர் நீதிமன்றம் பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொள்ள இருவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
`நான் செய்த மிகப் பெரிய தவறு ரேமண்ட் நிறுவனத்தின் முழுப் பொறுப்பையும் கவுதமிடம் ஒப்படைத்ததுதான். ஆனால் அந்தத் தவறுதான் கவுதம் யார் என்பதை எனக்கு அடையாளம் காட்டியது. சில காரணங்களால் நம்முடைய உண்மையான அடையாளத்தை மறைத்து வைக்கிறோம். பண பலம் வந்துவிட்டால், என்னால் எல்லாம் முடியும் என்ற ஆணவம் வெளியே தெரிந்து விடுகிறது. கவுதம் மீது மிகவும் பாசமாக இருந்தேன். எங்கள் குடும்பமே பாசமான குடும்பம்தான். அப்படி பாசமான ஒரு நேரத்தில்தான் என் வசமிருந்த அத்தனை சொத்துகளையும் அப்படியே மகனுக்குக் கொடுத்தேன். இப்போது அனுபவிக்கிறேன்.
நீங்கள் உயிருடன் இருக்கும்போதே, அத்தனை சொத்துகளையும் வாரிசுகளுக்கு கொடுத்து விடாதீர்கள். 10 பிள்ளைகள் இருந்தாலும் மூன்றோ, நான்கோதான் பாசமாக உங்களுக்கு உண்மையாக இருக்கும். பத்தும் அப்படி இருக்காது. தந்தையின் பாசத்தை மறந்து சுயநலத்துடன் செயல்படும் கறுப்பு ஆடுகள் கண்டிப்பாக இருக்கும்' என வேதனையுடன் கூறுகிறார் சிங்கானியா.
இதற்கு கவுதம் என்ன சொல்கிறார்?
`எனது தந்தையின் நிலைமையை நினைத்தால் எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஒப்புக்கொண்டபடி, வீடுகளை ஒதுக்கித் தர நான் தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால் ரேமண்ட் நிறுவனத்தின் பங்குதாரர்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதை மீறி நான் எப்படித் தர முடியும். இதை பலமுறை அவரிடம் கூறி விட்டேன். ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். 2 முறை பேச்சுவார்த்தைக்கு வருவதாகக் கூறிவிட்டு வரவில்லை. இதில் என் மீது என்ன தவறு இருக்கிறது?.
என்னைப் பிடிக்காதவர்கள் காசுக்காக என் தந்தையின் பின்னால் இருந்து அவரை இயக்குகிறார்கள். இது எனக்குத் தெரியும். என்னதான் இருந்தாலும் அவர் என் தந்தை. அவருடைய வேதனையைப் போக்க கண்டிப்பாக முயற்சி மேற்கொள்வேன். சிங்கானியா குடும்பத்தின் பெருமை குலைந்து போக அனுமதிக்க மாட்டேன்' என்கிறார் கவுதம்.
நான்கு மாதங்களுக்கு முன்புதான் விஜய்பாத் சிங்கானியாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. தள்ளாத வயதில், உடல் நலக் குறைவுடன் உரிமைக்காக போராடுவது கொடுமையான விஷயம்தான். அதுவும் மகனையே எதிர்த்து போராடுவது இன்னும் கொடுமையான விஷயம்.
சாதனையாளர் சிங்கானியா
பொதுவாக 67 வயதில் பெரும்பாலானோர் ஈஸி சேரில் சாய்ந்து பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டு, மலரும் நினைவுகளை அசை போடுவார்கள். பேரன், பேத்தியை கொஞ்சிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள், ஆனால் விஜய்பாத் சிங்கானியா தனது 67-வது வயதில் அதுவரை யாருமே செய்யாத ஒரு சாதனையை செய்தார். வெப்பக்காற்று அடைக்கப்பட்ட என்வலோப் என்ற 22 மாடி உயரம் கொண்ட பலூனில் 69 ஆயிரத்து 852 அடி உயரத்தில் பறந்து முந்தைய உலக சாதனையை முறியடித்தார். இதற்கு முந்தைய சாதனை 64 ஆயிரத்து 997 அடி உயரம் பறந்ததுதான். இங்கிலாந்தை சேர்ந்த பெர் லிண்ட்ஸ்ராண்ட் அந்த சாதனையை படைத்திருந்தார்.
அதேபோல், 1994-ல் நடந்த பந்தயத்தில் 24 நாளில் 34 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு விமானத்தை ஓட்டி தங்கப் பதக்கம் வென்றார். இந்த சாதனையைப் படைத்த ஒரே இந்தியர் இவர்தான். மும்பையின் ஷெரீப் ஆக இருந்த சிங்கானியாவுக்கு 2006-ம் ஆண்டில் பத்ம பூஷண் பட்டம் வழங்கப்பட்டது.
1988-ல் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு தனது சிறிய ரக விமானத்தில் தனியாகப் பறந்து வந்தார். அது குறித்து `அன் ஏஞ்சல் இன் தி காக்பிட்’ என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். இவரது விமானம் ஓட்டும் திறமையைப் பாராட்டி, இந்திய விமானப் படையின் கவுரவ ஏர் கமாடோர் பதவியும் அளிக்கப்பட்டது.
ஜேகே. கார்ப்பரேஷன்
விஜய்பாத் சிங்கானியாவின் தாத்தா ஜக்கிலால் பெயரின் முதல் எழுத்தையும் தந்தை கம்லாபாத் சிங்கானியாவின் முதல் எழுத்தையும் இணைத்து ஜேகே. கார்ப்பரேஷன் உருவானது. அதனால்தான் குழுமத்தின் மும்பை அலுவலகம் ஜேகே ஹவுஸ் என்ற பெயரை பெற்றது. கம்லாபாத் சுதந்திர போராட்ட வீரர். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, தன்னிடம் இருந்த அந்நிய துணிகள் அனைத்தையும் தீயில் இட்டு கொளுத்தியவர். ஜேகே கார்ப்பரேஷன், டாடா, பிர்லாவுக்கு இணையான மிகப் பெரிய தொழில் குழுமம். இதில் ஜேகே டயர், ஜேகே சிமென்ட், ஜேகே பேப்பர், ரேமண்ட், பென்னர் இந்தியா என பல நிறுவனங்கள். 1960களில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்களுக்கு அப்போதே மெக்ஸிகோ, இந்தோனேசியா, ருமேனியா, பெல்ஜியம், போர்ச்சுக்கல், ஐக்கிய அரபு எமிரேட் என பல நாடுகளில் தொழிற்சாலைகள் இருந்தன. பின்னர் இந்தக் குழுமம் 3 பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட்டது. மும்பையில் இருந்து செயல்பட்ட ரேமண்ட் நிறுவனம் விஜய்பாத் சிங்கானியா வசம் வந்தது.
- ravindran.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago