சபாஷ் சாணக்கியா: ஆடுகிற மாட்டை...

By சோம.வீரப்பன்

15 வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் தன் தந்தையின் இறப்புச் சான்றிதழ் பெற மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அப்பணியில் இருந்த எழுத்தர் அலட்சியமாக நடந்து கொள்ளவே, தனக்கு ஆணையரைத் தெரியும், மேயரைப் பார்த்து இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லி அசத்தப் பார்த்தார் நம் நண்பர்.

ஆனால் எழுத்தரோ, ஆணையரின் தந்தை இறந்தால் கூட, அந்த இறப்புச் சான்றிதழையும் தான் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, தேநீர் குடிக்கப் போகிறேன் என்று 45 நிமிடங்கள் காணாமல் போய் விட்டார்!

சரி, அந்த ஆள் ஏதோ எதிர் பார்க்கிறார் என நினைத்த நண்பர், அந்த எழுத்தர் வரும் வரை கவுண்டரிலேயே காத்துக் கிடந்தார்.அவர் வந்தவுடன் `நான் யாருக்கும் எதுவும் செய்யணும்னாலும் பார்த்துச் செய்கிறேன் ' என்று சொல்லிக் கொண்டே பர்ஸை எடுத்தார். ஆனால் உடனே அந்த எழுத்தர் விஸ்வரூபம் எடுத்தார்! ' என்னை என்ன நினைச்சீங்க? பணத்திற்கு மயங்குகிற ஆள் இல்லைங்க நான். எனக்கு இப்பப் புரிஞ்சு போச்சு.ஏதோ தப்பு நடந்திருக்கு.

அதான் சரிக்கட்டப் பார்க்குறீங்க. நாங்க முழுசா விசாரிக்கணும். சான்றிதழ் இப்பக் கிடைக்காது. இடத்தைக் காலி பண்ணுங்க ' எனக் கத்தினார். உடனே வரிசையில் பின்னால் காத்திருந்தவர்கள், ஒரு ஆள் குறைந்தானென மகிழ்ந்து நண்பரை அவசரமாக வெளியே தள்ளினார்கள்!

அண்ணே, சின்ன வேலையோ, பெரிய வேலையோ, அதை நமக்குச் சாதகமாகச் செய்து கொடுக்கக் கூடிய நிலையில், அதிகாரத்தில் உள்ளவரையும், அவரது எதிர்பார்ப்பையும், முதலில் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமில்லையா?

இதில் பிரச்சினை என்னவென்றால் நாம் சந்திக்கும் நபர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.அவர்களுடைய இயல்பு, குணம், எதிர்பார்ப்புகள் ஆளுக்காள் வித்தியாசப்படும்! இதற்கு யதார்த்தமான வழி ஒன்றைச் சொல்கிறார் சாணக்கியர். அதாவது அத்தகையவர்களை நான்கு வகையாகப் பிரித்து அவர்களைக் கையாளும் முறைகளையும் சொல்கிறார்!

`பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போட்டும், முட்டாளை நகைச்சுவையாகப் பேசியும், அறிவாளியை உண்மையான வார்த்தைகள் மூலமும் அணுகலாம்' என்பது அவரது யோசனை!

நம்ம நண்பரை அலைக்கழித்த அந்த எழுத்தரை நாம் இரண்டாம் வகையில் சேர்க்கலாம்...அவர் பிடிவாதக்காரர் தானே? முதலில், ஒருவர் ஏன் பிடிவாதக்காரராக இருக்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள்.

தான் நினைப்பதுதான் சரி, தான் சொல்வதுதான் சரி எனும் எண்ணம், ஆணவம் தானே அதற்குக் காரணம்? அவர்களை மடக்கணும்னா அவர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யணும்ல? அதற்கு, அவர்களின் திமிருக்கு (ego) இரை போடணும்ல? அந்த எழுத்தர் பேசிய முறையிலிருந்தே அவர் தன் அதிகாரத்தின் முக்கியத்துவத்தில் கர்வம் கொண்டுள்ளார் எனத் தெரிகிறதல்லவா?

அப்ப நம்ம நண்பர் என்ன செய்திருக்கணும்? எழுத்தரை நேரிடையாகவும், மறை முகமாகவும் உசத்திப் பேசி இருக்கணும்ல ஐயா, நம்ம போதாத காலம், அந்த ஆள் சாணக்கியர் சொல்லும் அந்தப் பேராசைக்காரராக இருந்து விட்டால் கஷ்டம் தான்! அப்படிப்பட்டவர்கள் எதிலும் நமக்கென்ன ஆதாயம் என யோசிப்பவர்கள். சாதாரணமாக மசிய மாட்டார்கள்.எப்பொழுதும் 'Give and take policy' உடையவர்கள்!

கையூட்டு கேட்கா விட்டாலும், வேறு ஏதாவது வகையிலாவது பலனை எதிர்பார்ப்பார்கள்! அது சரி, சில சமயம் நாம் அறிவற்றவர்களிடமும் போய் நிற்க வேண்டியது இருக்கும். சுமாரான அறிவுள்ள வங்கி மேலாளர் குமாரிடம் கடன் கேட்டுப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். குமாருக்கு உங்கள் கடன் விண்ணப்பத்தின் சாதக பாதகங்களைச் சொல்லிப் பலன் இல்லை.அவருக்குப் புரியாது.

'முட்டாள்களிடம் வாதம் செய்யாதீர்கள். அவர்கள் உங்களை தம் நிலைக்கு இறக்கி விடுவார்கள் ' என்கிறார் மார்க் ட்வைன்! புத்தி குறைவானவர்களிடம் சும்மா எதையாவது நகைச்சுவையாகப் பேசி நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டியதுதான்! இதனால் அவர்கள் உங்களுடன் நட்பு பாராட்டுவார்கள், பின்னர் காரியத்தை முடித்துக் கொள்ளலாம்!

நாம் சந்திக்கும் நபர் அறிவாளியாக இருந்து விட்டால், அவருடன் பேசுவதும், அவர் கேட்கும் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் மன நிறைவைத் தரும். Intellectual Elasticity என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். பணியை முடித்துக் கொடுக்க வேண்டியவர் இவ்வகையைச் சேர்ந்தவர் என்றால் ஆழமான அலசலுக்குத் தயாராகுங்கள். தர்க்க ரீதியாகப் பேசுங்கள்.இருவரும் மகிழ்ச்சி அடைவீர்கள்.உங்கள் வேலையும் நல்ல படியாய் முடியும்!

ஐயா, பொதுவாக ஒரு புது அதிகாரி வந்தால் `அவர் எப்படி? 'என்று பேசிக் கொள்வதுண்டு இல்லையா? பெரும்பாலானவர்களை இந்த நான்கில் வகைப்படுத்தி விடலாம்!

சாணக்கிய வழியில் மடக்கி விடலாம்!!

- somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்