1980
களில் டயனோரா, சாலிடெர், பிபிஎல் (BPL) போன்ற வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் புதிதாய் வந்தனவே, ஞாபகம் இருக்கிறதா? அது இந்தியாவில் மின்னணு சாதனங்கள் புதிதாய் வரத் தொடங்கிய காலம். அந்தச் சமயத்தில் எனது நண்பர் ஒருவர் ஜப்பானியத் தொழில்நுட்பத்தோடு பில் போடும்இயந்திரங்களின் தயாரிப்பில் இறங்கினார்.
அதற்கு மின்னணுப் பொருட்களின் சூட்சுமங்கள் தெரிந்த நிபுணர் ஒருவரைத் தேடிக்கண்டு பிடித்தார். அவரை நாம் குமார் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்!
குமார் ஏன் முந்தைய வேலையை விட்டுவிட்டார் என நமது நண்பர் விசாரித்த பொழுது, அவர் கைசுத்தம் இல்லையென்பது தெரிய வந்தது. குமாரோ அதுதான் முதல் முறையென்றும், தான் இனி ஒழுங்காக நடந்து கொள்வதாகவும் உறுதியளித்தார்.
நம் நண்பர் இளகிய மனம் படைத்தவர். குமாரைத் தன்னால் திருத்தி விட முடியுமென நம்பினார்! 35 வயதைத் தாண்டி விட்ட குமாரிடம் ஒரு சிறுவனுக்கு சொல்வதைப் போல நீதி, நியாயம் போன்றவற்றை எடுத்துச் சொன்னார். ஒழுங்காக நடந்து கொண்டால், பெரும் ஊக்கத் தொகை கொடுப்பேன் என்றெல்லாம் உற்சாகப் படுத்தினார்.
குமாரிடம் அவர் திருந்துவதற்கு நான் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி பொருட்கள் வாங்கும் பணியை ஒப்படைத்தார். அடுத்த சில மாதங்களுக்கு நண்பர் வேலையில் மூழ்கி விட்டார். குமாரோ தம் வேலையைக் காட்டத் தொடங்கி விட்டார்! அவருடைய பார்வையில் நமது நண்பர் ஒரு நல்ல முட்டாள்! ஏங்க , `நான் ஏமாறுவதற்குத் தயார், இங்கே வாங்க 'என்று கூப்பிடுபவரை ஏமாற்றாமல் இருப்பது எல்லோராலும் முடியுமா?
குமார் அந்நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் விற்றவர்களுக்குக் காசோலை கொடுப்பதை வேண்டுமென்றே தாமதிப்பார். அவரைத் தனியாகக் கவனித்தால் தான் பணம் பெயரும்! அவர் பங்கைத் தனியே செலுத்தினால் தான் எதுவும் நடக்கும் எனும் நிலை உருவானது!
இதனால் நிறுவனத்துக்கு தரமான பாகங்கள் கொடுத்து வந்தவர்கள் கொடுக்கத் தயங்கினர். எல்லாவற்றுக்கும் மேலாகச் சந்தையில் நண்பரின் பெயருக்குக் களங்கம் வந்துவிட்டது. சுதாரித்துக் கொண்ட நண்பர் காரணத்தைக் கண்டு பிடிப்பதற்குள் விஷயம் கை மீறிப் போய் விட்டது. குமாரைக் கேட்டால் `மன்னித்து விடுங்கள், இனிமேல் ஒழுங்காய் இருப்பேன்' எனும் பழைய பல்லவியைப் பாடத் தொடங்கி விட்டார்.பட்டது போதும் எனப் பயந்து நண்பர் அவரை வீட்டிற்கு அனுப்பியது பின்கதை!
தவறான ஆட்களை வீட்டினுள்ளோ அலுவலகத்தினுள்ளோ நுழைய விட்டால் காணாமல் போவது பொருட்கள் மட்டுமில்லையே? அமைதி, நிம்மதி, நம்பிக்கை, மகிழ்ச்சி போன்றவையும் அல்லவா?
இந்தியாவில் ஏமாற்றுக்காரர்களுக்குக் குறைவில்லை எனத் தெரியும். ஆனால் ஒரு கில்லாடி அரசாங்க அதிகாரி போல நடித்து தாஜ் மஹாலையே மூன்று முறை விற்றார் என்றால் நம்ப முடிகிறதா ? 1980, 90களில் நட்வர்லால் என்று ஒரு பலே ஆசாமிங்க. டெல்லி செங்கோட்டையையும், பாராளுமன்ற கட்டிடத்தையுமே விலை பேசி விற்றவர் தானுங்க அவர்! அவரால் யாருடைய கையெழுத்தையும் அப்படியே அச்சாக போட்டுவிட முடியுமாம். அப்புறம் என்ன அப்போதைய குடியரசுத் தலைரான பாபு இராசேந்திர பிரசாத்தின் கையெழுத்தையும் இவரே போட்டு விட்டார்!
அவர் மேல் அரசாங்கம் பல வழக்குகள் போடாமல் இல்லை.கொஞ்ச நஞ்சமல்ல, மொத்தம் 113 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டதாம். ஆனால் மனுஷன் 9 முறையும் சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டாராம்!
கடைசியாய்த் தனது 84வது வயதில், புதுடெல்லி ரயில் நிலையத்தில், சக்கர நாற்காலியிலிருந்து காணாமல் போனவரைக் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவே இல்லையாம்! வங்கியில் நடைபெறும் மோசடிகள் குறித்த செய்திகளை அடிக்கடி படித்திருப்பீர்கள். ஆனால் ஆள் பிடிபட்டால் தானேங்க நடந்ததே தெரிய வரும்? இதில் வேதனை தரும் உண்மை என்னவென்றால் ,பெரும்பாலும் அத்தகையவர்கள் பிடிபடுவது மட்டுமே முதல் முறையாக இருக்கும். ஆனால் அதற்கு முன்பே பலமுறை சிறிதாகவோ பெரிதாகவோ மோசடிகள் செய்திருப்பார்கள்!
நம்ம நண்பர் மாதிரி ஒருவர் அவர்களை மன்னித்து விட்டு, வளர்த்தும் விட்டு இருப்பார்கள்! குமார் போன்றவர்களோ இதுவரை தப்பித்த நாம் இனியும் தப்பித்து விடுவோம் என்று தைரியமாக மோசடிகளைத் தொடர்கிறார்கள்! அண்ணே உலகில் அன்றும், இன்றும், என்றும் தவறானவர்கள், மிகத் தவறானவர்கள் இருப்பது நிதர்சனம்! அவர்களில் பலர் திருந்தாதவர்கள், திருத்தவே முடியாதவர்கள்.
அவர்களை மாற்றிக் காட்டுகிறேன் என நாம் நம்முடைய , மற்றும் நமது நிறுவனத்தின் நேரத்தை, சக்தியை, பணத்தை செலவழிப்பது வீண் தானே? `வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது' என்கிறார் சாணக்கியர்!
சாணக்கியர் வாக்குப் பொய்யாகுமா?
-somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago