இ
ந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் முழுவதும் சரிந்தே முடிந்தன. கடந்த வாரத்தின் ஐந்து வர்த்தக நாளிலும் பங்குச் சந்தை குறியீடுகள் சரிந்து முடிந்தன. கடந்த வாரத்தில் குறியீடுகள் 3.5 சதவீதம் வரை சரிந்து முடிந்தன. கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு பங்குச்சந்தையில் மோசமான வாரமாக இது கருதப்படுகிறது. சந்தை சரிவுக்கு பல காரணங்கள் இருந்தாலும், கடந்த திங்கள்கிழமை 331 போலி நிறுவனங்களின் வர்த்தகத்துக்கு செபி கட்டுப்பாடு விதித்தது. அப்போது சரிய தொடங்கிய சந்தை வாரம் முழுவதும் சரிந்தது.
தடைக்கு என்ன காரணம்?
போலி நிறுவனங்கள், வரி ஏய்ப்பு, நிதி முறைகேடுகளில் இந்த நிறுவனங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அதனால் இந்த நிறுவன பங்குகளின் வர்த்தகத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மாதத்தின் முதல் திங்கள் கிழமை மட்டுமே இந்த பங்குகளுக்கு வர்த்தகம் செய்ய அனுமதி வழங்கப்படும்.கடைசியாக வர்த்தகமான விலையை விட இந்த பங்கின் விலையை உயர்த்த முடியாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை செபி விதித்திருக்கிறது.
331 நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், இதில் 160-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் சீரான வர்த்தகம் இருந்து வருகிறது. தவிர சில நிறுவனங்ளுக்கு சந்தையில் நல்ல மதிப்பும் இருக்கிறது. உதாரணத்துக்கு ஜே. குமார் இன்பிரா மற்றும் பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனத்தின் சந்தை மதிப்பு தலா ரூ.2,000-கோடிக்கு மேல். பர்ஸ்நாத் டெவலப்பர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,000 கோடிக்கு மேல் இருக்கிறது. தவிர 13 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.100 கோடி முதல் ரூ.600 கோடி வரை இருக்கின்றன. 32 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 கோடி முதல் ரூ.87 கோடி வரை இருக்கின்றன. தவிர இதில் பல நிறுவனங்கள் 2017-ம் ஆண்டு நல்ல ஏற்றத்தையும் அடைந்திருக்கிறது. இந்த நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.14,000 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனங்களில் தனிப்பட்ட ஆடிட்டர்களை வைத்து கணக்குகளை சரி பார்க்கப்படும். இந்த கணக்கு விசாரனையில் திருப்தி ஏற்படவில்லை எனில் நிறுவனங்களின் வர்த்தகத்தை மொத்தமாக முடக்கவும் செபியால் முடியும். தவிர பங்குச்சந்தையில் இருந்து நிதி திரட்டல் உள்ளிட்ட எந்த பணியை இந்த நிறுவனங்கள் செய்ய முடியாது.
நிறுவனங்கள் எதிர்ப்பு!
செபியின் இந்த கட்டுப்பாடுக்கு சில நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. நான்கு நிறுவனங்கள் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்திருக்கின்றன. பர்ஸ்நாத் டெவலப்பர்ஸ், கவிட் இண்டஸ்ட்ரீஸ், ஜே.குமார் இன்பிரா, பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மேல் முறையீடு செய்தன. கடந்த வியாழன் அன்று ஜே குமார் இன்பிரா மற்றும் பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைத்தது. இந்த இரு நிறுவனங்களின் பங்குகளில் வெள்ளிகிழமை வர்த்தகத்தை தொடங்கின. ஆனால் 20 சதவீதம் வரை சரிந்து முடிந்தது. வெள்ளிக்கிழமை பர்ஸ்நாத் டெவலப்பர் மற்றும் கவிட் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களுக்கான தடை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பங்குகளின் வர்த்தகம் இன்று (ஜூலை 14) மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்ப்பாயம் விமர்சனம்!
தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்த நிறுவனங்கள், என்ன தொழில் தொழில் செய்து வருகிறோம் என்பது உள்ளிட்ட பல தகவல்களுடன் தீர்ப்பாயத்தை அணுகின. இதனை விசாரித்த தீர்ப்பாயம், செபி சரியான விசாரணையை மேற்கொள்ளவில்லை என விமர்சனம் செய்தது. கடந்த ஜூன் மாதம் இந்த நிறுவனங்களின் பட்டியலை மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சகம் செபியிடம் வழங்கியது. இந்த இரு மாதங்களில் எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் செபி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. விசாரணை எதுவும் செய்யாமல், அவசர கதியில் தடைவிதிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
ஆடிட்டர்களின் பங்கு?
ஒரு வேளை இந்த நிறுவனங்கள் மோசடியான நிறுவனமாக இருக்கிறது வைத்துக்கொண்டால் கூட, ஆடிட்டர்கள் மற்றும் ரேட்டிங் ஏஜென்சிகள் மீது செபி நடவடிக்கை எடுக்காதது ஏன் என்னும் கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வரித்தாக்கல் செய்கின்றன, ஆடிட்டர்களின் உதவி இல்லாமல் நிறுவனங்கள் எப்படி செயல்பட முடியும். ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்னும் கேள்விகளும் எழுந்துள்ளன.
முதலீட்டாளர் நலனா?
செபி ஒவ்வொரு முறை நடவடிக்கை எடுக்கும் போது, முதலீட்டாளர்கள் நலனுக்காக எடுக்கப்படுகிறது என்னும் வாதம் முன்வைக்கப்படும். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் இதுபோல அவசர கதியில் வெளியிடும் அறிவிப்புகளால் நிறுவனங்கள் சந்தை மதிப்பு கடுமையாக சரிகிறது. தவிர நிறுவனத்தின் மீது இருக்கும் இமேஜ் மீண்டும் பழைய நிலைமைக்கு வரவே முடியாது. நிறுவனங்களில் போலி அல்லது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் இந்த அறிவிப்புக்கு முன்பே சோதனை நடத்த முடியாதா? கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதை காண்பிப்பதற்காக இப்படி அவசர கதியில் நடவடிக்கை எடுப்பதா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இருக்கின்றன.
செபியின் இந்த நடவடிக்கை காரணமாக சுமார் 36 லட்சம் முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சிறு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், ராகேஷ் ஜுன் ஜுன்வாலா உள்ளிட்ட பெரு முதலீட்டாளர்கள் கூட இந்த பங்குகளில் முதலீடு செய்திருக்கின்றனர். இவர் பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 15 லட்சம் பங்குகளை வைத்திருக்கிறார். டிஎஸ்பி பிளாக்ராக், பிர்லா சன்லைப் டிரஸ்டி, ஹெச்டிஎப்சி டிரஸ்டி, ரிலையன்ஸ் கேபிடல் டிரன்டி, யூடிஐ மிட்கேப் பண்ட், கோல்ட்மென் சாக்ஸ், பிடிலிட்டி, ரெலிகர், ஆனந்த்ரதி உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பங்குகளில் முதலீடு செய்திருக்கின்றன.
செபி தீர விசாரித்து இந்த முடிவை எடுத்திருக்கும் பட்சத்தில், தடை செய்தது தவறு என கூற முடியாது. ஆனால் இப்போது மொத்தமாக முடக்கப்பட்டிருப்பதால் இந்த பங்குகளில் முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். நிறுவனர்கள் செய்த தவறுக்கு முதலீட்டாளர்களை பலிஆடு ஆக்குவதா? முதலீட்டாளர் நலனில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அது அவசர கதியில் எடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. இந்த பட்டியலில் உண்மையான நிறுவனங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனங்கள் மிகப்பெரிய சட்ட போராட்டத்தை சந்தித்த பிறகே நிரூபிக்க முடியும். அப்படியே நிரூபித்தாலும் முதலீட்டாளர்களின் சந்தேக கண் இருந்துகொண்டுதான் இருக்கும்.
எதிர்காலத்தில் முதலீட்டாளர், நிறுவனர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு தீர விசாரித்து செபி முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே நிறுவனர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
-karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago