1991
-ம் ஆண்டு இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆண்டு. அந்த வருடம்தான் புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டு வரப்பட்டது. அந்த வருடத்தில் இன்னொரு முக்கியமான விஷயமும் நடந்தது. அது, 70-களில் ரிசர்வ் வங்கியின் 13-வது ஆளுநராக இருந்த எம். நரசிம்மம் பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்த தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்!
சுமார் 26 வருடங்கள் கழித்து, அவரின் பரிந்துரை தற்போது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ‘ஏழு சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் சவுராஷ்டிரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் ஆகிய வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூரையும், ஸ்டேட் பேங்க் ஆஃப் சவுராஷ்டிராவையும் சில ஆண்டுகளுக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கி எடுத்துக்கொண்டது.
இதன் மூலம், முன்பு 26 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை தற்போது, 21 ஆகக் குறைந்திருக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 40 சதவீதம் பேர் மட்டுமே வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். நம் மக்கள் தொகைக்கு ஏற்ப, இன்னும் நிறைய வங்கிகள் தேவை என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில், இவ்வாறு வங்கிகளை இணைப்பது முறைதானா?
அரசு சொல்லும் காரணம்!
இவ்வாறு வங்கிகளை இணைப்பது நம் நாட்டுக்குப் புதிதல்ல. புதிய பொருளாதாரச் சீர்திருத்தத்துக்குப் பிறகு, தனியார் வங்கிகளையும் உள்ளடக்கி, இப்போது வரை 32 வங்கி இணைப்புகள் நடந்திருக்கின்றன.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் படி, பிரிவு 44ஏ-வின் கீழ், தானாக முன் வந்தும் வங்கிகள் இணையலாம். அல்லது பிரிவு 45-ன் படி, கட்டாயத்தின் பேரிலும் வங்கிகள் இணைக்கப்படலாம். மேற்சொன்ன 32 வங்கி இணைப்பு களில், இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இரண்டு பொதுத்துறை வங்கிகள் கட்டாயத்தின் பேரில் இணைக்கப் பட்டன. நியூ பேங்க் ஆஃப் இந்தியாவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்ட அந்த நிகழ்வு 1993-ம் ஆண்டு நிகழ்ந்தது.
மேற்கண்ட வங்கி இணைப்புக்கு, நியூ பேங்க் ஆஃப் இந்தியாவின் நிதி நிலை சரியில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. இப்போது, பாரத ஸ்டேட் வங்கியுடன், அந்த 7 துணை வங்கிகள் இணைக்கப்பட்டதற்கும் அதே காரணம்தான் சொல்லப்படுகிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் மட்டும் இந்த 7 வங்கிகள், மொத்தமாக ரூ.11,865 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்திருக்கின்றன. இது பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
இணைப்பு லாபகரமானதா?
துணை வங்கிகளின் நஷ்டத்தை ஈடுகட்ட இவ்வாறு வங்கிகள் இணைக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த இணைப்புகள் லாபகரமானவையாக இருக்கின்றனவா?
இந்தக் கேள்விக்கான பதில், இணைக்கப்படும் வங்கிகளின் தன்மைக்கு ஏற்றபடி உள்ளன. உதாரணத்துக்கு, நியூ பேங்க் ஆஃப் இந்தியாவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைப்பதற்கு முன், பஞ்சாப் வங்கி லாபகரமாக இயங்கிக் கொண்டிருந்தது. இணைப்புக்குப் பிறகு, அது சுமார் 96 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது. இரண்டு வங்கிகளின் வாராக்கடன் விகிதம் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்பட்டன. மிக முக்கியக் காரணம், இரண்டு வங்கிகளின் பணி கலாச்சாரம்.
இரண்டு வங்கிகளின் செயல்பாடுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும். இரண்டு வங்கிகளின் பணியாளர்களிடத்தில் வித்தியாசங்கள் இருந்திருக்கலாம். இதுபோன்ற விஷயங்களால், அந்த வங்கிகளின் இணைப்பு தோல்வியில் முடிந்தது. தான் அடைந்த நஷ்டத்திலிருந்து மீண்டு வர பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்குச் சில காலம் பிடித்தது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியுடன் நிகழ்ந்திருக்கும் இந்த இணைப்பு வெற்றிகரமாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், அந்த வங்கியின் துணை வங்கிகள் அனைத்திலும் மென்பொருள், பணிக் கலாச்சாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கின்றன.
சவால்கள் என்ன?
இவ்வாறு பொதுத்துறை வங்கி இணைப்புகள் அல்லது தனியார் வங்கியுடனான இணைப்புகள் என இரண்டு வகையான வங்கி இணைப்புகளிலும் பல சவால்கள் உள்ளன.
முதல் சவால், திறமையான ஊழியர்கள். வங்கிகள் இணைப்புக்குப் பிறகு, ஏற்கெனவே இருக்கும் ஊழியர்களுக்குத் தகுந்த பயிற்சிகள் அளிக்க வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் திறமையான ஊழியர்கள், போதுமான அளவில் இல்லாமல் போனால், அந்த வங்கி இணைப்பு பல இன்னல்களைச் சந்திக்கும்.
தனியார் வங்கி இணைப்புகளில் இருக்கும் முக்கிய சவால், ஏற்கெனவே இருக்கும் ஊழியர்கள் பலரை, இணைப்புக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஐ.சி.ஐ.சி.ஐ. – பேங்க் ஆஃப் மதுரா ஆகிய வங்கிகளின் இணைப்பில் இதுதான் நடந்தது. நியூ பேங்க் ஆஃப் இந்தியா – பஞ்சாப் நேஷனல் வங்கி இணைப்பின் போதும் இதுதான் நடந்தது. அதைத் தொடர்ந்து, நியூ பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் பலர், வேலையிழப்பு காரணமாக பஞ்சாப் வங்கியின் மீது வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக, இந்த வங்கி இணைப்பு என்பது, பரஸ்பரம் இரண்டு வங்கிகளுக்கு மட்டுமே பயன் தரக்கூடியதாக மட்டும் இருக்காமல், அதன் வாடிக்கையாளர்களுக்குப் பயன் தரக்கூடியதாகவும் அமைய வேண்டும். உதாரணத்துக்கு, சில வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குவதில் திறமையாகச் செயல்படக் கூடியவையாக இருக்கும். சில வங்கிகள், வாகனக் கடன் வழங்குவதில் சிறப்பாகச் செயல்படக் கூடியவையாக இருக்கும். இப்படியான வங்கிகளை இணைக்கும்போது, அவை, இரண்டு வங்கிகளின் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக அமையும்.
தனியார்மயமாக்கலாமா?
இந்த வாதங்கள் எல்லாம் ஒரு புறமிருக்க, ‘இணைப்பே வேண்டாம். வங்கிகளைத் தனியார்மயமாக்குங்கள்’ என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.
நஷ்டத்தில் இயங்கும் சில பொதுத்துறை வங்கிகளை மீட்க, அவற்றில் மீண்டும் மறுமுதலீடு செய்வதோ அல்லது வங்கி இணைப்புக்குப் பதிலாகவோ, அவற்றைத் தனியார்மயமாக்கினால், சொத்துகளை விற்பது, தனியார் முதலீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நஷ்டத்திலிருந்து மீள, அந்த வங்கிகளே சிறந்த வழிகளைக் கண்டுபிடித்துக்கொள்ளும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். கிராமங்களுக்கும் வங்கி சேவை சென்றடைய வேண்டும் என்ற காரணத்தினால்தான் 1969 மற்றும் 1980-களில் தனியார் வங்கிகள் பல நாட்டுடைமையாக்கப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன் உள்ளிட்ட காரணங்களால் தத்தளித்து வரும் நிலையில் அவற்றைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படியே தனியார்மயமாக்கினால், அந்த வங்கிகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படலாம். அதனால், மக்கள் பாதிக்கப்படலாம் என்ற கருத்துகளும் எழுகின்றன. எது எப்படியோ, வங்கி இணைப்பு அல்லது தனியார்மயமாக்கல் எதுவாக இருந்தாலும், கடனை வாங்கிவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் தப்பிக்கும் பெரிய மனிதர்கள், பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது எப்போதும் சட்டம் பாயாது என்பதுதான் இப்போதைக்கு, சாமானியர்களின் கருத்தாக இருக்கிறது!
- vinothkumar.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago