ஜேஆர்டி டாடாவும் ஏர் இந்தியாவும்...

By எஸ்.ரவீந்திரன்

லகம் உருண்டை என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஏர் இந்தியா நிறுவனத்துக்குப் பொருந்தும். தனியார் நிறுவனமாக இருந்து, பொதுத் துறை நிறுவனமாக மாறி, மீண்டும் யார் அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்களோ அவர்களிடமே வர இருக்கிறது ஏர் இந்தியா.

ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா... சுருக்கமாக ஜேஆர்டி டாடா. அவரால் டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் 1932-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஏர் இந்தியா. இளம் வயதிலேயே விமானம் மீது அலாதிப் பிரியம் ஜேஆர்டி டாடாவுக்கு. 15-வது வயதில் முதன்முதலாக விமானத்தில் பறந்தார். அது 1919-ம் ஆண்டு. சரியாக 10 ஆண்டுகள் கழித்து, 1929-ல் கமர்ஷியல் பைலட் லைசன்ஸை பெற்றார்.

இந்த லைசன்ஸை பெற்ற முதல் இந்தியர் இவர்தான். அடுத்த 3 ஆண்டுகளில் ஆசை பலித்தது. டாடா ஏர்லைன்ஸ் பிறந்தது. ஆரம்ப முதலீடு ரூ.2 லட்சம்தான். 2 பழைய ஹாவில்லாண்ட் புஷ் மோத்ஸ் விமானங்களை வாங்கி களத்தில் இறக்கினார். அப்போது அவருக்கு வயது 29. 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ், கராச்சியில் இருந்து மும்பைக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது. முதலில் சரக்குப் போக்குவரத்துதான்.

ஒற்றை இன்ஜின் கொண்ட அந்த விமானம், 25 கிலோ கடிதங்களை மும்பைக்கு கொண்டு வந்தது. ஜேஆர்டி டாடாவே அந்த விமானத்தை ஓட்டி வந்தார்.

அதன்பின்னர் டாடா ஏர்லைன்ஸ் படிப்படியாக வளர்ந்தது. டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், குவாலியர், போபால் என பல நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தியது. முதல் வெளிநாட்டு சேவையாக இலங்கையின் கொழும்பு நகரத்துக்கு பறந்தது டாடா ஏர்லைன்ஸ். அப்போது மிகப் பெரிய சாதனையாக இந்த பயணம் பேசப்பட்டது. அடுத்து வந்த இரண்டாம் உலகப் போரின்போதும், டாடா ஏர்லைன்ஸ் பெரும் பங்காற்றியது. இடைவிடாமல் பறந்து, பர்மாவில் சிக்கியிருந்த அகதிகளை மீட்டு இந்தியா கொண்டு வந்தது.

டாடா ஏர்லைன்ஸ், 1946-ல் ஏர் இந்தியா நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. பல தனியார் நிறுவனங்களை பொதுத் துறை நிறுவனமாக மாற்றும் எண்ணத்தில் இருந்தார் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவரது பார்வையில் ஏர் இந்தியாவும் சிக்கியது. ஜேஆர்டி டாடாவுக்கு இதில் உடன்பாடில்லைதான். விமான நிறுவனத்தை நடத்தும் அனுபவம் அரசில் யாருக்கு இருக்கிறது, பயணிகள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பாவார்கள் என கேள்வி எழுப்பினார்.

டாடாவை நேரு சமாதானப்படுத்தினார். 1953-ல் ஏர் இந்தியா பொதுத் துறை நிறுவனமானது. வெளிநாட்டு விமானச் சேவைக்கு ஏர் இந்தியா என்றும் உள்நாட்டு சேவைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் என்றும் 2 நிறுவனங்களாக பிரித்து இயக்கலாம் என ஜேஆர்டி டாடா தெரிவித்த யோசனையை நேரு ஏற்றுக் கொண்டார். அதோடு, ஜேஆர்டி டாடாவே தொடர்ந்து நிறுவனத்தின் தலைவராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படி 25 ஆண்டுகள் ஏர் இந்தியாவின் தலைவராக இருந்தார்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நல்ல பெயரை எடுத்திருந்தது ஏர் இந்தியா. அதோடு லாபத்திலும் இயங்கிக் கொண்டிருந்தது. 1977-ல் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். 1978-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி ஜேஆர்டி டாடா தலைவர் பதவியில் இருந்து காரணம் சொல்லாமல் திடீரென நீக்கப்பட்டார். தன் நீக்கத்தை பத்திரிகைகள் மூலம்தான் அவர் தெரிந்து கொண்டார்.

இதில் அவருக்கு மிகுந்த வருத்தம். 2 வாரங்களுக்கு முன்பாகக் கூட அவர் மொரார்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போதாவது தன்னிடம் அது பற்றி கூறியிருக்கலாமே என வருத்தப்பட்டார் ஜேஆர்டி. 1980-ல் இந்திரா காந்தி பிரதமர் ஆனபிறகு, அவரே மீண்டும் ஏர் இந்தியாவின் தலைவரானது தனிக்கதை.

கடந்த1994 வரை நாட்டின் ஒரே விமான நிறுவனம் ஏர் இந்தியாதான். அதன்பின்தான் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்தது. தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் காரணமாக நஷ்டமடைந்தது. முதல் இடத்தில் இருந்து 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், 2-வது இடத்தைப் பிடித்தன.

ஏர் இந்தியா கையை விட்டுப் போன பிறகும், விமான நிறுவன ஆசை டாடா குழுமத்தை விடவில்லை. 2015-ல் மீண்டும் இத்துறையில் நுழைந்தது. இந்த முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா என்ற பெயரில் உள்நாட்டு விமான சேவையை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 50 நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.

இந்த நிலையில்தான் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை எடுத்தது மத்திய அரசு. காரணம் இதுவரை அடைந்துள்ள ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டம். ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடன்.

``ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் இருக்கிறது. இதற்கு வட்டி கட்டவே வருமானத்தில் பாதி போகிறது. இதே நிலை நீடித்தால் நிறுவனமே மூழ்கி விடும். தற்போதைய சூழ்நிலையில், பங்கு விலக்கல்தான் ஒரே வழி. அதுதான் நிறுவனத்துக்கும் நல்லது. ஊழியர்களுக்கும் நல்லது. தனியார் கைக்கு போகும்போது, பணிச்சூழல் கண்டிப்பாக மாறும். திறமைக்கு மதிப்பு கூடும். அந்த சூழலுக்கு ஊழியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது'' என ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருக்கிறார் ஏர் இந்தியா தலைவர் அஷ்வானி லோஹானி.

கடந்த 20 ஆண்டுகளாக பங்கு விலக்கல் பேச்சு எழுந்தாலும் இந்த முறை மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ஆள் கிடைத்தால், ஏர் இந்தியாவை முழுவதும் விற்றுவிட அரசு தயாராக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம், ஏர் இந்தியா பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கும் பட்சத்தில், தனியார் நிறுவனமாக இருந்து, பொதுத்துறை நிறுவனமாக மாறி, மீண்டும் அந்த நிறுவனம் அதை ஆரம்பித்த தனியாரிடமே செல்லும் முதல் நிறுவனமாக ஏர் இந்தியா இருக்கும்.

1990-களில் விமான போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதிக்க முடிவு செய்தது மத்திய அரசு. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் ரத்தன் டாடா. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 40 சதவீத பங்கு முதலோடு, புதிய விமான நிறுவனத்தை தொடங்க முயற்சி மேற்கொண்டார். ஆனால், எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் இந்திய விமான நிறுவனத்தில் முதலீடு செய்ய அனுமதி கிடையாது என அறிவித்தது மத்திய அரசு. இதனால் ரத்தன் டாடாவின் முயற்சி கைகூடவில்லை. மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு டாடா குழுமத்தின் தொழில் எதிரிகள்தான் காரணம் என சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலராக இருந்த மகாராஜ் கிஷன் காவ் பின்னாளில் எழுதிய தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். பலம் வாய்ந்த டாடா குழுமத்தோடு மோத முடியாது என நினைத்த, அப்போது கொடி கட்டிப் பறந்த ஒரு தனியார் விமான நிறுவனம்தான் மத்திய அரசின் புதிய உத்தரவுக்குக் காரணம் என்றும் காவ் கூறியுள்ளார்.

 

1950-களில் விமானப் பயணம் எல்லாம் மிகவும் அரிதான விஷயம். அதனால் ஏர் இந்தியாவில் பயணம் செய்ய வரும் பயணிகளை போட்டோ எடுத்து அதை, மறு நாளே பத்திரிகைகளில் வெளியிடும் வழக்கம் இருந்தது. ஏர் இந்தியாவின் ஆஸ்தான போட்டோகிராபர் மிட்டர் பேடிக்கு இதுதான் தினசரி வேலை. விமானத்தில் பயணிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் அடங்கிய கையேடு கொடுப்பார்கள். படுக்கை, தலையணை வேண்டாம். கோட், சூட் போன்ற ஆடம்பர உடையும் வேண்டாம். சபாரி டிரஸ் போதும். தலைவலி, பாம்பு கடி ஆயின்மென்ட் எல்லாம் எடுத்து வர வேண்டாம் என பல விதிமுறைகள் அதில் இருக்கும்.

 

-ravindran.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்