தனி பாதையில் ரிலையன்ஸ் ஜியோ...

By நீரை மகேந்திரன்

ந்தையை தன்வசப்படுத்துவது என்பது ஒரு புதிய நிறுவனத்துக்கு சாதாரண விஷயமில்லை. போட்டிகள் நிறைந்த சந்தையில், தொடங்கிய ஒரு ஆண்டில் பெரும்பான்மையை பெறுவது அரிதிலும் அரிது. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ அதை செய்து காட்டியுள்ளது. தெளிவான தலைமை, திட்டமிட்ட இலக்கு, விரிவான நெட்வொர்க் போன்றவற்றால் ஜியோ தனி பெரும் நிறுவனமாக உருவாகி வருகிறது என்கிறது ஆய்வுகள். கூடவே சட்டமும் அதற்கு ஒத்துழைப்பாக இருக்கிறது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வர்த்தக ரீதியான சேவையை தொடங்கிய ஜியோவின் தற்போதைய வாடிக்கையாளர் எண்ணிக்கை 12 கோடி. 15 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் ஆதிக்கம் செலுத்திய பல நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதன் உத்திகள் முதலிடத்தை பிடிக்கும் நோக்கில் மிக வலுவாக உள்ளன.

சந்தையைக் கைப்பற்றுவது

இந்தியாவின் ஒட்டுமொத்த டிஜிட்டல் செயல்பாடுகளையும் ஜியோவுக்குள் கொண்டுவர வேண் டும் என்பதுதான் முகேஷ் அம்பானியின் இலக்கு. அதை நோக்கிய ஒவ்வொரு செயல்களையும் மக்களை ஈர்க்கும் விதமாக செயல்படுத்தி வருகிறது நிறுவனம். திருபாய் அம்பானி காலத்திலிருந்தே எதையும் அதிரடியாக அறிவிப்பதுதான் ரிலையன்ஸின் கலாசாரம். அதை முகேஷும் தொடர்கிறார் என்கின்றனர்.

டிஜிட்டல் செயல்பாடுகள் என்பது டேட்டா சேவை, செயலி, போன்கள், குரல்வழி சேவை என அனைத்தையும் கொண்டது. இவை அனைத்திலும் ஒவ்வொரு கட்டமாக ஆர் ஜியோ இறங்கியுள்ளது. ஜியோ செயலி அதன் முதல் கட்டம்.

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் டேட்டா

எதிர்காலத்தை டேட்டாதான் இயக்க உள்ளது என்பது அனைத்து தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு தெரியும். நுகர்வோராக நமக்கும் தெரியும். ஆனால் பிற நிறுவனங்கள் டேட்டா விற்பனை மூலம் கிடைக்கும் தங்களின் சமகால வருமானத்தையும் லாபத்தையும் இழக்க தயாராக இல்லை. இந்த இடத்தைத்தான் ஜியோ கைப்பற்றியது.

தொடக்கத்திலேயே இலவச சேவையை அறிவித்ததன் மூலம் கணிசமான வாடிக்கையாளர்களை கைப்பற்றியது. 2016 டிசம்பர் வரையிலுமான இலவச சேவை 2017 ஜனவரி, மார்ச் என நீட்டித்ததன் மூலம் ஏப்ரல் மாதத்தில் 8 கோடி வாடிக்கையாளர்களை கொண்டு வந்தது. ஜியோவுக்கு பின்னர் இந்தியாவில் டேட்டா நுகர்வு 40% அதிகரித்துள்ளது. தவிர உலக அளவில் அதிக டேட்டா நுகர்வை அளிக்கும் நிறுவனம் என்கிற இடத்தையும் ஆர் ஜியோ பெற்றுள்ளது.

வலுவான நெட்வொர்க்

உடனடியாக அனைத்து பிராந்தியங்களுக்கும் சேவையை கொண்டு சென்றது ஜியோ. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள சேவை தரம் நிலையாக இருக்க வேண்டும். சுமார் 18,000 நகரங்கள், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நெட்வொர்க்கை உடனடியாக கொண்டு சென்றது. 2017 மார்ச் மாதத்துக்குள் 90 சதவீத பகுதிகளை ஜியோ சேவை இணைத்தது. தவிர பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட சுமார் 10 லட்சம் இடங்களில் வைஃ-பை சேவை மையங்களையும் நிறுவியது.

இலவச குரல் சேவை

டேட்டா சேவையை பயன்படுத்துபவர்களுக்கு குரல் வழி சேவையை இலவசமாக அளித்தது. பிற நிறுவனங்கள் இதற்கு தனி கட்டணம் மற்றும் நிபந்தனைகள் வைத்திருக்க ஜியோ இப்போதும் இலவச சேவையாகவே தொடர்கிறது. தவிர ஜியோ எண்ணிலிருந்து வேறு நெட்வொர்க் சேவைகளுக்கு இலவசமாக பேசலாம் என்பதையும் அளிக்கிறது. நீங்கள் வேறொரு நெட்வொர்க்கிற்கு போன் செய்தால் இதற்கான டெர்மினேஷன் கட்டணத்தையும் அந்த நிறுவனத்துக்கு ஜியோ செலுத்துகிறது.

குறைவான கட்டணம்

ஒப்பீட்டளவில் ஜியோ சேவையில் கட்டணங்கள் குறைவு. தொடக்கத்தில் இலவச சேவையினால் ஈர்க்கப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கட்டண சேவைக்கு பிறகும் தொடர்வதற்கு இதுதான் காரணம். மூன்று மாதங்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டாவுக்கு 309 ரூபாய் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. தற்போது அதே திட்டத்துக்கு 399 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. ஆனாலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை. ஜியோவின் இலவச சலுகையை சமாளிக்க பிற நிறுவனங்கள் ஆரம்பத்தில் சிறிய அளவில்தான் சலுகைகளை அளித்தன. தற்போதுதான் ஜியோவுக்கு நெருக்கமாக பிற நிறுவனங்களும் சலுகைகளை அளிக்கத் தொடங்கியுள்ளன.

டெபாசிட் போன்

ஜியோவின் அடுத்த அதிரடி அறிவிப்புதான் விலையில்லா போன். கடந்த சில மாதங்களாகவே ஜியோ ரூ.500க்கு போன் வெளியிட உள்ளது என்கிற யூகம் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விலையில்லாத போனை அறிவித்தார் முகேஷ் அம்பானி. இதுவும் ஜியோவுக்கு சாதகமான அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இதனால் அடிப்படை போன் தயாரிப்பு நிறுவனங்களும் விலையை குறைக்க வேண்டிய அழுத்தம் உருவாகியுள்ளது. ஒரே நாடு ஒரே போன் என்கிற எண்ணத்தை ஜியோ அடையாளப்படுத்தியுள்ளது.

நிபந்தனையற்ற முதலீடு

ஜியோ சேவை தொடங்க நிறுவனம் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்தது. 2020-ம் ஆண்டுக்குள் மேலும் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த நிலையில் வங்கியையோ, முதலீட்டாளர்களையோ நாடாமல் வாடிக்கையாளர்களிடமிருந்தே நிதி திரட்டும் உத்தியை டெபாசிட் திரட்டுவதன் மூலம் உருவாக்கியுள்ளது. போனுக்கான ரூ.1500 டெபாசிட் தொகை வாடிக்கையாளர்கள் அளிக்கும் நிபந்தனையற்ற முதலீடு.

தற்போதைய 12 கோடி வாடிக்கையாளர்களில் 10 கோடி பேர் ஜியோ போனை வாங்கினாலும் நிறுவனம் ரூ.15,000 கோடி திரட்டிவிடும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் போனை ஒப்படைத்தால் இந்த பணம் திருப்பி அளிக்கப்படும் என்கிறது. இது இந்திய வாடிக்கையாளர்களை எளிதில் கவரக்கூடியது.

வரி தவிர்ப்பு

ஜியோ போன் விலையில்லை என்பதால் விற்பனையாக கணக்கிடப்படாது என்றே கணிக்கின்றனர். இதனால் அரசுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையிருக்காது. வாடிக்கையாளர்களிடமிருந்து திரட்டப்படும் டெபாசிட்டுக்கும் வரியோ வட்டியோ கிடையாது. திருப்பி அளித்தாலும் வட்டி கொடுக்கத் தேவையில்லை. போன் விற்பனைக்கு 12 % ஜிஎஸ்டியும் செலுத்த தேவையில்லை. ஜியோ போன் விற்பனை என்கிற வகையில் இல்லாததால் வரி தவிர்ப்பின் மூலம் புதிய வழியை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இது போன்ற உத்திகள் மூலம் தொலைத்தொடர்பு துறையில் மிகப் பெரிய ஒரே நிறுவனமாகும் அனைத்து வாய்ப்புகளும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு உருவாகியுள்ளது. இதர நிறுவனங்கள் ஜியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஒழுங்குமுறை ஆணையம், மத்திய அமைச்சகம் வரையில் புகாரைக் கொண்டு சென்றன. ஆனால் சட்டம் ஜியோவுக்கு சாதகமாக உள்ளதால் போட்டியை சமாளிக்க நிறுவனங்கள் வேறு வழியை யோசிக்க வேண்டியதாயிற்று.

ஜியோவின் தற்போதைய அறிவிப்புக்கு பின்னர் , 18 காலாண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது. தவிர, ஐடியா செல்லுலர் நிறுவனத்தின் காலாண்டு முடிவு நஷ்டமாக உள்ளது. குறைந்த விலை போன்களை தயாரிக்கும் இண்டெக்ஸ், கார்பன், லாவா, மைக்ரோமேக்ஸ், ஐபெல், ஸென் போன்ற நிறுவனங்களும் தங்களது விலையை மேலும் குறைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளன.

வாங்கும் சக்தி கொண்ட நாடுகளின் பட்டியலில் உலக அளவில் இந்தியா 106வது இடத்தில் உள்ளது என்கின்றன புள்ளிவிவரங்கள். ஆனால் தொலைத் தொடர்பு சந்தையின் டேட்டா நுகர்விலோ உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து ஜியோ 5 ஜி சேவைக்கான முயற்சிகளிலும் உள்ளது. இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவை முகேஷின் கைகளில் செல்லும் காலம் தூரமில்லை என்றே தோன்றுகிறது.

- maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்