சபாஷ் சாணக்கியா: பெருசா யோசிக்கணும்...!

By சோம.வீரப்பன்

செ

ன்ற வாரம் வெளியான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் ஜூன் காலாண்டு லாபத்தைப் பார்த்தீர்களா? ரூ 9,108 கோடியாம்! இது சென்ற வருடத்து காலாண்டுடன் ஒப்பிடுகையில் 28% அதிகம்!

மொத்த வருவாயும் இதே காலகட்டத்தில் ரூ.71,451 கோடியிலிருந்து ரூ.90,537 கோடியாக அதிகரித்துள்ளதாம்! நாம் பேசுவது எல்லாம் மூன்று மாதத்துக் கதைங்க! இதுவே ஓர் ஆண்டிற்கு என்றால் நான்கு மடங்காகி விடுமே!

1977ல் ரூ.3 கோடியாக இருந்த லாபம் இந்த 40 ஆண்டுகளில் 10,000 மடங்கு உயர்ந்து 30,000 கோடியாகி விட்டதாங்க!

ஐயா, முக்கியமாக இதைக் கேளுங்க! 1977ல் இதன் பங்குகளில் முதலீடு செய்த ரூ 1,000 இன்று ரூ.16.5 லட்சமாக வளர்ந்துள்ளதாம்!

சபாஷ் முகேஷ் எனச் சொல்லத் தோன்றுகிறதா? இந்தப் பிரம்மாண்ட எண்களுக்கு மூல காரணம் யார்? இதற்கெல்லாம் விதை விதைத்தது யார்? பணக்காரத் தொழிலதிபர்கள் என்றால் டாடா, பிர்லா என்றே சொல்லிப் பழகிய நம்மை,`அம்பானியும் உண்டு இங்கே' என்று சொல்ல வைத்தது திருபாய் அம்பானி தானே?

மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் எதையும் பெரிதாக யோசிக்கணும் எனும் அவரது அணுகுமுறை தானே இந்த மிகப் பெரிய வெற்றிகளுக்குக் காரணம்?

`எப்பொழுதும் பெரிதாய்ச் சிந்தியுங்கள்.வேகமாய், பிறருக்கு முந்தி சிந்தியுங்கள். இதே தருணத்தில், வேறு பலரும் உங்களைப் போலவே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள் என்பதையும் மறந்து விட வேண்டாம் ' எனும் அவரது சித்தாந்தம் கோடி பெரும்!கோடிகள் தரும்!!

`சிங்கத்தின் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம். நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோதான் கிடைக்கும்! ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன், நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும் ' என்பது இதே கருத்தை வலியுறுத்தும் சாணக்கிய மந்திரம் ! தந்திரம்!!

அன்றாட வாழ்க்கையிலும் சரி, தாங்கள் செய்யும் தொழிலிலும் சரி, பலர் எதைச் செய்தாலும் பெரிதாய்ச் செய்ய வேண்டும் ,சிறப்பாய்ச் செய்ய வேண்டும் என்கிற ரீதியில் யோசிப்பதில்லை. ஏதோ முயற்சி செய்வோம், நடப்பது நடக்கட்டும், கிடைப்பது கிடைக்கட்டும் என்கிற மனப்பாங்கில் செய்தால் எப்படிங்க?

குறி வைப்பதே சிறியதற்கு என்றால், பெரியது எப்படி அண்ணே சிக்கும்? எனது நண்பரின் உறவினர் ஒருவர் அமெரிக்காவின் மேயோ மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணி புரிகிறார். உலகின் மிகச் சிறந்த மருத்துவ மனைகளில் ஒன்று அது!தங்களிடம் மொத்தம் எத்தனை நோபல் பரிசு பெற்றவர்கள் பணி புரிகிறார்கள் என அவ்வப்போது கணக்கிட்டுச் சொல்பவர்கள் அவர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

அங்கு வருபவர்கள் உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள். ஆமாம் சும்மா முகப்பரு வந்தால் கூட ஆர்ப்பாட்டம் செய்து ராஜ வைத்தியம், அதாங்க மேயோ வைத்தியம் செய்துகிட்டு போகிறவர்கள்!

ஒரு முறை அரபு நாட்டு இளவரசி ஒருவர் அங்கு வந்து தங்கி குணமாகி விட்டாராம். மிகவும் மகிழ்ந்து போனவர் தம்மைக் கவனித்துக் கொண்ட ஒவ்வொருவருக்கும் பரிசுப் பொருட்களை வாரி வழங்கினாராம். பரிசு என்றால் யாருக்கென்று நினைத்தீர்கள்? மருத்துவருக்கு மாத்திரம் இல்லைங்க! துப்புரவுப் பணியில் இருந்தவர்கள் முதல் அனைவருக்கும்!

அதுவும் சாதாரணப் பரிசு இல்லைங்க. விலை உயர்ந்த ரோலக்ஸ் கைக்கெடிகாரம்!ஒரே வேலையாகவே இருந்தாலும், எங்கு செய்கிறோம் என்பதைப் பொருத்துத்தானேங்க பரிசின் மதிப்பு?

இந்தக் கதையையும் கேளுங்க.1990களில் சாம் பிட்ராடோ பொது தொலைபேசி மூலம் சேவையை விரிவு படுத்திக் கொண்டிருந்தது நினைவிருக்கிறதா? டெலிபோன் எக்சேஞ்சின் மொத்த இணைப்புகளில் 5% பொதுத் தொலை பேசிகளுக்கென்று ஒதுக்கியிருந்தது மத்திய அரசாங்கம்.

எனது நண்பர் ஒருவர் டெலிபோன் பூத்தில் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் தயாரித்து மிகவும் லாபகரமாக நடத்திக் கொண்டிருந்தார் . அப்போது அவர் தொழிற்சாலைக்கு அவரது பால்ய சிநேகிதர் ஒருவர் வந்தார் . நம் நண்பரோ மிகவும் பெருமிதத்துடன் எல்லாவற்றையும் சுற்றிக் காட்டினார். ஆனால் அந்த சிநேகிதர் மாத்தி யோசித்தார்!

`நீ ஏன் இன்னும் பெரியதாக யோசிக்கக் கூடாது ? 5% மிகக் குறைவு . அந்தத் தொடர்பகத்தில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் உபயோகமாகும் ஏதாவது ஒன்றை செய்து 100 % சந்தையைக் குறி வை'என்றார். உண்மைதானே ? மொத்தத் தேவை அதிகமுள்ள பொருட்களை உற்பத்தி செய்தால் தானே நிறுவனத்தின் மொத்த வருமானம் அதிகரிக்கும்?

சாணக்கியரும், திருபாய் அம்பானியும் பிறந்த நாட்டில் வாழும் நாம் ஒவ்வொருவரும் காணும் கனவுகள் பெரியவைகளாகவே இருக்கட்டும்! வானத்தைக் குறி வைத்தால்தானே ஐயா, குறைந்தது கூரையையாவது எட்ட முடியும்?

- somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்