பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏ பட்டதாரி ஒருவரை கண்ணாடி பிரேம் மாட்டும் சிறிய கடையை கவனித்துக் கொள்ளச் சொன்னால் என்ன நினைப்பீர்கள் நீங்கள்... ஆனால் அந்த கடையின் விதியை மாற்றியவரின் கதை இது. பழனியைச் சேர்ந்த கௌதம் சங்கர், தவிர்க்கவியலாமல் அப்பாவின் தொழிலை மேற்கொள்ள வேண்டிய சூழலில், அதை தலைகீழாக மாற்றி தனது திறமையை நிரூபித்துள்ளார். ‘இவ்வளவுதான் வேலை’ என இருந்த கடையை இன்று வெளிநாட்டு ஆர்டர்களை வாங்கும் நிறுவனமான மாற்றிய இவர் தனது அனுபவத்தை ‘`வணிக வீதி’’க்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து...
படித்தது வளர்ந்தது எல்லாம் பழனி. தந்தை சாமி படங்களுக்கு கண்ணாடி பிரேம் மாட்டும் கடை வைத்திருந்தார். பழனியில் மட்டுமே பிசினஸ் என்பதால் பெரிய வருமானம் இருக்காது. இங்குள்ள சாமி பட விற்பனையாளர்களுக்கு அவற்றை கொடுத்துக் கொண்டிருந்தார். கூடவே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் தேர்வு அட்டை (கிளிப் பேட்) தயாரித்து மொத்த வியாபாரிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். ரொம்பவே சின்ன அளவில்தான் செய்து வந்தார். ஐந்து பேர் அவரிடம் வேலை பார்த்தனர். ஓரளவு நடுத்தர குடும்பம் என்பதால் சிரமமில்லாமல்தான் பி.இ. முடித்தேன்.
கேம்பஸ் பிளேஸ்மெண்ட் கிடைத்திருந் தது. 2011ல் வேலைக்கு செல்லத் தயாராக இருந்த நாட்களில், அப்பாவின் கடையை கவனிக்க வேண்டிய சூழல் அமைந்தது. வீட்டின் ஒரே பையன், இதனால் வீட்டை கவனித்துக் கொள்ளவும் அப்பாவுக்கு துணையாக இருக்கவும் முடிவெடுத்தேன்.
ஆனால் அப்பா செய்து கொண்டிருக்கும் வேலைகளையே நானும் செய்து கொண்டிருக்க முடியாது. வருமானம் போதாது என்பது மட்டுமல்ல, போட்டோ பிரேம்களில் ரெண்டு மாடல்களுக்கு மேல் வைத்திருக்கவில்லை. அதிக டிசைன், அதிக விலை கொண்ட பிரேம்கள் எல்லாம் இங்கு விற்பனை ஆகாது என்கிற எண்ணத்தில் அவர் இருந்தார். ஆனால் எனக்கு இது போதாது என்று தோன்றியது. பெரிய அளவில் இறங்கினால்தான் நான் இந்த தொழிலிலேயே ஈடுபட முடியும் என்று எனக்குத் தோன்றியது. பொதுவாக இந்த தொழிலில் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் உள்ள தயாரிப்பாளர்கள்தான் விலையைத் தீர்மானிப்பவர்களாக உள்ளனர். அது போன்ற ஒரு இடத்தை பழனியிலிருந்து நான் உருவாக்க வேண்டும் என திட்டமிட்டேன். இதற்காக ஆறு மாதங்கள் இந்த தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.
பிரேம், கண்ணாடி உள்ளிட்ட மூலப் பொருட்கள் எங்கு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளத் தொடங்கினேன். இதற்காக இந்தியாவின் 24 மாநிலங் களுக்கு பயணம் செய்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களுக்கும் ஆர்டர்கள் பிடிக்க அலைந்திருக்கிறேன். ‘வந்துட்டாங்க.. இதே வேலையா போச்சு’ என்று நம் காதுபடவே பேசுவார்கள் ஆனால் இதுகுறித்து கவலைப்பட்டால் சந்தையை பிடிக்க முடியாது என வேலை பார்ப்பேன். லாபமில்லாமல் அடக்க விலைக்கே ஆர்டர் எடுப்பேன். இதனிடையே கரூர் வைஸ்யா வங்கியின் கடனுதவி கிடைத்ததும் தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடிந்தது.
தற்போது 45 நபர்கள் வேலை செய்கின்றனர். கிட்டத்தட்ட 400 வகையான பிரேம் மாடல்கள் கொண்டு படங்களைத் தயாரிக்கிறோம். நம்ம ஊர் சாமி படங் களுக்கு வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போதுகூட பிரான்சில் உள்ள தமிழர்கள் ஆர்டர் கொடுத்திருக்கின்றனர்.
தவிர தென்மாவட்டங்களில் இப்போது முக்கிய விற்பனையாளராகவும் வளர்ந் திருக்கிறேன்.
இன்னொரு பக்கம் தேர்வு அட்டைகளிலும் புதிய முயற்சிகள் செய்தேன். பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று ஆர்டர் எடுத்தேன். குழந்தைகளின் புகைப்படம், வகுப்பு விவரங்களை அதிலேயே அச்சிட்டு கொடுத்தேன். இதிலும் புது டிசைன்கள், படங்கள் என பிரிண்ட் செய்தேன்.
அதுபோல நகைக் கடைகளில் நகைப் பெட்டியில் தங்களது கடையின் பெயரை அச்சிட்டு கொடுப்பார்கள். இந்த நகைப் பெட்டிகளை அழகான பிரேம்களில் வாடிக்கையாளர்களின் பெயரை அச்சிட்டு கொடுத்தால் ஈர்ப்பாக இருக்கும் என ஐடியாவை சில நகைக்கடைகளில் சொல்ல அதற்கும் நல்ல வரவேற்பு. இப்படி பல புதிய முயற்சிகளில் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு கொண்டு வந்து விட்டேன். இங்கேயெல்லாம் இதெல்லாம் விற்காது என்று அவராகவே முடிவெடுத்தார் அப்பா. ஆனால் நான் பல வாய்ப்புகளை வழங்கி வாடிக்கையாளர்களை முடிவெடுக்க வைத்தேன். இதுதான் எனது வெற்றிக்கு காரணம். பழைய தொழிலாக இருந்தாலும் புதிய சிந்தனைகளால் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக நிற்கிறார் கௌதம்.
maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago