ரியோ 2016 ஒலிம்பிக் போட்டிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழாவில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கின்றன.
ஒலிம்பிக் போட்டியை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று முதலில் நாடுகளிடையே போட்டி தொடங்குகிறது.ஆனால் அனைத்திலும் பிரதானமானது, ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கமாவது பெற வேண்டும் என்பது அனைத்து வீரர்களின் வாழ்க்கை லட்சியமாகவே உள்ளது.
லட்சக்கணக்கானோர் நேரடியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பார்க்கும் ஒலிம்பிக் போட்டிகளில் நிறுவனங்களின் இலக்குதான் என்னவாக இருக்கும்? தங்களது பிராண்டுகளை பிரலப்படுத்திக் கொள்வதே இவற்றின் லட்சியமாக இருக்கிறது.
சர்வதேச அளவில் கிரிக்கெட் அல்லாத மற்ற விளையாட்டு போட்டி அனைத்தும் நடைபெறுவது ஒலிம்பிக்கில்தான். இதனாலேயே நிறுவனங்களும் ஒலிம்பிக் போட்டியைக் குறிவைக்கின்றன.
இதுவரை நடைபெற்ற ஒலி ம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணியினரின் எண்ணிக்கை இம்முறை மிக அதிகம். அதேபோல இந்திய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ஸ்பான்சர் செய்துள்ளன.
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களான டாடா, ரிலையன்ஸ், எடெல்வைஸ், ஜென்பாக்ட், அமுல், அமேசான், எல்ஐசி, ஐஓசி மற்றும் கோககோலா ஆகிய நிறுவனங்கள் வேட்டையில் களமிறங்கியுள்ளன.
முன்பு எப்போதில்லாத வகையில் இந்திய ஒலிம்பிக் கமிட்டியும் (ஐஓசி) ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்களை நிர்வகிப்பதற்கென ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனத்தை நியமித்துள்ளது. இதனாலேயே இந்த ஒலிம்பிக் போட்டியில் 9 பிராண்டுகள் களமிறங்கியுள்ளன.
இதற்கு முன்பு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு அதிகபட்சமாக 2 நிறுவனங்கள்தான் ஸ்பான்சர் செய்துள்ளன.
வீரர்கள் பதக்க வேட்டையில் களமிறங்கியுள்ளனர். நிறுவனங்களோ தங்கள் பிராண்டுகளை பிரபலப்படுத்த களமிறங்கியுள்ளன.
ஒலிம்பிக் போட்டியின் ஸ்பான்சர்களில் ஒன்றான எடெல்வைஸ் நிறுவனம் ஒலிம்பிக் தேசிய கீதத்தை தொலைக்காட்சி விளம்பரங்களில் வெளியிட்டு இந்திய அணி தொடர்பான பிரசாரத்தை மேற்கொண்டது.
கிரிக்கெட் போட்டிக்கு ஸ்பான்சர்கள் கிடைப்பது எளிது ஆனால் மற்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக் தங்க வேட்டை பிரசாரத்தை தங்கள் நிறுவனம் மேற்கொண்டதாக எடெல்வைஸ் நிறுவனத் தலைவர் ராஷெஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து சென்றுள்ள 118 பேரடங்கிய அணியின் முழுமையான காப்பீட்டை ரூ. 1 கோடி செலவில் மேற்கொண்டுள்ளது எடெல்வைஸ் நிறுவனம்.
ஐடி நிறுவனமான ஜென்பாக்ட் முன்னாள் வீரர்களான பிரகாஷ் படுகோன், கீத் சேத்தி ஆகியோருடன் ஒப்பந்தம் செய்துள்ளது இவ்விருவரும் இந்திய மகளிர் ஹாக்கி அணியை ஊக்குவிக்கும் பணியை செய்தனர்.
பன்னாட்டு நிறுவனமான கோக கோலா, ஒலிம்பிக் கிராமத்தில் நடைபெறும் ஊக்கமளிக்கும் விஷயங்களை சமூக வளைதளங்களில் பரப்ப ஒரு குழுவையே அனுப்பியுள்ளது.
ரிலையன்ஸ் குழுவின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர் தனி நபர் ஒலிம்பிக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் வீரர்களை உற்சாகப்படுத்த ரியோவில் முகாமிட்டுள்ளனர்.
டாடா சால்ட் புதிய பிரசாரத்தை ``தேஷ் கி வாட்சே, நமக் கி வாட்சே’’ என்று தொடங்கியுள்ளது. இந்த பிரசாரம் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதாக அமையும் என்று நிறுவனத்தின் சந்தைப் பிரிவுத் தலைவர் சாகர் போக் தெரிவித்துள்ளார்.
இது தவிர, இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி குறித்த ஆய்வையும் டாடா சால்ட் நடத்தியது. இதில் ஒலிம்பிக் போட்டி குறித்து இந்தியர்களின் அறியாமையும் வெளியாகியுள்ளது வேறு விஷயம்.
இந்தியா என்றாலே பன்முக விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய தேசம் என்பது வெளிப்படை. இதனாலேயே விளையாட்டுப் போட்டிகளுக்கு சமீபகாலமாக ஸ்பான்சர்கள் அதிகரித்து வருகின்றன. இந்த முறை ரியோ ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் அதிகாரபூர்வமாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது. இவை தவிர அமேசான், பஜாஜ் எலெக்ட்ரிகல்ஸ், எல்ஐசி, ஐஓசி, அமுல் ஆகிய நிறுவனங்களும் ஸ்பான்சர் களத்தில் குதித்துள்ளன.
அமுல் நிறுவனம் இயற்கையான பால் அளிக்கும் சக்தியை ஒலிம்பிக் போட்டியில் பிரதானமாக விளம்பரப்படுத்துகிறது. தனது அனைத்து பொருள் தயாரிப்பிலும் ஒலிம்பிக் லோகோவை வெளியிட்டு மக்களின் மனதில் இடம்பிடிக்க நினைத்துள்ளது.
வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, மகளிர் அணியைச் சேர்ந்த ராணி ராம்பால், தடகள வீராங்கனை பூவம்மா ஆகியோருக்கு ஸ்பான்சர் செய்துள்ளது காலணி தயாரிப்பு நிறுவனமான நைக். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடனமாடியுள்ள ‘டாடா டிங்’ எனும் வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளது. யூ டியூபில் வெளியான இந்த வீடியோவை இதுவரை 72 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்தியாவில் தங்களது பிராண்டுகளை விளம்பரப்படுத்த நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்வது ஒருபுறம் இருந்தாலும், இப்போது போட்டி நடைபெறும் ரியோவில் தங்களை பிரதானப்படுத்திக் கொள்ள நிறுவனங்கள் போட்டி போடத் தவறவில்லை.
பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்கள் மூலமாக பிரபலப்படுத்திக் கொள்வது ஒருபுறம் இருந்தாலும், போட்டி நடைபெறும் மைதானங்களைச் சுற்றி போட்டியைக் காண வரும் ரசிகர்களைக் கவரும் முயற்சியிலும் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒமேகா நிறுவனம் கடற்கரையோரமாக ஒரு கலாசார மையத்தை உருவாக்கியுள்ளது. இந்த அரங்கில் பிரபல மாடலான அலெக்சாண்ட்ரா அம்புரோசியோ மற்றும் விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின் ஆகியோரையும் இங்கு அழைத்து பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
விசா நிறுவனம் கைப்பட்டை, மோதிரம் உள்ளிட்டவற்றை இங்கு வருபவர்களுக்கு அளித்து விளம்பரம் தேடுகிறது. உணவு விடுதிகளில் இன்னிசை கச்சேரிகள் தொடர்ந்து நடத்துகிறது.
நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த முயற்சிக்கும் அதேவேளையில் கோக கோலா, கெல்லாக்ஸ், மெக்டொனால்ட் ஆகிய உணவு மற்றும் குளிர் பானங்கள் குறித்து விமர்சனங்களை பொதுநலன் விரும்பிகள் விமர்சித்துள்ளனர்.
ஜங்க் ஃபுட் என மருத்துவத்துறை சுட்டிக் காட்டும் இத்தகைய உணவு, குளிர்பானங்களை ஒலிம்பிக் போட்டி வாயிலாக பிரபலப்படுத்துவது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளைக் காண்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு முறையும் அதிகரித்துக் கொண்ட வருவது கண்கூடு. 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை 10 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். இம்முறை இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது
ஒரு நாட்டின் வளர்ச்சியானது அந்நாட்டின் பொருளாதாரம், அங்கு நிலவும் அரசியல் சூழல் ஆகியவற்றால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த நாடு விளையாட்டுத் துறையில் எப்படி பரிமளிக்கிறது என்பதும் ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் விளையாட்டில் இந்தியா பின்தங்கியிருந்தாலும், தொடர்ந்த பங்கேற்பும், பதக்க வேட்கையும் நிச்சயம் வரும் ஒலிம்பிக் போட்டிகளில் வசப்படும்.
விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் வெல்வது இலக்கு மாதிரி விளையாட்டில் நிறுவனங்கள் தங்களது பிராண்டை பிரபலப்படுத்துவம் தவறில்லை. அதேசமயம் விளையாட்டு வீரர்களை நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிப்பதையும் இலக்காகக் கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago