பதஞ்சலியின் ஏகபோகம் நல்லதா?

By நீரை மகேந்திரன்

“பதஞ்சலி பொருட்களை பயன்படுத்தாதவர்கள் இந்த தேசத்தின் வளர்ச்சியை தடுக்கிறார்கள்.’’

இப்படியான பத்திரிகை விளம்பரங்களையோ, செய்திகளையோ மிக விரைவில் எதிர்பார்க்கலாம். அந்த அளவுக்கு பதஞ்சலியின் விளம்பரங்கள் மிக சமீப காலமாக வரத் தொடங்கி உள்ளன. விளம்பரம் மாத்திரமல்ல, அதன் விற்பனை தந்திரங்களும் அதை நோக்கியே உள்ளன.

இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் சிறியதும், பெரியதுமாக இயங்கினாலும் தங்கள் தயாரிப்புகளின் தரத்தை மட்டுமே நம்பி அவை வியாபார உத்திகளை அமைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் பதஞ்சாலியின் பாதையோ தேசபக்தி, சுதேசி எண்ணம் கொண்டவர்கள் பதஞ்சலியை வாங்குவார்கள் என்கிற நூதனமான உத்தியை கையாளுவதாக உள்ளது.

2008-ம் ஆண்டு யோகக் கலை குரு பாபா ராம்தேவால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு விற்பனை ரூ.10,000 கோடி. நிறுவனத்தின் விற்பனை ஆண்டுக்கு 150 சதவீதம் உயர்ந்து வருகிறது. இந்திய நுகர்பொருள் நிறுவனங்களில் 2 வது இடத்தில் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய பெரு நிறுவனங்களும் இந்திய நுகர்பொருள் சந்தையை கட்டுப்படுத்திவரும் நிலையில் 10 ஆண்டுகளில் ஒரு நிறுவனம் இரண்டாவது இடத்துக்கு வருவது சாதாரண வளர்ச்சியில்லை. உள்நாட்டு மூலதனத் தொழில்களை ஊக்குவிக்கும் அதேநேரத்தில்தான் இந்தியாவில் திறந்த பொருளாதார கொள்கைகளுக்காக சட்டங்களும் திருத்தப்படுகின்றன. இந்த நிலையில்தான் பதஞ்சலியின் உத்திகள் கவனிக்கத் தூண்டுகின்றன.

``என் பெற்றோர்கள் பாபா ராம்தேவை பின் தொடர்கின்றனர். அதனால் இந்த பொருட்களை உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது.’’

பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள `மேக் இன் இந்தியா’ அடையாளம் கொண்ட தயாரிப்புகளாக உள்ளது.’’

`இந்திய நிறுவனம் அதனால் வாங்குகிறோம். ’’

``ஆயுர்வேதம் இந்திய பாரம்பரியம்.’’

இந்த அடிப்படையிலான சந்தையைத்தான் பதஞ்சலி சமீப காலத்தில் உருவாக்கி வருகிறது.

பொருளின் தேவை, தரம் இவற்றின் அடிப்படையில் பிற நிறுவனங்கள் போட்டியில் இருக்க, பதஞ்சலியின் விற்பனை ரூ.10,000 கோடி, ஆன்மிகத்தையும், அரசையும், மக்களின் தேச நலனையும் முன்னிறுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சுதேசி தயாரிப்பு என்கிற முத்திரையை நிறுவனம் தவறாது பயன்படுத்துகிறது. இந்த முத்திரைதான் சில ஆண்டுகளிலேயே இரண்டாம் இடத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

அதேநேரத்தில் பதஞ்சலியின் தயாரிப்புகள் மீது மக்கள் தொடர்ச்சியாக புகார் அளித்தவாறும் உள்ளனர். பதஞ்சலி தயாரிப்புகளான பவர் வீட்டா, தேன், நெய், பால் பவுடர் எல்லாவற்றிலுமே வாடிக்கையாளர்களின் புகார்கள் இணையத்தில் நிரம்பி வழிகின்றன.

பதஞ்சலி கோதுமை மாவில் மருந்து வாடை வருவதாக குறிப்பிடுகிறார் ஒரு குடும்பத்தலைவி.

2016-ம் ஆண்டு தொடக்கத்தில் லக்னோவைச் சேர்ந்த யோகேஷ் மிஸ்ரா என்பவர் பதஞ்சலி மீது வழக்கு தொடுத்துள்ளார். பதஞ்சலியின் நெய் பாக்கெட்டில் பூஞ்சை படர்ந்துள்ளது என இவர் குற்றம் சாட்டியுள்ளார்.

2012-ம் ஆண்டில் பதஞ்சலியின் கடுகு எண்ணெய், அன்னாசி ஜாம், உப்பு, தேன் உள்ளிட்ட பொருள்கள் தரமற்றவை என ருத்ராபூரில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தர நிர்ணயத்துக்குள் இல்லை என அப்போது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்திய ராணுவத்தினருக்கு மானிய. விலையில் பொருள்களை விற்பனை செய்யும் அங்காடியில் (Canteen Stores Department (CSD) பதஞ்சலி நெல்லி சாறு தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொல்கொத்தாவில் உள்ள உணவு ஆய்வு மையத்தில் சோதனை செய்ததில் தரமற்றது என தெரிய வந்ததாக சிஎஸ்டி கூறியுள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளின் தரம் குறித்து தொடர்ச்சியாகவே கேள்விகள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. இணையத்தில் பதஞ்சலி என தேடினால் பயன்படுத்தியவர்களின் அனுபவம் எல்லாம் நிறுவனத்துக்குச் சாதகமாக இல்லை.

பதஞ்சலி நூடுல்ஸ் அறிமுகப்படுத்திய போதும் இப்படியான பல குழப்பங்கள் எழுந்தன. நெஸ்லே நூடுல்ஸ் தரம் குறித்து நாடு முழுவதும் அச்சம் எழுந்தபோது பதஞ்சலி தனது நூடுல்ஸை சந்தையில் இறக்கியது. குறிப்பாக 2015 நவம்பர் மாதத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சான்று நிறுவனம் பதஞ்சலி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. முறையான லைசென்ஸ் இல்லாமல் பதஞ்சலி நூடுல்ஸ், பாஸ்தா விற்பனைக்கு அனுப்பியதற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரித்வார் நீதிமன்றம் பதஞ்சலிக்கு 11 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. பதஞ்சலி நிறுவனம் மக்களுக்கு தவறான விளம்பர வழிகாட்டுதலை அளிக்கிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. பதஞ்சலியின் பொருட்கள் பல்வேறு இடங்களில், பல்வேறு நபர்களால் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பதஞ்சலி தங்களது சொந்த ஆலையில் உற்பத்தி செய்வதாக மக்களுக்கு விளம்பரப்படுத்துகிறது என்பதை நீதிமன்றம் உறுதி செய்து இந்த அபராதத்தை விதித்துள்ளது.

உள்நாட்டுத் தயாரிப்பு என பெருமைப்பட விளம்பரப்படுத்தும் பதஞ்சலி தங்களது விற்பனைக் கொள்கைகளில் அதைக் கடைப்பிடிப்பதில்லை என்கிறார் ராய்ப்பூரைச் சேர்ந்த தீபக் தேவ்.

நுகர்வோருக்கு பொருள்கள் திருப்தி இல்லையெனில் மாற்றிக் கொடுக்க வேண்டும் என்கிறது நுகர்வோர் சட்டம். ஆனால் பதஞ்சலி தனக்கு என்று தனிச் சட்டம் வைத்துள்ளது என்கிறார் தீபக் தேவ்.

இந்தியாவில் ஆயுர்வேத தயாரிப்புகள் என்று டாபர், இமாமி, ஹம்தர்த் என பல தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கெனவே சந்தையில் உள்ளன, ஆனால் இந்த நிறுவனங்களுக்கு இல்லாத விளம்பர முகம் பதஞ்சலிக்கு உள்ளது, அது பாபா ராம்தேவ். யோகக் கலையின் இந்திய அடையாளமாக பாபா முன்னிறுத்தப்படுகிறார். அவரின் அடையாளமாக பதஞ்சலி உருவாகி வருகிறது. உறுதியான ஒற்றை அடையாள உருவாக்கத்தில் பதஞ்சலியும் தன் பணியைச் செய்கிறது. தற்போது இந்தியாவில் உள்ள பிற நிறுவனங்கள் என்ன செய்யத் தவறின என்பதை யோசித்து வருகின்றன.

ஆனால் டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற குழுமங்கள் இந்தியாவில் உருவாகி சர்வதேச அளவில் தங்கள் தொழிலை விரிவுபடுத்தியுள்ளன. இந்த நிறுவனங்கள் பெற்றுள்ள நம்பகத்தன்மை ஒற்றை அடையாள உருவாக்கத்துக்கானது அல்ல. தங்களது போட்டியாளர்களிடமிருந்து தரத்திலும் தயாரிப்பிலும் வேறுபட்டதனால்தான்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் நுகர்பொருள் சந்தையிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களை அப்புறப்படுத்துவோம் என்று சமீபத்தில் பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார். யுனிலீவர், நெஸ்லே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தைக்கு ஏற்பவே செயல்பட்டு வருகின்றன என்பது ஒருபக்கம் இருந்தாலும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக சுதேசி நிறுவனமும் நூடுல்ஸ், ஓட்ஸ், பாஸ்தா என வெளிநாட்டு உணவு ரகங்களை தயாரிக்க இறங்கினால் அதை தேச நலன் என்று அடையாளப்படுத்த முடியுமா?

பாபா ராம்தேவ் சொல்வது போல ஐந்து ஆண்டுகளில் பதஞ்சலியே அனைத்து தயாரிப்புகளிலும் ஏகபோகமாக இருக்கும் என்பது எப்படி சாத்தியம் என்பதை அவரே விளக்க வேண்டும். ஒருவேளை ஒரே பிராண்ட் ஏகபோகம் உருவாகுமெனில் அது தேசத்துக்கு நல்லதா?

- maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்