உன்னால் முடியும்; தோல்வியில் உங்களோடு இருப்பது யார்?

By செய்திப்பிரிவு

விரும்பி இறங்கிய தொழிலில் மிகப் பெரிய தோல்வியும் அதிலிருந்து மீண்டு, மீண்டும் அதே தொழிலில் தனக்கான அடையாளத்தையும் உருவாக்கி நிலை நிறுத்திக் கொண்டவர் கோபிநாதன். சென்னை அமைந்தகரையில் ஹவுஸ் கீப்பிங் துறை சார்ந்த பொருட்களை தயாரித்து வரும் இவர் தனது தொழிலில் கடந்து வந்த பாதையை இந்த வாரம் `வணிக வீதி' வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து…

சென்னைதான் பூர்வீகம், அப்பா கார் பெண்டராக இருந்தார், நான் பிகாம் முடித்து விட்டு காவல்துறை பணிக்குச் செல்வது தான் எனது இலக்காக இருந்தது. ஏனென்றால் கல்லூரி காலத்தில் என்சிசியில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக எனக்கான நேர்காணல் கடிதத்தை தபால்காரர் பத்து நாட்களுக்கு பிறகுதான் கொண்டு வந்து கொடுத்தார். இதனால் விரக்தியில் சில நாட்கள் எந்த வேலைகளிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தேன்.

இந்த சந்தர்ப்பத்தில் என்னோடு என்சிசியில் இருந்த மூன்று நண்பர்கள் ஹவுஸ் கீப்பிங் பொருட்களான ரூம் பிரஷ்னர் உள்ளிட்ட பல பொருட்களை விநியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலைகளில் இருந்தனர். மும்பையிலிருந்து வந்த அந்த பொருட் களை இங்கேயே தயாரிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் சொந்தமாக இறங்கலாம் என ஆலோசித்தோம். இதற்கான இயந்தி ரங்கள், அச்சு போன்றவற்றை எங்களது முயற்சியிலேயே தயாரித்தோம். எனது வீட் டின் மொட்டை மாடியில் தொடங்கிய இந்த வேலைகள் சில முயற்சிகளுக்கு பிறகு ஒரு முழுமையான வடிவத்துக்கு வந்தது.

நண்பர்கள் மூவரும் மார்க்கெட்டிங் வேலைகளைக் கவனித்துக் கொள்வது, நான் தயாரிப்பு, அலுவலக வேலைகளைப் பார்ப்பது என பிரித்துக் கொண்டோம். ஏனென்றால் நான் திக்கி திக்கி பேசுவேன் என்பதால் மார்க்கெட்டிங் ஒத்துவராது என இதர வேலைகளை எடுத்துக் கொண்டேன். தொழிலில் சில ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி இருந்தது. அடுத்த ஆறு ஆண்டுகளில் சொந்த கட்டிடத்தில் மாறும் அளவுக்கு வளர்ந்தோம்.

இந்த கட்டத்தில் எல்லோருமே மார்க் கெட்டிங்கிற்கு செல்வோம். சுழற்சி முறை யில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதம் அலுவலகத்தை கவனித்துக் கொள்வோம் என முடிவெடுத்தோம். இதன் பிறகு நானும் மார்கெட்டிங் செல்ல தொடங்கினேன். வழக்கமாக ஓட்டல்கள், மால்கள், தியேட்டர்கள் என எங்களுக்கான நிரந்தர சந்தை இருந்தாலும், 2000 -ம் ஆண்டுக்கு பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருந்த கால கட்டம் என்பதால் எங்களது பொருட்களுக்கான தேவை அதிகரித்தபடியே இருந்தது.

பொருட்களின் தேவைக்கேற்ப கோயம் புத்தூரில் ஒரு உற்பத்தி மையத்தையும் தொடங்கினோம். இதற்கிடையில் மார்க்கெட்டிங் செய்வதற்கு ஏற்ப ஊதியம் எடுத்துக் கொள்வது என நாங்கள் எடுத்திருந்த முடிவுபடி எனக்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக அதிக ஊதியம் வந்தது. அந்த அளவுக்கு மார்க்கெட்டிங் வேலைகளில் தீவிரமாக இருந்தேன். இதன் காரணமாக எங்களுக்குள் முரண்பாடுகள் எழுந்தன. பத்து ஆண்டுகளுக்கு மேல் குழந்தைபோல வளர்த்த அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் எழுந்தது. சில மாதங்கள் எந்த வேலையும் ஓடவில்லை. ஏனென்றால் அந்த தொழிலில் முதல் நாள் தொடங்கியபோது என் அப்பாதான் முதன் முதலில் மூலப்பொருளை அள்ளி அச்சில் போட்டு வாழ்த்தியவர். எங்கள் வீட்டு மாடியில்தான் ஆறு ஆண்டுகள் வாடகை இல்லாமல் நிறுவனத்தை நடத்தினோம்.

சில நாட்களுக்கு பிறகு மீண்டும் பழைய வேகத்தோடு இறங்கினேன். ஏற்கெனவே எனது நட்புக்காக இருந்த வாடிக்கையாளர்களோடு, புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கவும் முன்பை விடவும் பல மடங்கு வேகத்தோடு உழைக்கத் தொடங்கினேன். ரூம் பிரஷ்னர் தவிர தரையை சுத்தம் செய்யும் துடைப்பான் உள்ளிட்டவையும் செய்யத் தொடங்கினேன். இவற்றோடு வாடிக்கையாளர்கள் பல தூய்மைப் பணி பொருட்களையும் வாங்குவார்கள் என்ப தால் 3எம், ஜான்சன், அங்கர் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தயாரிப்புகளையும் விநியோக உரிமை வாங்கி கொடுத்து வருகி றேன். தனி ஆளாக மீண்டும் தொடங்கிய தொழிலில் இப்போது 8 பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளேன்.

இந்த துறை ரசாயன கலப்பிலிருந்து ரசாயனம் சேர்க்காத மூலப் பொருள் நோக்கி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டி ருக்கிறது. அதுபோல மேலை நாடுகளில் ஜெல் வடிவில் வந்துவிட்டது. அதற்கான தயாரிப்பு ஆராய்ச்சி வேலைகளையும் செய்து வருகிறேன். தோல்வியிலிருந்து மீள வைத்தது மட்டுமல்ல, எனது எல்லா முயற்சிகளுக்கும் மனைவி பக்கபலமாக நிற்கிறார். ஒரு தோல்வியில் கற்றுக் கொள்ள ஆயிரம் பாடம் இருக்கிறது. முதல் பாடம் உங்களோடு யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதுதான் என்று தனது அனுபவத்திலிருந்து விளக்குகிறார் கோபிநாதன்.

- vanigaveedhi@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்