எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா பேமென்ட் வங்கிகள்?

By நீரை மகேந்திரன்

ஓட்டலில் சாப்பிட்ட உணவுக்கு கையிலிருந்து பணம் கொடுப்போம். அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணத்தைக் கொடுப்போம். ஆனால் வங்கி கணக்கு எண்ணைக் கொடுத்து பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும். மின்னணு பரிவர்த்தனைகளின் அடுத்த கட்டமாக இந்த வசதியை அளிக்க உள்ளன பேமென்ட் வங்கிகள். டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு, மொபைல் வாலட், நெட்பேங்கிங், போன் பேங்கிங் போன்ற மின்னணு முறைகளைத் தாண்டி, அதற்கும் மேலான வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று பேமென்ட் வங்கி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

பெட்டிக்கடையில் பணம் டெபாசிட் செய்யலாம், மொபைல் வாலட்டையே பேங்க் பாஸ்புக்காக பயன்படுத்தலாம். உங்களது மொபைல் எண் தான் வங்கிக் கணக்கு எண். காகித ஆவணங்கள் எதுவும் இல்லை. கணக்கு தொடங்க ஆதார் எண் மட்டும் போதும். அதுக்கு மேலாக பேமென்ட் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான வட்டி மிக மிக அதிகம். வழக்கமான வங்கி நடைமுறைகள் எதுவும் இல்லாமல் புதுமையான வங்கிச் சேவையாக பேமென்ட் வங்கிகள் உருவாக உள்ளன. இந்த வங்கிகளை தொடங்குவது தனியார் நிறுவனங்கள் என்பதால், வாடிக்கையாளர்களை கவரும் போட்டியில் புதுப்புது சலுகைகளும் வரலாம். அதன் முதல் அத்தியாயத்தை தொடங்கியுள்ளது ஏர்டெல் பேமென்ட் வங்கி.

ஏற்கெனவே ராஜஸ்தானில் தொடங்கப்பட்டிருந்த ஏர்டெல் பேமென்ட் வங்கி சேவை சமீபத்தில் இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது அந்த நிறுவனம். 29 மாநிலங்களில் தங்களது 2,50,000 சில்லரை வர்த்தக மையங்கள் வழியாக இந்த வங்கிச் சேவையை கொண்டு சேர்க்க உள்ளது. அதாவது ஏற்கெனவே தங்களது சில்லரை வர்த்தக மையங்கள் (ஏர்டெல் ஸ்டோர்ஸ்) வழியாக இந்த சேவையை வழங்க உள்ளது. இந்த மையங்கள் வங்கிக் கிளைகள் போல செயல்படும் என்று சுனில் பார்தி மிட்டல் கூறியுள்ளார். இதற்காக ஏர்டெல் ரூ.3,000 கோடி முதலீடு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள ஏடிஎம் மையங்களைவிட ஏர்டெல் ரீடெய்ல் ஸ்டோர்ஸ் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர ஏர்டெல் 5 லட்சம் வர்த்தக நிறுவனங்களையும் தங்களது பேமென்ட் வங்கி தொடர்பில் இணைக்க உள்ளது. தற்போது 1 லட்சம் வர்த்தகர்களை இந்த வலைபின்னலுக்குள் கொண்டு வந்துள்ளது. பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள், மருந்து கடைகள், ஓட்டல்களை இணைக்க உள்ளது. இந்த கடைகள் ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கிலிருந்து வாடிக்கையாளர்கள் அளிக்கும் தொகையை ஏற்றுக் கொள்வதற்கன கட்டமைப்பை இதன் மூலம் உருவாக்க உள்ளது.

ஏற்கெனவே வாலட் சேவையை அளித்து வரும் பேடிஎம் நிறுவனமும் பேமெண்ட் பேங்காக மாறுகிறது. இதற்கான செயல்பாட்டு அனுமதியை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. இந்த நிலையில் பேடிஎம் வாலட்டில் சேவை தொடர்ந்து கிடைக்குமா? பேடிஎம் வாலட்டில் உள்ள பணம் தொடர்ந்து வாலட்டிலேயே இருக்குமா? அல்லது பேடிஎம் பேங்க் டெபாசிட்டாக மாறிவிடுமா என்கிற குழப்பத்தில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

பேடிஎம் வாலட்டில் பணம் வைத்திருப்பவர்கள் பேடிஎம் நிறுவனத்தில் இருந்து பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். இதனால் வாடிக்கையாளர்களின் பணத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என இந்த நிறுவனத்தில் செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது பேடிஎம் வாலட்டில் நாம் வைத்திருக்கும் பணம், பேமெண்ட் வங்கிக்கு மாறும்போதும் அதே மதிப்பில்தான் இருக்கும். ஆனால் வங்கி விதிமுறைகள்படி ஆதார் எண் கொடுத்து வங்கிக் கணக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். பேடிஎம் வாலட்டில் கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு தானாகவே பேடிஎம் பேமெண்ட் வங்கியில் புதிய கணக்கு கிடைத்துவிடாது

எப்படி தொடங்குவது

ஏர்டெல் பேமென்ட் பேங்க் கணக்கை ஏர்டெல் சில்லரை வர்த்தக மையங்களில் தொடங்கலாம். ஆதார் எண் மட்டும் போதும். ஆதார் எண்ணை கொடுத்து ஒரு சில சில நிமிடங்களில் பேமென்ட் வங்கி கணக்கை திறக்கலாம். வாடிக்கையாளரின் மொபைல் நம்பர்தான் வங்கிக் கணக்கு எண் என்பதால் காகிதங்கள் சார்ந்த எந்த வேலையும் இருக்காது. இந்த கணக்கிலிருந்து இந்தியாவில் எந்த வங்கிக்கும் பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இதற்கு பரிமாற்ற கட்டணம் இருக்கும். ஆனால் ஏர்டெல் பேமென்ட் வங்கி கணக்குகளுக்குள் பரிமாற்றம் செய்ய கட்டணங்கள் கிடையாது. யுஎஸ்எஸ்டி அல்லது ஐவிஆர் வசதிகளை பயன்படுத்தி தங்கள் கணக்கில் உள்ள இருப்பையும் தெரிந்து கொள்ளலாம்.

வட்டி விகிதம்

ஏர்டெல் பேமென்ட் வங்கி, பிற வங்கிகளின் வட்டி விகிதத்தைக் காட்டிலும் அதிகபட்ச வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிறகு ஆண்டு வட்டியாக 7.25% வட்டி விகிதம் வழங்கும் என்ற கூறியுள்ளது. ஆனால் சேமிப்பு தொகையை வைப்பு தொகையாக வைக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இல்லை. பேடிஎம் நிறுவனம் தனது பேமென்ட் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான வட்டி விகிதத்தை தற்போதுவரை அறிவிக்கவில்லை. ஏர்டெல் பேமென்ட் வங்கி வழங்கும் வட்டிக்கு போட்டியாக கணிசமான வட்டி விகிதத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகைகள்

ஏர்டெல் ஒவ்வொரு சேமிப்பு கணக்கு தொடங்கும்போதும் வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சத்துக்கு விபத்து காப்பீடு வழங்குகிறது. தவிர சேமிப்பு கணக்கு தொடங்கும் வாடிக்கையாளருக்கு முதல் முறை மட்டும் ஒரு ரூபாய்க்கு ஒரு நிமிடம் இலவச டாக் டைம் வழங்குகிறது. அதாவது 100 ரூபாய் டெபாசிட் செய்தால் 100 நிமிடம் இலவச டாக் டைம் சேவையை அளிப்பதாக அறிவித்துள்ளது. பேடிஎம் சலுகைகள் குறித்து அறிவிக்கவில்லை என்றாலும் ஏற்கெனவே வாலட் மூலம் அளிக்கும் சலுகைகள் தொடரலாம்.

ஏற்கெனவே வங்கிகள் அளித்து வரும் சேவைகளில் மின்னணு முயற்சிகள் தீவிரமாக இருந்துவரும் நிலையில், மின்னணு வங்கியாகவே பேமென்ட் வங்கிகளின் தொடக்கம் அமைந்துள்ளன.

இந்த நிலையில் இந்திய அஞ்சல்துறை தொடங்கும் பேமென்ட் வங்கி நடைமுறைக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள 1,54,000 தபால் அலுவலகங்களும் பேமென்ட் வங்கிகளாக செயல்படும். இதில் கிராமப்புறங்களில் உள்ள 1,30,000 அஞ்சலகங்களும் வங்கிகளாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வங்கிச் சேவையில் அடுத்த கட்டமாக பேமென்ட் வங்கிகள் இருக்குமா? ‘கிராமப்புற மக்களுக்கான’ என்கிற முழக்கத்தில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

- maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்