குறள் இனிது: பேச்சில் கவனம் வேணும்..!

By சோம.வீரப்பன்

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்

(குறள்: 712)

எனது நண்பர் ஒருவர் சென்னை வங்கி ஒன்றின் கிளை மேலாளர். வங்கியின் வளர்ச்சிக்காக ஓயாது உழைப்பவர். வைப்பு நிதி கேட்பதில், அவர் காலையில் நடைப் பயிற்சிக்கு வருபவர்களைக் கூட விட்டு வைப்பதில்லை!

ஆனால் அரசாங்கத்திலும் சரி, சமூக சேவை செய்யும் நிறுவனங்களிலும் சரி, உயரதிகாரிகளைப் பார்ப்பது அவருக்குக் கடினமாக இருந்தது. தன்னை அவர்கள் மதிப்பதில்லை, எனக் கவலைப்பட்ட அவர், தனது உயரதிகாரியான கோட்ட மேலாளரை அழைத்துச் சென்று வாடிக்கையாளர்களைப் பார்க்க முடிவு செய்தார்.

கோட்ட மேலாளரின் பெயரா? குமார் தான். இல்லைன்னா விட மாட்டீங்களே!

குமார் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம்! வெள்ளை நிறமுடைய எந்த வெளி நாட்டவரைப் பார்த்தாலும் நம்மில் பலரும் அவரை ஆங்கிலேயர் என்றே நினைப்போம். ஆனால் குமாரோ இத்தாலியர், பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர் என்று அவர்களைப் பார்த்த உடனேயே சொல்லி விடுவார்! ஆப்பிரிக்க ஐரோப்பிய வரலாறுகளைக் கூடக் கரைத்துக் குடித்தவர்!

நம்ம நண்பர் ஒரு பெரிய தொண்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரியைப் பார்க்க குமாருடன் சென்றார். குமார் வங்கியின் வளர்ச்சிக்கு அந்தத் தொண்டு நிறுவனங்கள் போன்றவர்களே காரணம் என்றார். நிறுவன அதிகாரி மகிழ்ந்து போனார். புதிதாய் 10 லட்சம் ரூபாய் போடுவதாகச் சொன்னார்.

தேநீர் வர நேரமானதால் பேச்சு தொடர்ந்தது. மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கொடியைக் கவனித்த குமார் அதைக் கையில் எடுத்தார்.

உடனே அந்த அதிகாரி தான் ஒரு ஆப்பிரிக்க நாட்டிற்கு கௌரவத் தூதர் என்றும் அந்த நாட்டின் கொடி இது என்றும் பெருமையாகக் கூறினார். குமார் உடனே இந்தக் கொடியின் வரலாறு தெரியுமா எனக் கேட்டார். அவர் தற்போதுள்ள அரசாங்கத்தில் உள்ளவர்கள் போராடிப் பெற்ற வெற்றியின் நினைவாகச் சில வர்ணங்கள் சேர்க்கப்பட்டதாகச் சொன்னார்.

ஆரம்பித்தது வினை! குமார் அந்தப் போராட்டமே நியாயமற்றது என்றார். அதற்கான பல விபரங்களையும் தேதி வாரியாகச் சொன்னார். அந்த அதிகாரியோ பாவம், தனக்குத் தெரிந்த சிலவற்றைச் சொல்லி அப்போதிருந்த அரசாங்கம் நல்லதே எனச் சொல்லி பேச்சை முடிக்கப் பார்த்தார். கிளை மேலாளர் தேநீர் வேண்டாம் ,நேரமாயிற்று கிளம்புவோம் எனச் சொல்லிப் பார்த்தார். ஆனால் குமாரோ தொடர்ந்து வாதாடினார்.

குமார் சொல்லிய விபரங்களும் கருத்தும் சரியானவையாகவே இருந்தாலும், போன வேலையை விட்டு விட்டு அவர் அந்தப் பஞ்சாயத்துக்குப் போனது சரியா? அவர்கள் திரும்பிய பின், முன்பிருந்த வைப்பு நிதிகளும் இல்லாமல் போனதுதான் பலன்!

அண்ணே, நமக்கு நிறைய விஷயங்கள் தெரிந்து இருந்தாலும், கேட்பவரின் மனப்பாங்கையும் நமது பேச்சின் குறிக்கோளையும் மனதில் கொண்டு பேச வேண்டும் இல்லையா?

சொல்லைப் பயன்படுத்துபவர், அதன் போக்கை அறிந்து, பேசும் பொழுதே கேட்போரின் நிலையைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பேச வேண்டுமென்கிறது குறள்!









- somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்