ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்
(குறள் 714)
எனது நண்பர் ஒருவர் ஒரு நுண்கடன் நிறுவனத்தில் உயர் அதிகாரி. அவர் பெயர் ஒன்றும் குமார் இல்லை!
உங்களுக்குத் தான் தெரியுமே. ஏழை எளியவர்கள் அநியாய வட்டிக் கடன்களில் மாட்டிக்கொண்டு மாய்ந்து போகாமல் காப்பாற்றுபவை இந்த மாதிரி சிறு கடன் நிறுவனங்கள் தானே. வங்கிகள் சுய உதவிக் குழுக்கள் மூலம் நேரடிக்கடன் கொடுத்தாலும், பல லட்சக் கணக்கானோரைச் சென்று அடைவதற்கு நுண்கடன் நிறுவனங்கள் எளிய பாலமாக அமைகின்றன.
நம்ம நண்பர் ஒரு வங்கியின் உயரதிகாரிகள் கூட்டத்தில் பேசச் சென்றார். அவர்களிடம் என்ன பேசுவது, அவர்களைத் தனது நுண்கடன் நிறுவனத்திற்குப் பெருங்கடன் கொடுக்க எவ்வாறு நம்பிக்கை கொடுப்பது, ஊக்கப்படுத்துவது எனச் சிந்தித்தார். வந்திருந்தவர்கள் மெத்தப் படித்தவர்கள். 25 வருடப் பழுத்த அனுபவசாலிகள். நூற்றுக்கணக்கான தொழில்களுக்கு, ஆயிரக்கணக்கான கடனாளிகளுக்குக் கடன் கொடுத்துப் பழகியவர்கள்.
அவர்களிடம் இளநிலை அதிகாரிகளிடம் பேசுவது போல நுண்கடன் என்றால் என்ன என்று ஆரம்பிக்க முடியுமா? இந்தியாவில், தமிழ்நாட்டில் இத்தொழிலின் நிலை என்ன, வளர்ச்சி என்ன, ஆந்திராவில் இதற்கு இயற்றப்பட்ட சட்டம், அதன்பின் ஏற்பட்ட பிரச்சினைகள், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வரைமுறைகள் என ஒரு உயர்நிலை (Macro level approach) அணுகுமுறையைக் கையாண்டார்.
அவர்கள் கடன் கொடுப்பதில் உள்ள ரிஸ்க் என்ன, அதை எப்படி சமாளிப்பது என அவர் பேசியதுடன், புள்ளி விவரங்கள் கொடுத்து மற்ற தொழிற்கடன்களின் வாராக்கடன்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு ஏற்கத்தக்க கடனே எனச் சொல்லி முடித்தார். அவரது பேச்சைக் கேட்டபின் உயரதிகாரிகளின் அணுகுமுறை மாறியது. அதே நண்பர் பணியாளர்களிடம் பேசும் போது அவர்கள் நிலைக்கு இறங்கி, ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், நாங்கள் எல்லாவற்றையும் சரிபார்த்துத் தான் கடன் கொடுப்போம். எங்களின் கடன்கள் வசூலாகி விடும்' என்று பேசினார்.
விளம்பரங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த கார்கள், வைர நகைகள், துணிகள், ஏன் நகத்துச் சாயத்திற்குக் கூட அதன் மாடல்கள், தோற்றத்திலேயே ஒரு மேல்தட்டுக்காரர்களாக இருப்பார்கள். விளம்பர வாசகங்களும் அதற்கேற்றாற் போல இருக்கும். இதற்கு மாறாக ‘நாங்கள் நடுத்தர மக்களுக்காக விற்கிறோம்' எனச் சொல்லப் படாதபாடு படுபவர்களும் உண்டு!
சமீபத்திய நகைக் கடை விளம்பரம் பார்த்தீர்களா? ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினர் நகை வாங்க பஸ்ஸிலேயே போவார்கள்! அதாவது சாமானியராலும் வாங்க முடியுமெனச் சொல்லாமல் சொல்கிறார்கள். ஐயா, சொல்ல வந்தது ஏற்கப்பட, பாராட்டப்பட வேண்டுமெனில், அது கேட்பவரின் அறிவு நிலையில் இருக்க வேண்டும். பண்டிதர்களின் சபையில் பேச்சு எளிமையாக இருந்தால் ரசிப்பார்களா? பாமரர்களிடம் மேதாவித்தனம் பயன் தருமா?
அறிவாற்றல் மிக்கவர்முன் பேசும் போது அறிவுடையவராகப் பேச வேண்டும். அறிவில்லாதவர் முன் வெண்சுண்ணாம்பு போல் பளிச்சென்று எளிமையாகப் பேச வேண்டும் என்கிறது குறள்!
- somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago