டாடா வழியில் இன்ஃபோசிஸ்?

By வாசு கார்த்தி

கடந்த அக்டோபர் 24-ம் தேதி டாடா குழுமத்தில் உருவான பிரச்சினை ஒருவழியாக பிப்ரவரி 6-ம் தேதி முடிவடைந்தது. அதாவது சைரஸ் மிஸ்திரிக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தில் பங்குகள் இருந்தாலும் டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களில் இருந்தும் அவரை நீக்கி விட்டார்கள். அந்த பிரச்சினை முடிவதற்குள் கார்ப்பரேட் உலகில் அடுத்த புகைச்சல் தொடங்கிவிட்டது.

டாடா குழுமத்தில் ஏற்பட்ட அளவுக்கு பிரச்சினை பெரிதில்லை என ஒப்பிடலாம். ஆனாலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இந்த பிரச்சினை உருவாகி இருப்பது அனைவரது புருவங்களையும் உயர்த்தி இருக்கிறது. இயக்குநர் குழு செயல்பாடுகள் மீது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி அதிருப்தியில் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

நிறுவனர் அல்லாத முதல் சிஇஓ

இன்ஃபோசிஸ் நிறுவனம் தோன்றிய வரலாறு நம் அனைவருக்கும் தெரியும். நாராயண மூர்த்தி உள்ளிட்ட 7 நபர்கள் இந்த நிறுவனத்தை தொடங்கி னர். இருவர் பாதியில் வெளியேற, நிறுவனர்கள் ஒவ்வொருவராக தலைமை பொறுப்புக்கு வந்தனர். நாராணயமூர்த்தி ஓய்வுபெற்ற பிறகும் தலைமை பொறுப்பில் சில ஆண்டுகள் இருந்தார். இந்த நிலையில் நிறுவனர் அல்லாத முதல் தலைமைச் செயல் அதிகாரியாக விஷால் சிக்கா 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இயக்குநர் குழு தலைவராக ஆர்.சேஷசாயியை நியமனம் செய்தனர். இந்த நிலையில் இயக்குநர் குழு செயல்பாடுகள் மீது வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருக்கிறார் என்.ஆர்.நாராயண மூர்த்தி.

நிறுவனர்களின் குற்றச்சாட்டுகள்?

இன்ஃபோசிஸ் இயக்குநர் குழு மற்றும் அதன் தலைவர்கள் மீது நாராயணமூர்த்தி 4 குற்றச்சாட்டுகளை கூறுகிறார். குறிப்பாக இயக்குநர் குழு தலைவர் ஆர்.சேஷசாயி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார். தவிர அவர் மீது முழுமையான நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து இருந்து விரைவில் வெளியேற இருப்பதாகவும் செய்திகள் வரத்தொடங்கி இருக்கின்றன.

குற்றச்சாட்டுகளுக்கு வருவோம். முதலாவது பண விவகாரம். இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்காவின் சம்பளம் 70 லட்சம் டாலரில் இருந்து 1.1 கோடி டாலராக சம்பளம் உயர்த்தப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் ஐடி துறையில் அதிக சம்பளம் வாங்கிய தலைமைச் செயல அதிகாரி விஷால் சிக்கா. 2015-16-ம் நிதி ஆண்டு சம்பளம் ரூ.48.73 கோடியாக இருக்கிறது. தவிர நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவரது சம்பளம் மாற்றி அமைக்கப்படும் என திருத்தப்பட்டது. இது குறித்த வெளிப்படைத்தன்மை இல்லை.

அடுத்து 2020-ம் ஆண்டு 2,000 கோடி டாலர் வருமானம் ஈட்டப்படும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆண்டுக்கு எட்டு சதவீத வளர்ச்சி அடையும் பட்சத்தில் நடப்பு நிதி ஆண்டு முடிவில் 1,000 கோடி டாலர் அளவுக்கு இருக்கும். நான்கு ஆண்டுகளில் நிறுவனத்தின் வருமானத்தை எப்படி இரு மடங்காக உயர்த்த முடியும். தவிர அமெரிக்காவில் சூழல் சரியில்லாத போது வருமானத்தை உயர்த்துவது என்பது உண்மைக்கு மாறான எதிர்பார்ப்பு என நிறுவனர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூன்றாவது புனித் சின்ஹா நியமனம். அரசியல் தலையீடுகள் இருப்பதை இன்ஃபோசிஸ் நிறுவனம் எப்போதும் விரும்பியதில்லை. ஆனால் மத்திய இணையமைச்சர் ஜெய்ந்த் சின்ஹாவின் மனைவி புனித் சின்ஹா (ஜெயந்த் சின்ஹா நிதித்துறையில் இருந்து விமான போக்குவரத்து துறை இணையமைச்சகத்துக்கு மாற்றப்பட்டதற்கு பல காரணங்கள், அதில் புனித் சின்ஹா நியமனமும் ஒன்று) நியமனம் செய்யப்பட்டது தவறு என நிறுவனர்கள் நினைக்கிறார்கள்.

நான்காவது முன்னாள் தலைமை நிதி அதிகாரி ராஜிவ் பன்சாலுக்கு வழங்கப்பட்ட ரூ.23 கோடி. நிறுவனத்தில் இருந்து முக்கியமான அதிகாரி வெளியேறும் பட்சத்தில் அவருக்கும் இழப்பீடாக வழங்கப்படும் தொகை (severance pay), ஏன் ராஜிவ் பன்சாலுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இவருக்கு முன்பாக முக்கிய பொறுப்பில் இருந்த பலர் வெளியேறி இருக்கின்றனர். அப்போதெல்லாம் வழங்கப்படாத தொகை இவருக்கு மட்டும் ஏன் வழங்கப்பட்டது என நாராயண மூர்த்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக பணி யாளர்கள், முன்னாள் பணியாளர்கள் பங்குதாரர்கள் என என பல தரப்புகளில் இருந்தும் நிர்வாக கோளாறு குறித்து 1,800 இ-மெயில்கள் வந்ததாக தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மை வேண்டும்

1995-ம் ஆண்டு நிறுவனத்தின் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்து, அந்த தொகையை இழந்தோம். அதனை நிறுவன அறிக்கையில் குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டோம். அதே ஆண்டு நிறுவனத்தின் வருமானத்தில் 25 சதவீதத்தை கொடுக்கும் வாடிக்கையாளரை இழந்தோம். 2001-ம் ஆண்டு 30 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்பதை தெரிவித்தோம். முந்தைய ஆண்டு 100 சதவீத வளர்ச்சி அடைந் திருந்தாலும் அதனை தெரிவித்தோம். இதெல்லாம் சரியான நிர்வாகத்துக்கு உதாரணங்கள். ஆனால் இப்போது சிறப்பான நிர்வாகம் இல்லை என நாராணய மூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

இந்திய நிறுவனர்களின் மனநிலை

பொதுவாக இந்திய நிறுவனர்கள் நிறுவனங்களின் மீது கூடுதல் பிடிப்பு வைத்துள்ளனர். அமெரிக்காவில் பில்கேட்ஸ் உள்ளிட்ட நிறுவனர்கள் நிறுவனத்தை அடுத்த தலைவர்களுக்கு கொடுத்த பிறகு, அது குறித்த அச்சமோ, குறுக்கீடோ செய்ததில்லை என நிர்வாக பேராசிரியர் கவில் ராமசந்திரன் தெரிவித்திருக்கிறார். பில் கேட்ஸ் போல பல உதாரணங்களை சொல்ல முடியும்.

அவர்கள் நியமனம் செய்த அடுத்தக்கட்ட தலைவர்களை அவர்களே பொதுவெளியில் விமர்சனம் செய்வது நல்லதல்ல. இயக்குநர் குழுவில் எடுத்த முடிவுகளில் நிறுவனர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள் தலையிடுவது சரியான முன் உதாரணம் அல்ல. அதுவும் நாராயணமூர்த்தி போன்ற ஒருவர் இதை செய்யும் போது மற்ற நிறுவனங்களுக்கும் அது உதாரணமாகி விடும் என ராமசந்திரன் தெரிவிக்கிறார்.

ஆனால் நிறுவனத்தின் முன்னாள் நிதி அதிகாரி டிவி மோகன்தாஸ் பாய் கூறும்போது, நாராயணமூர்த்தி கேட்கும் கேள்விகள் அனைத்து சரியே. நிறுவனத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு நிறுவனர்களுக்கு இருக்கிறது. நிறுவனத்தில் அவர்களுக்கு சுமார் 13 சதவீத பங்குகள் உள்ளன என்றார்.

இந்த நிலையில் OppenheimerFunds என்னும் முதலீட்டு நிறுவனம் இன்ஃபோசிஸில் 2.7 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. இந்த நிறுவனம் இயக்குநர் குழுவுக்கு சாதகமான கருத்தினை தெரிவித்திருக்கிறது. இன்ஃபோசிஸ் பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்றும் அது அவர்களுடைய (நிறுவனர்களின்) நிறுவனம் இல்லை என்பதை உணர வேண்டும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அலுவல்களில் தலையீடு இல்லை

விஷால் சிக்காவும் நானும் பொது வான விஷயங்களை மட்டுமே பேசு வோம். நான் அவருக்கு எந்தவிதமான ஆலோசனையும் தெரிவிப்பதில்லை, அவரும் என்னிடம் ஆலோசனை கேட்ப தில்லை. நிறுவனத்தை செயல்படுத்து வதில் அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கலாசாரம் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

தற்போது நடக்கும் பிரச்சினை நிறு வனர்களுக்கும் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கும் இல்லை. நிறுவனர் களுக்கும் இயக்குநர் குழுவுக்கும் நடக் கும் பிரச்சினை. நிர்வாக சீர்கேடுக்கு பொறுப்பேற்று தலைவர் சேஷசாயி விலக வேண்டும் என இன்ஃபோசிஸ் முன்னாள் நிதி அதிகாரி வி.பால கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்த ஸ்டெர்ன் நிர்வாக கல்லூரி பேராசிரியர் மார்தி சுப்ரமணியன் தலைவர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட வேண்டும் என நாராயணமூர்த்தி கருத்து தெரிவித்திருக்கிறார்.

நிறுவனர்கள் தலையீடு சரியா, தலைவர் மாற்றப்படுவரா, 2020-ல் வருமான இலக்கு எட்டப்படுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இருக்கின்றன. ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து பணியாளர்கள் கவலைப்பட தேவையில்லை எனவும், பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என விஷால் சிக்கா தெரிவித்திருக்கிறார்.

இன்ஃபோசிஸ் பணியாளர்கள் ட்ரம்ப் நடவடிக்கைகளுக்காக கவலைப்படுவார்களா, இல்லை இதுபோன்ற விஷயங்களுக்காக கவலைப்படுவார்களா?

- karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்