வெளியேற்றும் அமெரிக்கா, வரவேற்கும் ஜப்பான்!

By நீரை மகேந்திரன்

ஒரு கதவு மூடினால், மற்றொரு கதவு திறக்கும் என்பது உலக எதார்த்தம். ஹெச்1 பி விசா விஷயத்திலும் இதுதான் நடக்கத் தொடங்கியுள்ளது. தனது மக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக, வெளிநாட்டு பணியாளர்களை அனுமதிப்பதைக் குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதை ஒரு தரப்பினர் ஆதரித்தாலும், இந்த முடிவு அங்கு மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அமெரிக்காவுக்கு வெளியே விவாதிக்கப்படும் விஷயமாக, சர்வதேச பிரச்சினையாக விவாதிக்கப்படுகிறது. இதேபோன்ற ஒரு விளைவுதான் ஜப்பானின் அழைப்பு. திறன்மிகு பணியாளர்களுக்கு ஜப்பான் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராகிவிட்டது.

அதிபர் தேர்தலில் ஹெச்1பி விசாவுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என விவாதம் உருவான போதே அமெரிக்காவுக்கு உள்ளேயும், வெளியேயும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. கூடவே தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியும் எழுந்தன. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் குறிப்பிட்டதை போல விசா கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப் பட்டுள்ளன. சமீபத்தில் அமெரிக்க செனட் சபையில் அமெரிக்கக் குடியுரிமை பெறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையை குறைக்கவும் சட்டவரைவை தாக்கல் செய்துள்ளனர்.

இது போன்ற அதிரடி அறிவிப்புகளால் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் புதிய நிறுவனங்களைத் தொடங்குவது குறையும் என்றும், உலக நாடுகள் திறந்த பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தொழில்துறையைப் பாதிக்கும் எனவும் அச்சம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில்தான் ஜப்பான் இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள களமிறங்கியுள்ளது.

ஜப்பான் அழைப்பு

குறிப்பாக ஹெச்1 பி விசா பெறும் உயர் திறன் கொண்ட பணியாளர்களுக்கு ஜப்பானில் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். அவர்களது குடியேற்ற விதிகள் தளர்த்தப்படும் என்று அழைப்பு விடுத்துள்ளது ஜப்பான். வரும் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வர உள்ள ஜப்பானின் புதிய கிரீன் கார்டு விதிமுறைகள் உயர் திறன் கொண்ட பணியாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க கெடுபிடிகளுக்கு மாற்றாக இந்திய ஐடி பணியாளர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்.

புதிய விதிமுறைகளின்படி ஜப்பானுக்கு வரும் ஐடி உயர்திறன் பணியாளர்கள் ஜப்பான் குடியுரிமை பெற அங்கு தங்கியிருக்கும் காலம் ஐந்து ஆண்டுகளுக்கும் கீழாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சட்டங்களின் படி வெளிநாட்டு பணியாளர்களுக்கு புள்ளிகள் அடிப்படையில் நிரந்தர குடியுரிமை அளிக்கப்படுகின்றன. குறிப்பாக வேலை, வருமானம், படிப்பு பின்புலம் அடிப்படையில் தனிநபர்கள் 70 புள்ளிகள் எடுத்தால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே குடியுரிமை கிடைக்கும், தற்போது இதை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் வாங்கிவிடலாம் என அறிவித்துள்ளது.

ஜப்பானின் இந்த அறிவிப்பு ஆசிய பிராந்திய அளவில் பல முக்கிய விளைவுகளை உருவாக்கும். ஏனென் றால் ஜப்பானின் மக்கள் தொகை 2060 ஆண்டுக்குள் 40 சதவீதம் அளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அங்கு கணிசமான அளவில் மூத்த குடிமக்கள் உள்ளனர். இதனால் ஜப்பானில் குடியேற்ற அழைப்பு நிறு வனங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்கத் தூண்டும். இது ஐடி துறை வளர்ச்சியில் தாக்கத்தை உருவாக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்திய ஐடி நிறுவனங்கள்

அமெரிக்காவின் ஹெச்1பி விசா கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்படுபவை இந்திய ஐடி நிறுவனங்கள்தான். ஹெச்1பி விசாவில் அமெரிக்கா வரும் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஆண்டு ஊதியத்தை 1,30,000 டாலராக ட்ரம்ப் அரசு உயர்த்தியுள்ளது. இது கிட்டத்தட்ட தற்போதுள்ள அதிகபட்ச ஊதியத்திலிருந்து இரண்டு மடங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நிறுவனங்கள் உள்நாட்டு பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என அமெரிக்க அரசு நம்புகிறது. ஆனால் நிறுவனங்கள் இந்த வரம்பை ஏற்றுக் கொள்வார்களா தெரியாது. தவிர அமெரிக்காவில் ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களில் பெரும்பான்மையினர் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறிய சந்தை

ஹெச்1பி விசா நடைமுறையால் பாதிக்கப்படும் நாடுகள், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு மாற்றாக ஜப்பானில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தவே விரும்புவார்கள் என்பதும் உண்மை. ஆனால் ஜப்பானின் சந்தையோ சிறியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய ஐடி நிறுவனங் களின் சேவை ஏற்றுமதியில் சுமார் 2% மட்டுமே ஜப்பானின் பங்களிப்பாக உள்ளது. ஐடி சேவை ஏற்றுமதி மதிப்பு 11,000 கோடி டாலர்தான்.

ஆனால் இந்த வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை. இந்த வாய்ப்பு இரண்டு நாட்டு வளர்ச்சிக்குமே சாதக மாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்கிறார் நாஸ்காம் தலைவர் ஆர். சந்திரசேகர்.

சமீபத்தில் இந்தியா வந்திருந்த டோக்கியோவின் வெளி வர்த்தக கூட்டமைப்பைச் (Jetro) சேர்ந்த துணைத் தலைவர் ஷிஜெகி மயேடா கூறும்போது, ``இந்திய பணியாளர்களுக்கு சாதகமான விஷயம், ஜப்பானின் ஐடி துறைகளில் இந்திய முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்திய முதலீடுகளுக்கு ஏற்ப ஐடி துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் சுட்டிக் கட்டினார்

முதலீட்டு உறவுகள்

முதலீடுகளை பொறுத்தவரையில் ஜனவரி 2003-க்கும் நவம்பர் 2016க்கும் இடையில் 468 மில்லியன் டாலர் அளவுக்கு இந்திய முதலீடு ஜப்பானுக்குச் சென்றுள்ளது. ஜப்பானிலிருந்து ஏப்ரல் 2000-லிருந்து செப்டம்பர் 2016வரை 23.8 பில்லியன் டாலர் இந்தியாவுக்கு வந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சில சிக்கல்கள்

ஜப்பான் குடியுரிமைக் கொள்கை இந்திய பணியாளர்களுக்குச் சாதகமாக இருந்தாலும், மொழி, கலாசாரம் சார்ந்த விஷயங்களில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் உடனடி நெருக்கம் உருவாகிவிடாது. ஆனால் கொள்கை தளர்வுகளால் பணியாளர்களுக்கு உருவாகும் இந்த நெருக்கடிகள் விரைவிலேயே சரியாகும் என்றும் தொழில்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஜப்பான் திறமை மிக்கவர்களை வரவேற்றாலும் அங்கு வெளிப்பணி ஒப்படைப்பு தொழில் (பிபிஓ) மிகவும் குறைவுதான். அதிகபட்சமாக உள்நாட்டு நிறுவனங் களை நம்பியே ஜப்பானின் பொருளா தாரம் உள்ளது.

இது போன்ற அடிப்படைச் சிக்கல்கள் இருந்தாலும் இந்திய ஐடி துறை இந்த அறிவிப்புக்கு செவி சாய்க்காமலும் இல்லை.

அமெரிக்காவின் ஹெச்1 பி விசா கட்டுப்பாடுகள் தற்போது மிக முக்கியமான முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது. மிகப் பெரிய சந் தையை வைத்துள்ள அமெரிக்கா தனது பாதுகாப்பு வாதத்தால் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. இது அமெரிக்க பொருளா தாரத்தில் எதிரொலிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அது வேலைவாய்ப்பு அதிகரிப்பால் ஏற்படும் சாதகமான அம்சமா அல்லது நிறுவனங்கள் வெளியேற்றத்தால் நிகழும் பாதகமான விஷயமா என்பது போகப்போகத்தான் தெரியும். அதே நேரத்தில் ஜப்பானின் சிவப்பு கம்பள வரவேற்பு இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்