இந்திய ஏற்றுமதியை பாதிக்கும் ஆப்பிரிக்க நிதி நெருக்கடி

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்கிறது நியூட்டனின் மூன்றாம் விதி. இயற்பியலில் மட்டுமல்ல, பொருளாதாரமும் இயக்கவியல் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது என்பதுதான் உண்மை. ஒரு நாட்டில் எடுக்கப்படும் அரசியல், பொருளாதார முடிவுகள் சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துமா, உயர்த்தாதா என்கிற கணிப்புகள்கூட சர்வதேச சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுபோல சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், உலோகம், மற்றும் சில நாடுகளில் கனிமங்களும் விலை குறைந்துள்ளது. அதனால் இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதும் சரிந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவு இந்தியா போன்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது என்றால், கச்சா எண்ணெய் உற்பத்தியில் உள்ள மேற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதுவே பாதகமாக அமைந்துள்ளது. இதனால் மிகப் பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சியை இந்த நாடுகள் சந்தித்து வருகின்றன.

குறிப்பாக முன் எப்போதும் இல்லாத வகையில் ஆப்பிரிக்கா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சர்வதேச அளவில் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளான தென் ஆப்பிரிக்கா, கானா, நைஜீரியா, அங்கோலா போன்ற நாடுகளின் பணமதிப்பில் கடந்த சில மாதங்களில் ஏற்பட்டுள்ள சரிவு இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தையும் நேரடியாக பாதித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளின் நெருக்கடி

சில மாதங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா நாட்டின் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையின் போதே ஆப்பிரிக்கா பொருளாதார நெருக்கடியில் உள்ளதை ஒப்புக் கொண்டார். ``ஆம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை, நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது’’ என்றார்.

முன்பு 1.7 சதவீதமாக இருந்த அந்த நாட்டின் வளர்ச்சி வீதம் 2016-ல் 0.9 சதவீதம் என்கிற அளவுக்கு சரிந்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் விகிதம் அதிகரித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், நாட்டின் வேலையில்லா திண்டாட்ட விகிதமும் 25 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் கரன்சியான ராண்ட் மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்திருக்கிறது.

இது தென் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, மொத்த ஆப்பிரிக்க நாடுகளிலும் இதுதான் நிலைமை. கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தங்களது நிதிக் கொள்கைகளை இறுக்கமாக்கியுள்ளது.

தவிர பருவ கால நிலைமைகளும் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சாதகமாக இல்லை. இதனால் ஆப்பிரிக்க நாணயங்கள் குறுகிய கால வீழ்ச்சியை சந்தித்துள்ளன என்று ஆப்பிரிக்க பொருளாதார அறிஞராக ஜேகஸ் வெரினே குறிப்பிட்டுள்ளார்.

சமூக நல ஒதுக்கீடு குறைப்பு மற்றும் அரசின் செலவுகளைக் குறைத்துள்ள தென் ஆப்பிரிக்கா அரசு, வரிகளை உயர்த்தி நிலைமையை கட்டுக்குள் வைக்க முயற்சித்து வருகிறது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் மக்கள் வாழ்வாதாரம் மோசமான நிலைமையில் உள்ளது. சொத்துகள் விற்பனை, எரிபொருள், சர்க்கரை என எல்லாவற்றுக்கும் மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.

தவிர அரசும் தங்களின் வசமுள்ள சொத்துகளை தனியாருக்கு விற்கும் முடிவுகளையும் எடுத்து வருகிறது. இதன் மூலம் தங்களது நாணய மதிப்பை தக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா மட்டுமல்ல, கானா, நைஜீரியா, அங்கோலா என கச்சா எண்ணெய் உற்பத்தியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகள் எங்கும் இதுதான் நிலைமை. கச்சா எண்ணெய் விலை சரிவு, முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழப்பின் காரணமாக உருவாகியுள்ள இந்த பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இந்த நாடுகள் தங்களது நிதிக் கொள்கைகளை மாற்றியமைத்து வருகின்றன என்பதும் முக்கியமானது.

ஏற்றுமதியில் தாக்கம்

ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி சர்வதேச அளவில் ஏற்றுமதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய ஏற்றுமதியில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்திய ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி கடந்த ஒரு ஆண்டில் பெருமளவு குறைந்துள்ளது.

2014-15 ஆம் ஆண்டில் நைஜீரியாவுக்கு 2.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இந்த மதிப்பு 2015-16 நிதியாண்டில் 2.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அல்ஜீரியாவுக்கு 1.1 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி 0.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அல்ஜீரியா, நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளதுடன், அங்கோலா, எகிப்து, எத்தியோப்பியா நாடுகளுக்கு கடந்த ஒரு ஆண்டாக ஏற்றுமதி செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார் இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூடுதல் துணைத் தலைவர் சுகதோ சென்.

மோட்டார் வாகனங்கள்

குறிப்பாக இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் வாகனப் பொருட்கள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இது குறைந்துள்ளது. இந்தியாவினுடையை வாகன ஏற்றுமதியில் ஆப்பிரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதும் முக்கியமானது. இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், கார்கள் மற்றும் பஸ், டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டில் ஆப்பிரிக்காவுக்கான வாகன ஏற்றுமதி 30 லட்சமாக எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பண தாமதம்

இப்படியான நிச்சயமற்ற சூழ்நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்திருந்தாலும், ஆப்பிரிக்க நாடுகளின் பல நிறுவனங்களும் பணத்தை தாமதமாக அளித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வர வேண்டிய தொகையை உறுதிபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும், பணத்தை பெறுவதற்கான மாற்று வழிமுறைகள் கண்டுபிடித்தாக வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

மத்திய வெளியுறவு அமைச்சகம் நைஜீரியாவில் இதற்கென தனியாக வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக சாத்தியங்கள் குறித்து ஆலோசனை செய்து வருகிறது. இது தொடர்பாக முதற்கட்டமாக எக்ஸிம் வங்கி, நைஜீரிய அரசின் டெலலப்மென்ட் வங்கிகளிடம் பேசியுள்ளது.

மாற்று யோசனைகள்

ஏற்றுமதியாளர்கள் இந்த பிரச்சினையை நெடு நாட்களாக குறிப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக அங்கோலா, எத்தியோப்பியா, கானா போன்ற நாடு களில் நிகழும் சிக்கல்களுக்கு அங்கேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று ஏற்றுமதி வாரியத்தின் பொதுச் செயலாளர் அஜய் ஷாகி தெரிவித் துள்ளார்.

இந்த பணப்பிரச்சினைக்கு தீர்வுகாண சிலர் துபாய் வழியாக வர்த்தகம் செய்கின்றனர். இப்படி செய்வது ரிஸ்க் குறைவாக இருக்கிறது என்கின்றனர். சிறு குறு ஏற்றுமதிக்கு மத்திய அரசு இந்த வழியை யோசிக்கலாம் என்கின்றனர்.

அரசின் முதற்கட்ட நடவடிக்கைகளில் நைஜீரியாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்படலாம். ஏனென்றால் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மேற்காசிய நாடுகளுக்கு அடுத்து முக்கிய பங்கு வகிப்பது நைஜீரியா என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து வரும் நிலையில் ஆப்பிரிக்க நாடுகள் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு எழுந்துள்ள இந்த சிக்கலுக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்