இந்தியாவில் திறமைக்கு பஞ்சமா?

By பெ.தேவராஜ்

`டெமோகிராபிக் டிவிடெண்ட்’ என்ற ஆங்கில வார்த்தை அனைத்து நாளிதழ்களி லும் முக்கியமாக இடம்பெற்றுவருவது சமீபத்திய நாட்களில் அதிகம் பார்க்கமுடிகிறது. அடுத்த சில பத்தாண்டுகளில் இந்திய பொருளா தாரத்தில் மிக சிறந்த நாடாக முன்னேற்றம் அடைய இந்த வார்த்தை மிகுந்த உபயோகமாக இருக்கும் பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இந்த வார்த்தைக்கு விளக்கம் தேடிப் பார்க்கையில் மொத்த மக்கள் தொகையில் பணிக்குச் செல்லக்கூடிய வகையில் உள்ள மக்கள் அதிகமாக இருப்பதுதான் டெமோகிராபிக் டிவிடெண்ட். அதாவது இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு என்று சுருங்க பொருள் கொள்ள முடியும்.

15 முதல் 64 வயது வரை கொண்ட மக்கள் இந்தியாவில் அதிகம் காணப்படுவதால் இந்தியா நிச்சயமாக மிகுந்த வளர்ச்சியடையும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறிவருகின்றன. 2020-ம் ஆண்டு இந்தியாவின் சராசரி வயது 29-ஆக இருக்கும் என்று தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கை கூறியுள்ளது.

இது சீனாவில் 37-ஆகவும் அமெரிக்காவில் 45-ஆகவும் ஜப்பானில் 48-ஆகவும் இருக்கும் என்று தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ளது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மட்டுமல்லாமல் அதிக இளைஞர்களை கொண்ட நாடாகவும் இந்தியா திகழப் போகிறது. ஆனால் இந்த இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்தியாவை முன்னேற்றி விட முடியுமா? என்ற மிகப் பெரிய கேள்வி நம்மை அச்சுறுத்துகிறது.

அதிக இளைஞர்களை கொண்ட நாட்டில் திறன் குறைவாக இருந்தால் எப்படி முன்னேற முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ஏற்றது போல் இந்திய இளைஞர்களுக்கு திறன் குறைவு என்பதையே சமீபத்திய புள்ளிவிவரங்களும் உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக ஒவ்வொரு வருடமும் 1 கோடி முதல் 1.2 கோடி இளைஞர்கள் வேலைதேடுகின்றனர்.

ஆனால் இவர்களில் 10 சதவீத இளைஞர்களுக்கே வேலைக்கான குறைந்தபட்ச அறிவும் ஆரம்பகட்ட பயிற்சி அறிவும் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. மீதமுள்ள 90 சதவீத இளைஞர்களுக்கு திறன் குறைவாக இருப்பதால் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. திறன் பற்றாக்குறைதான் தற்போது இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இருக்கவும் போகிறது.

கல்வி பற்றாக்குறை

இந்திய இளைஞர்களுக்கு திறன் குறைவாக இருப்பதற்கான காரணம் கல்வியறிவு பற்றாக் குறை. 2011-12 தேசிய புள்ளிவிவர அமைப்பு வெளியிட்ட ஆய்வின்படி, இந்தியாவில் படிப்பறிவு இல்லாதவர் சதவீதம் 30.2 ஆக இருக்கிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்து கல்வியறிவில் ஒரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும் முழுமையான கல்வியறிவு இன்னும் பெறவில்லை. இது ஒருபுறம் இருக்க படித்தவர்கள் திறனோடு உள்ளார்களா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்தியாவில் 9.3 சதவீதம் பேர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைக்குச் செல்கின்றனர். ஆனால் இவர்களில் பாதிபேருக்கு வேலைக்கான அடிப்படை அறிவு இல்லை என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

கல்லூரியில் மூன்று வருடமோ அல்லது நான்கு வருடமோ படித்து வரும் இளைஞர்கள் வேலைக்கான அடிப்படை அறிவு இல்லாமல் இருப்பது நமது கல்விமுறையில் உள்ள சிக்கல்களை தெளிவாகக் காண்பிக்கிறது. அதிலும் தொழிற்கல்வியில் திறன் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. அரசு உடனடியாக கவனத்தில் எடுத்தால்தான் அடுத்த பத்தாண்டுகளில் இதனை சரிசெய்ய முடியும். உதாரணமாக பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் ஒரு வருடம் தொழில் நிறுவனத்தில் பயிற்சி எடுப்பதை கட்டாயமாக்கலாம். இதுபோன்ற முயற்சிகள் மூலமே திறனை அதிகப்படுத்த முடியும்.

படிப்புக்கேற்ற வேலையா?

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 6 கோடி இளைஞர்கள் கல்லூரி படிப்பை முடிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலும் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரிகளாக இருக்கின்றனர். இதை தவிர்த்து அக்கவுண்டிங் படிப்பை முடித்தவர்கள் அதிகம் இருக்கின்றனர். இவர்களில் வேலைதேடுவோர் படிப்புக்கேற்ற வேலையை தேடுவதில்லை. ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர்.

மேலும் தற்போது அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் வெளியேறுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுப்பதற்கு நிறுவனங்களால் முடியவில்லை. படிப்பு முடித்து வெளியேறுபவர்களுக்கும் வேலைக்கான வாய்ப்பு விகிதமும் மிக குறைவாக இருக்கிறது. ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடுவதும் திறன் குறைவுக்கு முக்கியக் காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.

அரசின் திட்டங்கள்

இந்திய இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக 2008-ம் ஆண்டே பிரதம மந்திரியின் தேசிய திறன் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. அது முதல் திறன் சார்ந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மோடி ஆட்சிக்கு வந்ததும் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் திறன் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவரப்பட்டது. இதன் கீழ் திறன்மிகு இந்தியா, பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் திட்டம் போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் திட்டத்தின் மூலம் 2020-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. இதன்மூலம் இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக 2013-14-ம் ஆண்டு 73 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த வருடத்தில் 76 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய திறன் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் வெறும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது மட்டும் அதிக இளைஞர்கள் இந்த திட்டத்தில் இணைவதற்கு உதவி புரியாது.

உதாரணமாக பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் வரை 17 லட்சம் பேருக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் 81 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு உறுதியில்லை என்பதால் இளைஞர்கள் இதில் இணைந்து பயிற்சி பெறத் தயங்குவார்கள். இதை அரசு களைய வேண்டும். பயிற்சி பெறும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்த வேண்டும்.

அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க முன்வர வேண்டும். தற்போது சில நிறுவனங்கள் திறன் மேம்பாடு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை வழங்குகின்றன. இதேபோல் மற்ற நிறுவனங்கள் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்க வேண்டும். அப்போதுதான் விரைவாக இளைஞர்களை திறன் படைத்தவர்களாக உருவாக்கமுடியும்.

பொருளாதார அளவில் இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு `டெமோகிராபிக் டிவிடெண்ட்’. இந்த வாய்ப்பை மத்திய அரசு நழுவவிடக்கூடாது. டெமோகிராபிக் டிவிடெண்ட்டால் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கை அதிகரிக்கும். பொருளாதார நடவடிக்கை அதிகரித்தால் உற்பத்தி அதிகரிக்கும். தற்போதைய நிலையில் 1 கோடி இளைஞர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே அடிப்படை வேலைக்கான திறனுடன் உள்ளனர்.

இதனால் 90 சதவீத இளைஞர்களை உடனடியாக வேலையில் ஈடுபடுத்துவது மிக சிரமம். இதனால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும். வேலைவாய்ப்பின்மை நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. இளைஞர்களின் திறனை மேம்படுத்தினால் மட்டுமே இந்தியாவின் முன்னேற்றக் கனவும் சாத்தியமாகும்.

எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என மேடைக்கு மேடை முழக்க மிடும் அரசியல்வாதிகள், திறன் மிக்க இளைஞர்களால்தான் இது சாத்தியம் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்த வேண்டும். மேடை முழக்கமோ, இளைஞர்கள் பெருக்கமோ எந்த வகையிலும் வலுவான இந்தியா உருவாக்கத்துக்கு அடித்தளமிடாது.

devaraj.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்