உன்னால் முடியும்: கற்றுக் கொள்வதில் தயக்கம் கூடாது

By நீரை மகேந்திரன்

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தங்கமலை, பிரிண்டிங், டிசைனிங் நிறுவனத்தில் தொழி லாளியாக இருந்தவர், கல்வித் தகுதி +2 தான். ஆனால் இன்று லேபிளிங் துறையில் சென்னையில் முக்கிய தொழில்முனைவோர். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு எப்போதுமே தயக்கம் காட்டக்கூடாது இதுதான் என் வெற்றிக்கு அடிப்படை காரணம் என்று கூறும் இவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

சென்னைதான் சொந்த ஊர், பனிரெண்டாவதுக்கு மேல் படிக்கவில்லை. ஒரு ஆர்வத்தில்தான் பிரிண்டிங் நிறுவனத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த கால கட்டங்களில் கம்ப்யூட்டர் டிசைனிங் எல்லாம் கிடையாது.

பிரிண்டிங்கில் ஒரு டிசைன் கொண்டு வர வேண்டும் என்றால் படங்களை வெட்டி ஒட்டி மேனுவலாக மேற்கொள்ளும் பிரிண்டிங் முறைதான். நான் வேலை செய்தது சற்று பெரிய நிறுவனம் என்பதால் அவ்வப்போது தொழில்நுட்பங்களை மேம்படுத்திக் கொண்டே இருந்தார்கள். அந்த வகையில்தான் நான் கம்ப்யூட்டரை கற்றுக் கொண்டேன்.

அந்த நிறுவனத்தின் பல பிரிண்டிங் வேலைகளில் அடுத்த கட்டமான லேபிள் பிரிண்டிங் வேலைகளுக்கு என்னை மாற்றினார்கள். அதில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றினேன். பிறகு ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் லேபிளிங் வேலைக்காக ஆட்கள் தேவை என்று என்னையும், எனது நண்பர்கள் இருவரையும் அழைத்தனர்.

அங்கு மூன்று ஆண்டுகள் அவர்களது பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தோம். திரும்ப சென்னை வந்தபோது இந்த துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை தெளிவாக அறிந்திருந்தோம்.

குறிப்பாக அனைத்து துறைகளுக்குமான பிரிண்டிங் லேபிள்கள் இங்கு தேவையாக இருக்கிறது. ஆட்டோமொபைல், மருந்து, டெக்ஸ்டைல் என அனைத்து துறைகளுக்கும் லேபிளிங் முறைகள் வளரத்தொடங்கிய நேரத்தில் இந்த தொழிலை மேற்கொள்ள எனது நண்பர்கள் இருவருடன் இணைந்து இறங்கினேன். இந்த தொழிலை தொடங்க முதலில் வேலைபார்த்த நிறுவனத்தின் லேபிளிங் துறையின் மேலாளர் எங்களுக்கு பல வகைகளிலும் உதவிகள் செய்தார்.

ஆரம்பத்தில் பல நிறுவனங்களுக்கு சென்று எங்கள் தயாரிப்புகளை விளக்குவோம். லேபிள் செய்வதால் வேலைப்பளு குறையும், சிஸ்டமேட்டிக்காக வேலைகள் நடக்கும் என்பதை எடுத்துச் சொல்லித்தான் ஆர்டர்கள் பிடிப்போம். வேறு நிறுவனங்களில் செய்த வேலைகளைச் சொல்லுங்கள் ஆர்டர் தருகிறோம் என்பார்கள். முதலில் சின்ன சின்ன ஆர்டர்களிலிருந்துதான் தொடங்கினோம்.

கடந்த 10 ஆண்டுகளில் லேபிளிங் முறை மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது. லேபிளிங் தொழில்நுட்பத்தில் முன்பு லேபிள் ஒட்டுவது மட்டும்தான் இருந்தது. பிறகு பார்கோட் வந்தது, லேபிளையும், பார்கோடையும் தனித்தனியாக ஒட்டுவார்கள்.

இப்போது லேபிளிலேயே பார்கோட் வந்துவிட்டது. அடுத்த கட்டமாக கியூஆர் கோட் வந்துகொண்டிருக்கிறது. தவிர ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி முறைகளும் வந்துவிட்டன. ஜவுளி கடையில் பில் போடாமல் துணியை எடுத்துச் சென்றால் பீப் சவுண்ட் வருவதுகூட இந்த துறை சார்ந்த வளர்ச்சிதான். ஒரு பொருளுக்கு லேபிள் ஒட்டிவிட்டோம் என்றால் அந்த பொருளின் அனைத்து தகவல்களும் அப்டேட்டாக இருக்கும். பணியாளர்களின் நேரமும், உழைப்பும் மிச்சமாகும். இப்போது கிட்டத்தட்ட அனைத்து பெரிய வர்த்தக நிறுவனங்களிலும் இது புழக்கத்துக்கு வந்துவிட்டது.

இவை எல்லாவற்றையும் எல்லா காலகட்டங்களிலும் முன்னின்று கற்றுக் கொண்டேன். இந்த துறை சார்ந்து எந்த வேலைகளையும் புதிதாக கற்றுக்கொள்ள தயங்கியதே இல்லை. இதுதான் என்னை வளர்த்தது என்று நம்புகிறேன். நிறுவனம் நன்றாக வளர்ந்த பிறகு எனது நண்பர்கள் இருவரும் தனித்தனியாக பிரிந்து செல்ல, தற்போது நான் மட்டும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறேன். தற்போது பதினைந்து நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறேன். தொழிலின் அடுத்த கட்ட வளர்ச்சியாக சாப்ட்வேர் நிறுவனங்களுக்குகூட லேபிள் முறைகளை கொண்டு சென்றுள்ளோம்.

இந்த துறையின் ஒவ்வொரு அடுத்த கட்ட தொழில்நுட்ப நகர்வுகளையும் கற்றுக்கொள்வதில் ஆர்வமாகவே இருந்திருக்கிறேன். சாதாரண கடைநிலை தொழிலாளியாக தொடங்கிய வாழ்க்கை இது. இன்று ஆன்லைன் மூலம் பிசினஸ் தேடி வருகிறது.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எனது அனுபவம் என்பது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதாகத்தான் இருந்துள்ளது. அதுதான் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்றார். தப்பிப் பிழைப்பது பிழைத்துக் கொள்ளும் என்கிற தத்துவத்தை எளிதாகவே புரிய வைக்கிறார் இவர்.

சாதாரண கடைநிலை தொழிலாளியாக தொடங்கிய வாழ்க்கை இது. இன்று ஆன்லைன் மூலம் பிசினஸ் தேடி வருகிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எனது அனுபவம் என்பது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதாகத்தான் இருந்துள்ளது. அதுதான் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்