உலக பொருளாதாரத்தில் கச்சா எண்ணெயின் பங்கு முக்கியமானது. பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கங்களை நம்பியே உள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக எண்ணெய் விலையில் நிலையில்லா தன்மை ஏற்பட்டுள்ளது. சர்வதேச தேவை, உற்பத்தி அதிகரித்திருப்பது, புவிசார் அரசியல் என பல்வேறு காரணங்களால் எண்ணெய் விலை கடுமையான சரிவை கண்டிருக்கிறது. நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 45 டாலருக்கும் குறைவாக விற்பனையானது. அதன்பிறகு 43 டாலர் வரை சரிவைக் கண்டது. 1997-ம் ஆண்டுக்குப் பிறகு ஆண்டின் முதல் பாதியில் இவ்வளவு பெரிய சரிவைக் கண்டது இதுவே முதல் முறை என்கின்றனர் துறை வல்லுநர்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு ஆரம்பத்தில் கச்சா எண்ணெய் விலை 30 டாலர் வரை சரிந்தது. அதன்பிறகு ஆண்டு இறுதியில் 50 டாலர் வரை உயர்ந்து ஓரளவு மீண்டு வந்தது. அதனால் இந்த ஆண்டில் பேரலுக்கு 60 டாலர் வரை அதிகரிக்கும் என்று இத்துறையினர் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் கடந்த மார்ச் மாதமே அந்த நம்பிக்கை சிதைந்து போனது. ஆனாலும் கோடைக்காலத்தில் விலையில் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் சரிவைக் கண்டிருப்பது எண்ணெய் வள நாடுகளுக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.
விலை சரிவுக்கு காரணம்?
கடந்த ஜனவரி மாதம் ஒபெக் கூட்டமைப்பு நாடுகள் 6 மாத காலத்திற்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதற்கு ஒப்பந்தம் போட்டன. ஒரு நாளைக்கு 18 லட்சம் பேரல் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் ஒப்புக் கொண்டன. அப்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. ஆனால் பிப்ரவரி மாத இறுதியில் மீண்டும் சரிவைக் கண்டது.
அதன்பிறகு ஒபெக் கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்பினரல்லாத நாடுகள் இணைந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டன. 9 மாத காலம் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நைஜீரியா மற்றும் லிபியா நாட்டில் நிலவி வரும் நிலையில்லாத சூழ்நிலையால் இரண்டு நாடுகளுக்கும் உற்பத்தி கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக லிபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு 8,85,000 பேரலாக அதிகரித்துள்ளது. அதாவது கட்டுப்பாட்டு ஒப்பந்தம் போட்டபிறகு ஒரு நாளைக்கு 50,000 பேரல் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நைஜீரியாவின் எண்ணெய் ஏற்றுமதியும் ஒரு நாளைக்கு 20 லட்சம் பேரலாக அதிகரித்துள்ளது. இந்த இரு நாடுகளின் உற்பத்தி அதிகரித்திருப்பதே விலை சரிவுக்கு காரணம். ஒபெக் கூட்டமைப்பினுடைய ஒப்பந்தம் தோல்வி அடைந்துவிட்டதையே தற்போது ஏற்பட்டிருக்கும் விலை சரிவு காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளான கத்தார், சவூதி அரேபியா, ஈரான் போன்றவற்றில் நிலவி வரும் நிலையில்லாத தன்மையும் விலை சரிவுக்கு காரணம்.
அமெரிக்காவின் பங்கு
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதையே அங்குள்ள எண்ணெய் நிறுவனங்கள் சாதகமாக நினைத்தன. அதிக பைப்லைன்கள் அமைக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் ஆதரவு அளித்தார். அதுமட்டுமல்லாமல் புது சுரங்களை ஏற்படுத்தவும் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறார். அதனால் புதிய சுரங்கங்களை நிறுவனங்கள் அமைத்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க அமெரிக்காவில் ஷேல் எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவின் மொத்த எண்ணெய் உற்பத்தி 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. எண்ணெய் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள சவூதி அரேபியாவின் உற்பத்தியை கிட்டத்தட்ட அமெரிக்கா நெருங்கி வருகிறது. அமெரிக்காவின் அதிக உற்பத்தி தற்போது ஏற்பட்டிருக்கும் கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
விலை குறைவால் யாருக்கு பயன்?
பொருளாதார ரீதியாக பார்க்கும் போது விலை குறைவு என்பது எப்போதுமே நுகர்வோர்களுக்கே நன்மையாக அமையும். அதேபோல் தற்போது ஏற்பட்டிருக்கும் விலை சரிவு கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு சாதகமாக அமையும்.
ஆசிய நாடுகளை பொறுத்தவரை சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்து வருகின்றன. கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவை முந்தியது ஜப்பான். கச்சா எண்ணெய் இறக்குமதியில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் ஜப்பான் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் முதல் மே வரையில் 4 சதவீதம் சரிவைக் கண்டது. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக நுகர்வு குறைந்ததால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போது விலை சரிவால் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
கடந்த முறை கச்சா எண்ணெய் விலை சரிவு ஏற்பட்ட போது இந்திய பொருளாதாரம் நிலைத்தன்மையை அடைந்தது. தற்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற கமாடிட்டி நுகர்வு அதிகமுள்ள நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விலை சரிவு பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். முக்கியமாக உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் மூலப் பொருட்கள் கிடைக்கும். அதனால் பல்வேறு உற்பத்தி பொருட்களின் விலை குறையும்.
மீளுமா எண்ணெய் வள நாடுகள்
புவிசார் அரசியலால் ஏற்கெனவே அந்தப் பகுதியில் நிலையில்லாத் தன்மை ஏற்பட்டுள்ளது. தற்போது விலை சரிவு மேலும் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளன. தற்போது சவூதி அரேபியாவில் முகமது பின் சல்மான் புதிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எண்ணெய் துறையை கட்டுக்குள் கொண்டு வருவார் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும் ஒபெக் நாடுகள் மீண்டும் உற்பத்தியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக நைஜீரியா, லிபியா போன்ற நாடுகளுக்கும் உற்பத்தி கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும். கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் அதிக உற்பத்தியையும் குறைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை ஒபெக் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே எண்ணெய் வள நாடுகள் மீளும்.
ஒபெக் கூட்டமைப்பு
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பே ஒபெக் என்றழைக்கப்படுகிறது. ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. 2017-ம் ஆண்டின்படி மொத்தம் 14 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் இந்த நாடுகளின் பங்கு 44 சதவீதம்.
அல்ஜிரீயா, அங்கோலா, ஈக்வெடார், கென்யா, காபோன், ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசுலா ஆகிய நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைப்பது, நுகர்வோர்களுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்வது போன்ற பணிகளை இந்த கூட்டமைப்பு செய்து வருகிறது.
ஷேல் எண்ணெய்
பாறைகளில் உள்ள கரிமப் பொருட்களிலிருந்து எடுக்கப்படுவதே ஷேல் எண்ணெய். பாறைகளில் படிந்துள்ள கரிமப் பொருட்களை வெப்பச்சிதைவு, ஹைட்ரஜனேற்றல் போன்ற முறைகள் மூலம் ஷேல் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. அமெரிக்கா, சீனா, எஸ்டோனியா, பிரேசில் போன்ற நாடுகளில் ஷேல் எண்ணெய் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
-devaraj. p@thehindutamil. co. in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago