இறுதி மூச்சை சுவாசிக்கும் நானோ

By நீரை மகேந்திரன்

மக்களின் கார் என எதிர்பார்க்கப்பட்ட டாடா நானோவின் வரலாற்றில் மார்ச் மாதம் மிகவும் மோசமான மாதமாக பதிவாகியுள்ளது. நானோ தனது அந்திம காலத்தை நெருங்கிக் கொண் டிருப்பதை உணர்த்தும் விதமாக அமைந்து விட்டது. இதற்கேற்ப நானோ உற்பத்தி நிறுத்தப்படும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் டாடா மோட்டார்ஸ் வெளியிடலாம் என ஆட்டோ மொபைல் துறையினர் குறிப்பிடும் அளவுக்கு மோசமாக விற்பனைச் சரிவை மார்ச் மாதத்தில் நானோ கண்டுள்ளது.

மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்த கார், கடந்த நிதியாண்டில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக விற்பனையே 1,100 என்கிற அளவில்தான் இருந்துள்ளது. நிதியாண்டின் முடிவில், அதாவது 2017 மார்ச் மாதத்தில் டாடா நானோவின் விற்பனை 174 கார்கள் என்கிற நிலையில் உள்ளது. 2009-ம் ஆண்டு தனது ஓட்டத்தைத் தொடங்கியதிலிருந்து இல்லாத சரிவு இது. ஒட்டுமொத்தமாக கடந்த நிதி ஆண்டில் 7,591 நானோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக மாதத்துக்கு 633 கார்கள் என்கிற அளவில் மட்டுமே விற்பனை இருந்துள்ளது.

இரு சக்கர வாகனம் வாங்கும் விலையிலேயே காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக ஒரு லட்ச ரூபாய் கார் என்றதால் ஆரம்பத்தில் நானோ காரை வாங்க கூட்டம் அலைமோதியது. கீழ்நடுத்தர பிரிவினரின் கார் வாங்க வேண்டும் என்ற ஆசைக்கான தீர்வாகவும் நானோ முன் நிறுத்தப்பட்டது. இதற்கேற்ப 2009-ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் 2 லட்சம் நானோ கார்கள் முன்பதிவு செய் யப்பட்டன. இந்திய ஆட்டோமொபைல் துறையில் இது மிகப்பெரிய மைல் கல்லாக இடம்பெற்றது. அதேசமயத்தில் குறைந்த விலை என்பதால், குறைவான தொழில்நுட்பங்களைக் கொண்ட கார் என்கிற நெகட்டிவான அடையாளத்தையும் பெற தவறவில்லை.

2010-ம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள கூப்பர் ஹெவிட் ( Cooper-Hewitt) தேசிய வடிவமைப்பு காட்சியகத்தில் நானோ காட்சிபடுத்தப்பட்டது. அங்கும் நானோவுக்கு மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால் விரைவி லேயே மக்களின் மனநிலையில் மாற்றம் உருவானது. மக்கள் வாங்கும் விலையில் இருந்தாலும் பாதுகாப்பானதாக இல்லை என்கிற பேச்சு உருவானது. அதற்கேற்ப நானோ கார்கள் திடீர் திடீரென தீப் பிடித்து எரிந்த நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தன.

டாடா உடனடியாக தனது வாடிக்கை யாளர்களின் அச்சத்தை போக்கும் நட வடிக்கைகளை எடுத்தது. சில வாடிக்கை யாளர்களிடமிருந்து கார்களை திரும்ப பெற்றதுடன், நானோவை வாங்கிய வாடிக்கையாளர்கள் சோதனை செய்து கொள்வதற்கும், உதிரிபாகங்களுக் கான சேவைகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியது. இந்த நடவடிக்கைகளுக்கு பின்னர் நானோ காரின் பாதுகாப்பு குறித்த சர்ச்சைகள் எதுவும் எழவில்லை. ஆனால் டாடா நானோ என்றால் பாதுகாப்பு வசதிகள் இல்லாத கார் என்கிற இமேஜ் ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாகி இருந்ததை மாற்றுவதற்கு எந்த முயற்சி களையும் எடுக்கவில்லை.

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் இன் னொரு முக்கியமான முடிவையும் மேற்கொண்டது. ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்புக்கு ஏற்ப உற்பத்தியை பந்த்நகர் ஆலையிலும் தயாரிக்க முன் வந்தது. ஆனால் இந்த முடிவு டாடாவுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை உருவாக்கியது. இதற்கு முன்பு சிங்குர் ஆலை உருவாக்கத்திலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பலத்த நஷ்டம் உருவானது. இப்படியான நஷ்டங்களும் பல ஆயிரம் கோடிகளாக அதிகரித்தன. டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சொல்லியிருந்தபடி டாடா நானோ கார் திட்டத்தால் ஒட்டுமொத்தமாக ரூ.6,400 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் நானோ காரில் 2015-ம் ஆண்டில் மேலும் பல தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு ஜென் எக்ஸ் நானோ (அடுத்த தலைமுறை) என கொண்டுவரப்பட்டது. குறிப்பாக ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் போன்றவை மேம்படுத்தப்பட்டன. உள்கட்டமைப்பு மாற்றம், பவர் ஸ்டீயரிங் உள்ளிட்ட வசதிகள் கொண்டுவரப்பட்டன. இதனையொட்டி நானோ விற்பனை சற்றே உயர்ந்தது.

2015-ம் நிதியாண்டில் 16,901 கார்கள் விற்பனையானது என்றால், ஜென் எக்ஸ் நானோவுக்கு பிறகு 2016-ம் நிதியாண்டில் 21,012 கார்கள் விற்பனையாகின. விற்பனை சற்றே அதிகரித்தாலும் இதற்கும் மக்களிடம் வரவேற்பு இல்லை. காரணம் இதே விலையில் ரெனால்ட், நிசான் நிறுவனங்களில் கார்கள் கிடைத்ததுதான். இன்னொரு முக்கிய காரணம் விலை அதிகம் கொடுத்தாலும் ஏழைகளுக்கான கார் என்கிற பிராண்டை வாங்க மக்கள் தயாராக இல்லை என்பதும் உண்மை நிலை.

இந்த நிலையில்தான் நானோவை கைவிட்டு விடலாம் என மிஸ்திரி போன்ற வர்கள் நிறுவனத்துக்குள்ளிருந்தும் குரல்கள் எழுப்பினர். இது குறித்து டாடா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் பேசியபோது, இந்தியாவில் ஹேட்ச்பேக் மாடல் கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதில் குறிப்பிடத்தக்க சந்தையை டாடா வைத்துள்ளது. தவிர மக்களின் தேர்வாகவும் ஹேட்ச்பேக் மாடல்கள்தான் உள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் முன்னுரிமை கொடுக்கும் பிரிவுகளுக்கு நாங்கள் செல்ல முடிவெடுத்துள்ளோம். ஹேட்ச்பேக் மாடல்களிலேயே பல மேம்பட்ட மாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று குறிப்பிட்டனர்.

பத்து கார்கள்

டாடா மோட்டார்ஸ் வசம் தற்போது டிகோரையும் சேர்த்து பத்து மாடல்கள் உள்ளன. அதில் நானோ உள்ளிட்ட நான்கு மாடல்களின் உற்பத்தியை விரைவில் நிறுத்த உள்ளது. இண்டிகா, இண்டிகோ சி எஸ், சுமோ என நான்கு மாடல்களின் உற்பத்தியும் நிறுத்தப்படலாம். இதற்கு பதிலாக நான்கு புதிய மாடல்களையும் கொண்டுவரும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

அதேநேரத்தில் லாப நஷ்ட கணக்குகளுக்காக மட்டும் நானோ இறுதி கட்டத்தை எட்டிவிடவில்லை. பாதுகாப்பு சார்ந்த அடிப்படையிலும் நானோ கார் உற்பத்தி தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட வேண்டும். அனைத்து கார்களும் விபத்து சோதனை நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. தவிர கார்களில் ஏர் பேக்குகள், ஏபிஎஸ் வசதி போன்றவற்றை கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான வசதிகளை மேம்படுத்தினால் காரின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்கிற நெருக்கடியிலும் உள்ளது.

இந்த நிலையில் டாடா நானோ தயாரிப்புக்காகவே தொடங்கப்பட்ட குஜராத்தின் சனந்த் ஆலையில் தற்போது ஹேட்ச்பேக் மாடலான டியாகோ தயாராகிறது. மேலும் சமீபத்தில் அறிமுகமாகியுள்ள செடான் மாடலான டிகோரும் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் சனந்த் ஆலையில் நானோ தயாரிக்க குஜராத் அரசு பல உற்பத்தி சலுகைகளை டாடா நிறுவனத்துக்கு வழங்கியிருந்தது. ஒரு காருக்கான மானியமாக ரூ.30,000 வரையில் அளித்து வந்தது. ஆனால் அந்த ஆலையில் வேறு மாடல் கார்கள் தயாரித்தால் இந்த மானிய சலுகை கிடைக்காது என்கிற நிபந்தனையும் டாடாவுக்கு தெரியும். அதையும் டாடா நிறுவனம் மீறியது. இப்போது சனந்த் நகர் ஆலையில் நானோ தவிர்த்த பிற மாடல்கள்தான் பிரதானமாக தயாரிக்கப்படுகின்றன.

இப்படியாக நானோ நஷ்டக் கணக்கையே எழுதி வருவதால் தொடர்ச்சியாக இயக்குவது நிறுவனத்தின் வளர்ச்சியை பாதித்து வருகிறது. இந்தியாவில் ஏழைகளுக்கு கார் இருக்க வேண்டும் என்பது ரத்தன் டாடாவின் கனவாக இருக்கலாம். ஆனால் கார் என்பது அத்தியாவசியங்களையும் தாண்டிய தேவை. அது ஒவ்வொரு தனிமனிதனின் தேர்வு. அதற்கு நானோ ஈடு கொடுக்கவில்லை என்பதே உண்மை. அதனால்தான் காலம் நானோவின் இறுதி காலத்தை எழுதிக் கொண்டிருக்கிறது.

- maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்