டிரோனை நோக்கி இ-டெய்ல் நிறுவனங்கள்?

By வாசு கார்த்தி

லேண்ட் லைன் தொலைபேசி இருந்தபோது எப்போதும் நம்முடனே இருக்கும் தொலைபேசி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசை, எதிர்பார்ப்பு சாதாரண மனிதனுக்கு இருந்தது. அதன் நீட்சியாக கைபேசிகள் வந்தன. ஆனால் இப்போது கற்பனையை தாண்டி புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பொருட்களை ஏன் கடையில் சென்று வாங்க வேண்டும் இருந்த இடத்திலேயே வாங்க முடியாதா என்ற யோசனையில் பிறந்ததுதான் இ-டெய்ல் துறை.

இப்போது அடுத்த கட்டமாக ஆள் இல்லாத விமானங்கள் (டிரோன்) மூலம் பொருட்களை விநியோகம் செய்வது என அடுத்த கட்டத்துக்கு அந்த துறை சென்றுவிட்டது. சோதனை முறையில் கடந்த வாரம் (ஆகஸ்ட் 25) நியூஸிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் டோமினோஸ் பிஸா டிரோன் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. டிரோன்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்திக்கொள்ள முதலில் அனுமதி வழங்கிய நாடு நியூஸிலாந்துதான்.

இப்போதைக்கு சோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 26-ம் தேதி முதல் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆரம்பத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், நீண்டகால அடிப்படையில் கட்டணம் இருக்காது என டோமினோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் இரவில் கூட விநியோகம் செய்யும் வசதியை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது.

அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியா, ஜப்பான், நெதர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி ஆகிய நகரங்களில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த டோமினோஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா இல்லாமல் இருக்கலாம். ஆனால் டிரோன்களை இயக்குவதற்கான விதிமுறைகளை கடந்த வாரம் அமெரிக்கா வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் இ-டெய்ல் நிறுவனங்கள் இதனை பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

அமெரிக்க விதிமுறைகள்

அமெரிக்காவில் வர்த்தக ரீதியில் டிரோன் எப்படி செயல்பட வேண்டும் என விமான போக்குவரத்து துறை கடந்த வாரம் வெளியிட்டிருக்கிறது. டிரோன் எடை 55 பவுண்டுக்குள் (25 கிலோ) இருக்க வேண்டும், மணிக்கு 100 மைல் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது, 400 அடிக்கு மேல் பறக்கக் கூடாது. பகலில் மட்டுமே செயல்பட வேண்டும். சூரிய உதயத்துக்கு 30 நிமிடம் முன்பு மற்றும் சூரியன் மறைந்த பிறகு 30 நிமிடம் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அமெரிக்க வானில் டிரோன்களை அதிகமாக பார்ப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது.

விமானங்களை போல டிரோன்களை இயக்குவதற்கு முறையான உரிமம் வாங்க வேண்டும். ஆனால் இது பைலட் உரிமம் போல அதிக செலவு பிடிக்கும் விஷயம் அல்ல. விதிமுறைகள் வெளியான சமயத்தில் 3,000 நபர்களுக்கு மேல் உரிமத்துக்கான தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கிறார்கள்.

இப்போதைக்கு அமெரிக்காவில் வர்த்தக ரீதி யில் 20,000 டிரோன்கள் செயல்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வருடத்தில் 30 மடங்கு உயர்ந்து 6,00,000 டிரோன்கள் செயல்படும் என்று அமெரிக்க பெடரல் ஏவியேஷன் கணித்திருக்கிறது. இன்னும் 10 வருடங்களில் 1 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளுடன், 8,200 கோடி டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டும் துறையாக டிரோன்கள் மாறும் என அமெரிக்க டிரோன் சங்கம் தெரிவித்திருக்கிறது.

இந்த துறையில் பாதுகாப்பு மற்றும் புதுமைகளை தொடர்ந்து புகுத்துவதன் மூலம் 2025-ம் ஆண்டில் இந்த துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் நிறுவனம் டிரோன் ஆராய்ச்சியில் 2013-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் டிரோன்களை இயக்குவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கி இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு `புராஜெக்ட் விங்’ என்னும் திட்டத்தை கூகுள் தொடங்கியது. இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது. அடுத்த வருடம் அமெரிக்காவில் டிரோன்களை வர்த்தக ரீதியில் கூகுள் பயன்படுத்தும் என அறிவித்திருக்கிறது.

இங்கிலாந்தில் டிரோன்

அமெரிக்காவில் உள்ள விதிமுறைகளை போலவே இருந்தாலும், எடை 20 கிலோ வரை மட்டுமே இருக்க வேண்டும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் இங்கிலாந்தில் டிரோன்களை இயக்குவதற்கு அந்நாட்டு அரசிடம் அனுமதி வாங்கி இருக்கிறது. 2017-ம் ஆண்டு முதல் டிரோன்களை இயக்க அமேசான் திட்டமிட்டுள்ளது. அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் சீனாவிலும் டிரோன் சோதனையைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் டிரோன்

இந்தியாவில் வர்த்தக ரீதியாக டிரோன்கள் இயக்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, விதிமுறைகளும் கூட உருவாக்கப்படவில்லை. மற்ற நாடுகளில் எப்படி இவை செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து இந்தியாவில் இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்படலாம். விமான போக்குவரத்து துறையிடம் அனுமதி வாங்காமல் டிரோன்களை இயக்குவது சட்டப்படி குற்றமாகும். தீவிரவாத செயல்களுக்கு இவை பயன்படக்கூடும் என்பதால் தடை செய்யப்பட்டிருக்கிறது.

விமானப் போக்குவரத்து துறை அனுமதி தவிர, பாதுகாப்பு ஏஜென்சிகள், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகளின் அனுமதியை பெற்றாக வேண்டும். அனுமதி பெறாமல் டிரோன்களை இயக்கியதற்காக கடந்த பிப்ரவரியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

சில சந்தேகங்கள்

சில வருடங்களாக சோதனை செய்யப்பட்ட பிறகுதான் இவை இயக்கப்படுகின்றன என்றாலும், சில சந்தேகங்களும் இருக்கின்றன. இந்தியாவில் இப்போது வரை டிரோன்களுக்கு அனுமதி இல்லை. ஒருவேளை அனுமதிக்கப்பட்டால் என்ன நடக்கும்.

உதாரணத்துக்கு பிளிப்கார்ட் நிறுவனம் ஒரு நாளைக்கு தோராயமாக 12 லட்சம் பார்சல்களை அனுப்புகிறது. இந்த எண்ணிக்கை இந்தியா முழுமைக்குமானது என்றாலும் பெரும்பான்மையானவை முக்கிய நகரங்களின் ஆர்டர்கள்தான். அப்படியானால் ஒரு நகரத்துக்கு எத்தனை டிரோன் தேவைப்படும். அவற்றை எப்படி இயக்குவது.? பட்டம் பறப்பது போல் நகரத்துக்குள் பறந்துகொண்டிருக்குமா?

இப்போது டெலிவரி செய்யும் ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்கே வந்து கொடுக்கின்றனர். ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகள் (சென்சார் கதவுகள் தாண்டி உள்ளே செல்ல அனுமதி தேவை) அதிகம் இருக்கும் மாநகரங்களில் டிரோன் எப்படி செயல்படும்?

இந்த டிரோன்களின் விலை சுமார் 1,000 டாலர் என்ற அளவில் இருக்கிறது. இவை வரும் காலத்தில் இன்னும் குறையலாம் என்றாலும், பெரும்பாலான மக்கள் இ-டெய்ல் நிறுவனங்கள் மூலம் வாங்குவதற்காக முதல் காரணமே விலை குறைவு என்பதுதான். டிரோன் மூலம் பொருட்கள் அனுப்பும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டி இருக்கும். அதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் ஒப்புக்கொள்வார்களா?

நாமே அனைத்து தவறையும் செய்து திருத்திக் கொண்டிருக்க முடியாது. இப்போதைக்கு மற்ற நாடுகளில் எப்படி செயல்படுகிறது என்ன தவறு நடக்கிறது என்பதை கவனிக்கத் தொடங்கலாம்!

karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

55 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்