வெளிநாட்டில் பதுக்கப்பட் டுள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்தால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சுமார் ரூ 15 லட்சம் கிடைக்கும்” என்று பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க கூட்டணி அறிவித்திருந்தது. அதன் முதல் கட்ட நடவடிக்கையாக 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை “தாமாக முன்வந்து அறிவித்து” அதற்கான 60% வரி மற்றும் அபராதம் செலுத்தி சரி செய்து கொள்ள வாய்ப்பு அளித்தது மத்திய அரசு. ஆனால் அரசாங்கம் எதிர்ப்பார்த்த அளவு இத்திட்டத்தின் மூலம் கருப்பு பணம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் கொண்டு வரப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக உள்நாட்டில் புழங்கும் கருப்பு பணத்தை குறிவைத்தது. இதற்காக சமீபத்திய பட்ஜெட்டில் “வருமானம் அறிவிப்பு திட்டம்-2016” என்னும் திட்டத்தை அறிவித்தார் நிதியமைச்சர். இந்தத் திட்டத்தின் படி இந்தியாவில் வருமானத்தில் காண்பிக்காத பணம், சொத்து அல்லது வருவாயை 30 செப்டம்பர் 2016க்கு முன்பாக வருமான வரித் துறைக்கு அறிவித்து அதற்கான 45% வரி கட்டி கணக்குகளை சரி செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
“இதுவரை வரி கட்ட தவறியவர்கள் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டிய திட்டம் இது. இதை தவற விடுபவர்கள் பின் விளைவுகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்” என்று வரி ஏய்ப்புப் பற்றி பிரதமர் எச்சரித்துள்ளார். இதற்கு முன் 1997-ம் ஆண்டு VDIS என்கிற “தாமாக முன்வந்து வரிசெலுத்தும் திட்டத்தை” அரசாங்கம் அமல்படுத்தியபோது ஏராளமானோர் இந்த திட்டத்தில் பங்கு பெற்று அப்போதைய வரியான 30% செலுத்தி கணக்கை சரி செய்து கொண்டனர்.
திட்டத்தின் செயல்பாடுகள்
இத்திட்டத்தில் கணக்கில் காட்டாத நிலம், வீடு, பங்குகள், பரஸ்பர நிதி, தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள், ரொக்கப் பணம், பினாமி பேரில் உள்ள சொத்துகள் போன்றவற்றை அறிவித்து அதற்கான வரி மற்றும் அபராதத் தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கு 30% வரி, 7.5% அபராதம் மற்றும் க்ருஷி கல்யாண் செஸ் ஆக மொத்தம் 45% கட்டி மற்ற விசாரணை மற்றும் தண்டனையில் இருந்து தப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கணக்கில் காண்பிக்கப்படாத வருமானம் மற்றும் சொத்து குறித்த விவரங்களை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் குறிப்பிட்ட படிவம் 1-ல் வருமான வரி முதன்மை ஆணையரிடம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்தப்படிவத்தில் கணக்கில் காண்பிக்காத சொத்துகளின் 1-6-2016 ன் மதிப்பை மதிப்பீட்டாளர் அங்கீகரிக்கப்பட்ட (REGISTERED VALUER) உதவியுடன் கணக்கிட்டு தாக்கல் செய்ய வேண்டும்.
இதை சரி பார்த்து முதன்மை ஆணையர் 30 நாட்களுக்குள் குறிப்பிட்ட படிவம் 2 மூலம் ஒப்புதல் அளிப்பார். அதன் பிறகு அதற்கான வரியை குறிப்பிட்ட படிவம் 3 உடன் செலுத்த வேண்டும். அனைத்து வரியையும் செலுத்திய பின் குறிப்பிட்ட படிவம் 4-ல் முதன்மை ஆணையர் சான்றிதழ் அளிப்பார். இந்தச்சான்றிதழ் அடிப்படையில் வேறு எந்த வருமான வரி அதிகாரியும் அடுத்த ஆண்டுகளில் எந்த கேள்வியும் கேட்க முடியாது. மேலும் இந்த திட்டத்தில் பங்கு பெற்றவர்கள் குறித்த அனைத்து விவரங்களும் மிகவும் ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்படும். முதன்மை ஆணையருக்கு கீழே உள்ள எந்தவொரு அதிகாரிக்கும் இந்த தகவல் பரிமாற்றம் செய்யப்படாது.
பயனும் பலன்களும்
மத்திய அரசு தற்போது அமல்படுத்தியிருக்கும் இந்த புதிய திட்டத்தின்படி தங்களது பணம் மட்டுமல்லாமல், பினாமி சொத்துகளின் மூலம் முதலீடு செய்து இருப்பவர்களும் சொத்து மதிப்பில் 45% செலுத்தி தங்கள் பெயரில் இந்த சொத்துகளை மாற்றிக்கொள்ளலாம் என்பது ஒரு மிக முக்கியமான அம்சம். சுதந்திர இந்தியாவில் பலமுறை தாமாக வெளிவந்து வரி செலுத்தும் திட்டத்தை கொண்டு வந்திருந்தாலும், பினாமிகளுக்கான சொத்துகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது இதுவே முதல்முறை.
தற்போதைய வரிச் சூழ்நிலையில் வருமான வரித் துறையினர் சர்வே அல்லது தேடல் மூலம் வரி ஏய்ப்பாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களின் கணக்கில் காண்பிக்கப்படாத வருமானம் அல்லது சொத்திற்குண்டான வரி 30%. மேலும் வட்டி மற்றும் அபராதமாக, ஏய்க்கப்பட்ட வரித்தொகை போல் 100% லிருந்து 300% வரை வசூலிக்கப்படும்.
அதாவது கண்டுபிடிக்கப்பட்ட தொகையில் 70% க்கும் மேல் வரி மற்றும் மற்ற தொகைகளாக செலுத்தப்பட வேண்டும். மேலும் சிறை தண்டனைக்கும் ஆளாக வேண்டும். இந்த கணக்கைப் பார்க்கும் போது 45% என்பது வரி செலுத்தாத பணம் வைத்திருப்போருக்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. ஏன் 45% என்பதற்கு நிதியமைச்சர் கூறும் மற்றொரு காரணம், இதை விடக் குறைவாக இருந்தால், சரியாக வரியை செலுத்துபவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இருக்காது. தவிர கணக்கில் காண்பிக்கப்படாத சொத்துகள் மீதான 45% வரியை உடனடியாக கட்டுவது பெரிய சிரமமாக இருக்கும் என்கிற நிலையில், சமீபத்தில் அரசாங்கம் ஒரு சிறிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி செலுத்த வேண்டிய வரித் தொகையில் 25% நவம்பர் 2016 க்கு முன்பாகவும், 25% மார்ச் 2017 க்கு முன்பாகவும் மீதமுள்ள 50% தொகையை செப்டம்பர் 2017 க்கு முன்பாகவும் செலுத்தலாம். ஓர் ஆண்டு வரி செலுத்த அவகாசத்தை வட்டிக் கணக்கில் பார்த்தால் கட்ட வேண்டிய தொகை 39% ஆக மட்டுமே இருக்கும்.
உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கருப்பு பணத்தை தாமாக முன்வந்து வரி செலுத்தும் திட்டங்கள் பல நாடுகளில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. உதாரணமாக ஜெர்மனி, பிரான்சு, ஹங்கேரி, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் நடைமுறையில் இருந்துள்ளது.
முரண்பாடுகளும் இடர்பாடுகளும்
இந்த திட்டத்தைப் பயன்படுத்துபவர் களது ரகசியம் பாதுகாக்கப்படும் மற்றும் தண்டனைகள் இல்லை என்று அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் சில முரண்பாடுகளும் காணப்படுகின்றன. தற்போதைய வருமான வரிச் சட்டப்படி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக உள்ள வருமான வரிக் கணக்கை கேட்க வருமான வரி சட்டத்தில் இடமில்லை ஆனால் வருமானம் அறிவிப்பு திட்டம்- 2016-யை பயன்படுத்தாதவர்கள், வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், புதிதாக ஏற்படுத்திய “நிதி மசோதா” (FINANCE BILL) மூலம் கடந்த எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நடந்த “பணப் பரிவர்த்தனை” குறித்து கேள்வி கேட்கலாம் என்கிற அபாயம் நிலவுகிறது.
தற்போது 50 லட்சத்திற்கும் அதிகமான சொத்துகளை பரிமாற்றம் செய்யும் போது 1% வரிப்பிடித்தம் செய்யப்பட்டு சான்றிதழ் கொடுத்தால்தான் பத்திரம் பதிவு செய்ய பதிவாளர்கள் அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். புதிய திட்டத்தில் பினாமி பெயரில் உள்ள சொத்துகளை சம்பந்தப்பட்ட நபர் தன் பெயருக்கு மாற்றும் போது மீண்டும் ஒரு சதவீத வரி செலுத்தத் தேவையில்லை. இது மாநில அரசு வரம்புக்குள் வருவதால் இது குறித்து பதிவாளர்களுக்கு அறிவுரைகள் வந்ததாக தெரியவில்லை. கூடிய விரைவில் அரசு இதை கவனிக்கும் என்று நம்பலாம்.
பிரதம மந்திரி சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றிவிட்டு வருமான வரித்துறை குறித்து பேசியிருக்கிறார். வருமான வரி இலாகாவை சேர்ந்த மூத்த அதிகாரிகள் முதல் அனைத்து அதிகாரிகளும் பல இடங்களில் கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்தி இத்திட்டத்தின் முழுமைக்காக தீவிர முயற்சியை எடுத்து வருவது, அரசாங்கம் இந்த திட்டத்தில் வைத்திருக்கும் முக்கியத்துவதை உணர்த்தும்.
வருமான வரித்துறை பல வகைகளில் கணக்கில் காண்பிக்காத வருமானம் மற்றும் செலவுகள் குறித்து தகவல்கள் திரட்டியுள்ளனர் என்றும், செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதிபட அதிகாரிகள் கூறுகிறார்கள். பல சாதகமான அம்சங்கள் உள்ள இந்தத்திட்டத்தை பயன்படுத்தி தங்கள் கணக்கில் காட்டாத பணத்தை சரி செய்வார்களா ? கருப்பு பூனைக்குட்டி வெளியே வருமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
karthikeyan.auditor@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago