கடந்த 15 நாட்களுக்குள் ஆதார் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமா அவசியமில்லையா என்கிற குழப்பங்களை தெளிவுபடுத்தாமல் ஒவ்வொரு திட்டத்துக்கும் ஆதார் எண் குறித்த அறிவிப்புகள் மக்களை மேலும் அலைகழிக்கிறது என்கின்றனர் ஒரு சாரர். இந்த நிலையில் அடுத்தடுத்து 30க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. விரைவில் 50 திட்டங்களுக்கான அறிவிப்புகள் வர உள்ளன. குறிப்பாக நேரடி மானியத் திட்டத்தின் கீழ் உள்ள சுமார் 84 திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை நடைமுறைக்கு கொண்டு வருவதுதான் இதன் நோக்கம்.
எல்பிஜி இணைப்பு, பொது விநியோகதிட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா வின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அவசியம் என்பது என நடைமுறையில் உள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் 5 அமைச்சகங்கள் வெளியிட்டுள்ள 14 அறிவிப்புகள் அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று குறிப்பிடுகிறது. அடிப்படை கல்வி மற்றும் இடைநிலை கல்வித்துறை வரை ஆதார் என் அவசியம் என்று அறிவித்துள்ளது.
அரசின் அறிவிப்புகள்
சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் மதிய மதிய உணவு உண்ணும் பிள்ளைகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக, ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்க காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது.
மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ், சாக் ஷர் பாரத் திட்டத்தில் வயது வந்தோருக்கான பயிற்சிகள் மற்றும் சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் ஆதார் எண் கட்டாயமாக்கியுள்ளது. ஜூன் 30ம் தேதி இதற்கான கடைசி நாள்.
குழந்தைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் அங்கன் வாடி பணியாளர்கள், உதவியாளர்களுக்கான ஊக்கத் தொகைக்கு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அளிக்க வேண்டும். சமூக நீதி அமைச்சகத்தின் பலன்களை பெறுவதற்கும், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சமூக உதவி நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியம் என கோரப்பட்டுள்ளது. ஊனமுற்றோர் தங்களுக்கான மத்திய அரசின் சலுகைகளை தொடர்ந்து பெற மே 30 ம் தேதிக்குள் ஆதார் சமர்ப்பிக்க கூறியுள்ளது. தவிர மத்திய அரசின் கல்வி உதவி தொகைகள் தொடரவும் மே 30ம் தேதிக்குள் ஆதார் எண் அளிக்க வேண்டும்.
குடும்ப நலத்துறை
தேசிய மருத்துவ அமைச்சகமும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளது. தேசிய அளவிலான மருத்துவ திட்டங்களின் கீழ் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி தொகைகளை பெறவும் ஆதார் அவசியமாக்கியுள்ளது. பிப்ரவரி 28ம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டது, மார்ச் 31ம் தேதிக்குள் இதனை அளிக்க வேண்டும்.
உரம் மற்றும் ரசாயன துறை
தேசிய அளவிலான புத்தாக்க முயற்சிகளுக்கு விருது பெறும் தனிநபர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை அறிவித்துள்ளது. மார்ச் 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்க ஆதார் என் கட்டாயம் என்று கூறியுள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்கிற இந்த திட்டத்தில் மானியம் பெற மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
ஊரக வளர்ச்சி துறை
ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மகளிர் சுய உதவி குழு பெண்கள் உதவிகளைப் பெற செப்டம்பர் 30 ம் தேதிக் குள் ஆதார் எண் அளிக்க வேண்டும்.
மகளிர் மற்றும் குழந்தை நலம்
பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான இரண்டு திட்டங்களில் உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம். ஸ்வதார் கிரே திட்டத்தில், பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மறு நிவாரணமளிக்கவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் திறன் மேம்பாட்டு (STEP) திட்டங்களில் பலனை பெறவும் ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் எண் அளிக்க வேண்டும்.
வங்கிக் கணக்குகளில் ஆதார் எண்ணை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மட்டுமல்ல, ஒரு நபர் அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின் பலனை நோக்கி செல்ல வேண்டும் என்றாலும் ஆதார் வேண்டும் என்கிறது அரசின் நோக்கம்.
ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் உச்சநீதிமன்றம் 2015 அக்டோபரில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளது என்கின்றனர் அரசின் ஆதார் முறைகளை எதிர்ப்பவர்கள். அரசின் திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக, சட்ட விரோதமாக நடந்துகொள்கிறது என்கின்றனர். அரசின் ஐந்து திட்டங்களுக்கு மட்டும் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது. குறிப்பாக பொது விநியோக திட்டம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், தேசிய சமூக நல திட்டம், எல்பிஜி மானியத்துக்கான ஜன் தன் யோஜனா கணக்கு உள்ளிட்ட ஐந்து திட்டங்களின் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என கூறியது.
சமீபத்தில் வெளியான இந்த அறிவிப்புகளும் இதற்கு முன்பான பட்டியலில் இல்லை. ஆதார் ஆவணத்தை அடையாளமாக பயன்படுத்தலாம் என்கிற நிலைமாறி சமீபத்திய அறிவிப்புகளில்ஆதார் எண் இல்லையென்றால் குறிப்பிட்ட பயன் களை பெற முடியாது என்று வலியுறுத்து கிறது. குறிப்பிட்ட திட்டங்களின் பலன் களை பெற வேண்டும் என்றால் ஆதார் எண் அவசியம் என்கிறது.
ஆதார் அடையாளம் கட்டாயப்படுத்து வதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெச்வாடா வில்சன் என்கிற வழக்கறிஞர் கூறும்போது, மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியாவுக்கு இது ஏற்ற திட்டமல்ல என்று வாதாடினார். குறிப்பாக சமூக ரீதியாகவே புலம்பெயருவோர் இருக்கும் நாட்டில் ஆதார் கட்டாயம் என்பது ஏற்புடையதல்ல என்கிறார்.
பயோமெட்ரிக் தவிர இதர விவரங்கள் மற்றும் இதர தனிப்பட்ட கேள்விகளை எப்படி எல்லாவற்றுக்கும் பொருத்த முடியும். இன்று நான் மருத்துவராக இருக்கிறேன். நாளையே நான் பத்திரிகையாளராக தொழிலை மாற்றி கொண்டால், நான் பழைய தொழிலை ஏன் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இவர் கேள்வி எழுப்புகிறார்.
ஆதார் எண் பெறுவதற்கான விண் ணப்பங்களில் உள்ள கேள்விகள் தனி நபர்களை பாதிக்கப்படக்கூடிய வகை யில் இருப்பதாகவும் கேள்வி எழுகிறது. சர்வ சிக் ஷ அபியான் திட்டத்தில் குழந்தைகளுக்கு ஆதார் கட்டாய மாக்கும்போது 6 முதல் 14 வயது வரையான குழந்தைகளின் மன நிலையை இது பாதிக்கும் என ஒரு சாரர் குறிப்பிடுகின்றனர்.
ஊனமுற்ற குடிமகன்கள் அல்லது குழந்தைகள் எப்படி ஆதார் எடுப்பது என்கிற கேள்விக்கு பதில் இல்லை. இவர்கள் கல்வி உதவி தொகைகள், அரசின் உதவிகளுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்கிற குழப்பம் இன்னும் தீர்க்கப்படவில்லை.
கல்வி உரிமை சட்டப்படி பள்ளிக் குழந்தைகளிடம் ஆதார் கட்டாயமாக்குவது சட்ட விரோதம் என்கின்றனர் கல்வி ஆர்வலர்கள். ஏனென்றால் இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் கல்விகொடுக்க வேண்டும் என்கிறது கல்வி உரிமைச் சட்டம். இது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்கின்றனர்.
சர்வ சிக் ஷ அபியான் திட்டம் மத்திய அரசின் முழுவதுமான திட்டமல்ல மாநில அரசுகளுக்கு 60:40 சதவீத அளவில் பங்கு உள்ளது. ஆரம்ப கல்வியை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான இந்த திட்டத்தில் பாட புத்தகங்கள், சீருடைகள், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் என இந்த திட்டத்துக்கான தொகை செலவிடப்படுகின்றன. மாநில அரசுகளின் முடிவையும் இதற்கு கோர வேண்டும்.
திறன் வளர்ப்பு பயிற்சி, பெண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு திட்டங்களுக்கு ஆதார் மையப்படுத்தப்படுகிறது. தவிர தனிநபர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு விஷயங்களிலும் ஆதாருக்கு கொடுக் கப்படும் தகவல்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதிலும் நம்பகத்தன்மை இல்லை என்கின்றனர்.
ஆனால் ஆதார் அடையாளத்தை அரசு ஆவணமாக மட்டும் பார்க்க வில்லை. அதற்கு மேலே குடிமகனின் அடையாளமாக கொண்டு வரத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மனி தனுக்குமான அதிகாரம் என்று வரை யறுக்கப்பட்ட ஆதாரை அனைத்துக்கும் தேவை என்று வெளிப்படையாக அறிவிப்பதே நல்லது.
இதுவரையில் ஆதார் எண் இல்லாதவர்கள் விரைவில் ஆதார் முறைக்கு மாற வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஆதார் எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளோம் என்பதை இந்த நேரத்தில் மக்களும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
- maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago