சுற்றுச் சூழல் பாதுகாப்பு இப்போது ஆட்டோமொபைல் துறை யில் அதிகம் பேசப்படும் விஷயமாகி விட்டது. அத்துடன் உடல் நலன் பேணும் போக்கு அதிகரித்துவருகிறது. இவை இரண்டுக்கும் தீர்வு காணம் விதமாக இ-பைக் தயாரிப்பில் இறங்கியுள்ளது கோவையைச் சேர்ந்த மில்டெக்ஸ் இன்ஜினீயர்ஸ் லிமிடெட் நிறுவனம்.
‘கிரவுட் பண்ட்' முறையில் நிதி திரட்டி இந்நிறுவனம் தயாரித்து வரும் ஸ்பெரோ இ-பைக்குகள் விற்பனைக்கு வரும் முன்னதாகவே நுகர்வோரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
போதுமான முதலீடு இல்லாமல் வியாபாரத்தில் இறங்குவது கடினம் என்ற கோட்பாட்டை மாற்றியுள்ளது ‘கிரவுட் பண்ட்' எனப்படும் பலர் கூட்டாக இணைந்து செயல்படக்கூடிய தொழில் வழிமுறை. சரியான திட்டமிடலுடன் கூடிய வியாபார உத்திகளை நேர்த்தியாக செயல்படுத்தும் பட்சத்தில் ஒரு தயாரிப்பு பொருள் சந்தையில் களம் இறங்குவதற்கு முன்னதாகவே நுகர்வோரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி காத்திருக்க வைக்க முடியும் என்பதை ‘ஸ்பெரோ இ-பைக்' தயாரிப்பும் உதாரணங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த ஜவுளி மற்றும் சணல் பொருட்கள் உற்பத்திக்கான இயந்திர பாகங்கள் தயாரித்து விநியோகம் செய்து வரும் மில்டெக்ஸ் இன்ஜினீயர்ஸ் நிறுவனம்தான் ‘ஸ்பெரோ இ-பைக்' இ-30, இ-60, இ-100 ஆகிய மாடல்களை சந்தைக்கு கொண்டு வருகிறது. இந்த களத்தில் புதிதாக நுழையும் நிறுவனம்தான் என்றாலும் அதன் தயாரிப்புகள் சந்தைக்கு வரும் முன்னதாக விற்பனை ஆர்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறத் தொடங்கியுள்ளன.
இவ்வாறு, முன்னதாகவே முழுத் தொகையையும் செலுத்தி பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்தில் இ-பைக்கு களை இந்நிறுவனம் விநியோகிக்க இருக்கிறது.
தயாரிப்பு நுட்பம் மற்றும் தனித்துவம்
பேட்டரியில் இயங்கக் கூடிய பைக்குகளை பல நிறுவனங்கள் தயாரித்தாலும், விற்பனைக்கு வரும் முன்பாகவே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இ-பைக் குறித்து அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.மணிகண்டன், இயக்குநர் சுப்ரியா பால் ஆகியோர் பகிர்ந்தனர்.
"இந்த தயாரிப்புகளைப் பொருத்தவரை எரிபொருட்கள் இன்றி பேட்டரியில் மட்டுமே இயங்குவதால், பேட்டரியின் செயல்பாடுதான் விற்பனையைத் தீர்மானிக்கக் கூடிய முக்கிய பொருளாகும்.
இந்த துறையில் இறங்கலாம் என முடிவுக்கு வந்த பின்னர் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டோம். இது போன்ற தயாரிப்பில் இறங்கிய பல நிறுவனங்கள் பேட்டரியால் கோட்டை விட்டு பொருளாதார இழப்பை சந்தித்து தொழிலை விட்டு விலகியதை அறிந்தோம். இதனை கவனத்தில் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக ஏற்கெனவே பேட்டரியால் சந்தித்த பிரச்சினைகளை எப்படி தீர்வு காண்பது என்பதை தொடர் ஆராய்ச்சி மூலமாக வடிவமைத்தோம். பேட்டரி 48 வோல்ட் திறன் கொண்டது.
இ-பைக்கினை இயக்கிச் செல்லும் போது பேட்டரியைப் பயன்படுத்தாமல் பெடல் மூலமாக ஓட்டிச் சென்றாலும் பேட்டரியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள மின்ஆற்றல் எவ்விதத்திலும் செலவு ஆகாமல் தக்க வைத்து கொள்வதோடு, பெடல் மூலமாக பைக்கை இயக்கும் போது அதிலிருந்து மின்ஆற்றல் உற்பத்தி செய்து பேட்டரிக்கு கொண்டு செல்லுமாறு வடிவமைத்துள்ளோம்.
அதேபோல், வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் போதும், நிறுத்தும் போதும் பேட்டரி இருந்து வெளியே வரும் மின்ஆற்றல் அதிகம் செலவு ஆகாதவாறு திரும்ப பேட்டரிக்கு சென்று சேமிப்பாகும் ‘ரீகிரியேஷன்' முறையில் வடிவைத்துள்ளோம்.
உலகத் தரம் வாய்ந்த பொருளை சந்தைப்படுத்த வேண்டும் என்றால் விலையைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்பது எங்களது எண்ணம். அதனால், எப்படியாவது உற்பத்தி செலவை கட்டுப்படுத்தி குறைந்த விலைக்கு சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தரமான பொருளை கொடுத்தால் அதற்கான நியாயமான விலையைக் கொடுக்க வாடிக்கையாளர்கள் தயாராகவும் இருக்கிறார்கள்.
ஒன்பது சிறப்பம்சங்கள்
அதனைக் கருத்தில் கொண்டே, இந்த தயாரிப்பில் எவ்விதமான சிறப்பம் சங்களை உட்புகுத்தலாம் என ஆய்வு செய்து உருவாக்கியுள்ளோம். இதன்படி, பெடல் பண்ணும்போது பேட்டரி சார்ஜ் ஆகும். ஐந்து கியர் கொண்டது. முன்சக்கரத்துக்கு டிஸ்க் பிரேக் உண்டு.
‘வாக் அசிஸ்ட்' என்ற பட்டனை அழுத்திவிட்டு பைக்கை உருட்டிக் கொண்டு உடன் வருபவர்களுடன் பேசிக் கொண்டே நடக்க விரும்பினால் நீங்கள் பைக்கை தள்ளத் தேவையில்லை. ஹேண்டில் பாரை ஒரு கையால் பிடித்துக் கொண்டால் போதும், நீங்கள் நடக்கும் வேகத்துக்கு ஏற்ப 6 - 7 கி.மீ. வேகத்துக்கு நாய் குட்டியை பிடித்துக் கொண்டு செல்வது போல் உங்கள் கூடவே வரும்.
அதாவது நீங்கள் பைக்கை உருட்டிச் செல்வதற்கு அழுத்தம் கொடுத்து தள்ள வேண்டியது இல்லை. மின்னணு திரை உள்ளது. அதில், வேகத்தைப் பார்த்துக் கொள்ளலாம். அந்த திரையில் ‘செக்யூரிட்டி கோடு' என்கிற பட்டனை அழுத்தி ரகசிய குறியீட்டு எண்ணை கொடுத்தால் மட்டுமே பேட்டரி மூலமாக பைக் இயங்கும். ரகசியக் குறியீட்டு எண்ணை கொடுக்காவிட்டால் பெடல் மூலமாக அழுத்தித்தான் வாகனத்தை ஓட்ட முடியும்.
குழந்தைகள், பைக்கை எடுத்துச் சென்று ஆபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘செக்யூரிட்டி கோடு' சிறப்பம்சத்தை உருவாக்கியுள்ளோம். மற்றொன்று, ‘பெடல் அசிஸ்ட்', இதன்படி வயதானவர்களால் இளைய வயதினருடன் ஈடு கொடுத்து பெடலை அழுத்தி அவர்களுக்கு இணையாக ஓட்ட முடியாது.
ஆனால், ‘பெடல் அசிஸ்ட்' என்ற பட்டனை ஆன் செய்வதன் மூலமாக இளை யோர் என்ன வேகத்தில் செல்கிறார்களோ அவர்களுக்கு இணையாக வயதானவர் களும் பெடலை அழுத்தாமல் பேட்டரி உதவியுடன் சிரமமின்றி பயணிக்க முடியும். இவ்வாறு ஏனைய தயாரிப்புகளில் இல்லாத 9 சிறப்பம்சங்களுடன் வடிவத்துள்ளோம். இதில், இ-30 பைக்கை ஒருமுறை அதாவது 4 - 5 மணி நேரம் சார்ஜ் செய் தால் 30 கி.மீ. தூரம் பேட்டரி இயங்கும்.
இதேபோல், இ-60 பைக் 60 கி.மீ. தூரமும், இ-100 பைக் 100 கி.மீ. தூரமும் பேட்டரி இயங்கும். பேட்டரியை பயன்படுத்தாமல் பெடல் மூலமாக எத்தனை நாட்கள் இயக்கினாலும் பேட்டரியில் சேமித்துள்ள மின் ஆற்றல் அப்படியே இருக்கும்.
இ-30 பைக்கை ஒருமுறை சார்ஜ் செய் வதற்கு ஒரு யூனிட் மின்சாரம் கூட செலவு ஆகாது. இ-60, 100 பைக்குகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ஆகும். தற்போது, இந்த தயாரிப்புகளுக்கு ரூ. 30 ஆயிரம், 37 ஆயிரம் மற்றும் ரூ. 51 ஆயிரம் என விலை நிர்ணயித்துள்ளோம். மூன்று ஆண்டுகளில் ஆராய்ச்சி, உற்பத்திக்கான கட்டமைப்புக்கு மட்டும் சுமார் ரூ.70 லட்சம் அளவுக்கு செலவு செய்துள்ளோம்.
முதல் கட்ட ஆர்டர்
‘கிரவுட் பண்ட்' திட்டத்தின் கீழ் பெங்களூருவைச் சேர்ந்த > www.fueladream.com என்ற சேவை நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுள் ளோம். முதற்கட்ட விளம்பரத்தின் அடிப் படையில் மிஜோரம், புணே, மும்பை, கேரளம், காஷ்மீர், சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 150 ஆர்டர்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சுப்ரியாபால், நிறுவன இயக்குநர்
எஸ்.மணிகண்டன், நிர்வாக இயக்குநர்
இந்த ஆர்டர்களை செப்டம்பர் மாதத்தில் முடித்துக் கொடுக்க உள்ளோம். எங்களால் மாதத்துக்கு 2 ஆயிரம் இ-பைக்குகளை தயாரித்து வழங்க முடியும். சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாதவாறு ஒரு தயாரிப்புப் பொருளை கொண்டு செல்கிறோம் என்ற விதமான மகிழ்ச்சி எங்களுக்குள் உள்ளது. வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைத்துள்ளோம். அதனால், வாடிக்கையாளர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்” என்றனர்.
தொடர்பிற்கு:saravanan.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
58 mins ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago