இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல் (குறள் 536)
360° மதிப்பீடு (assessment) என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
பணியாளர்களை வருடத்திற்கு ஒரு முறையேனும் அவர்கள் முந்தைய ஆண்டில் செய்த பணி எவ்வாறு இருந்தது என்று அவர்களின் மேலதிகாரி ஓர் அறிக்கை தயாரித்து அந்நிறுவனத்தின் மனிதவள மேலாண்மைத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்பது பொதுவான நடைமுறை.
ஒருவரின் பணி எவ்வாறு இருந்தது, அவர் செயல்பாட்டின் நிறை குறைகள் எவை என்பதை மேலதிகாரியின் பார்வையில் மட்டும் பார்த்து அதையே வேத வாக்காக ஏற்றுக் கொண்டது அந்தக் காலம்! சமீப காலமாக இந்த அணுகுமுறை மாறி வருகிறது.
ஐயா, திருச்சியில் ஒரு நிதி நிறுவனம். வாகனக் கடன் கொடுப்பவர்கள். அதன் கிளை மேலாளரின் திறமையை யார், எப்படி எடை போடுவது?
வழக்கமான முறை எனில் அவரது கோட்ட மேலாளர் தானே அதைச் செய்வார்? கிளை மேலாளர் எவ்வளவு வாகனங்களுக்குக் கடன் கொடுத்தார்; அது சென்ற ஆண்டை விட எத்தனை சதவீதம் அதிகரிப்பு; அவருக்குக் கொடுக்கப்பட்ட இலக்கு எட்டப்பட்டதா என்பது போன்றவற்றை வைத்தே மதிப்பிடப்படும் இல்லையா?
ஆனால் ஒருவரை மதிப்பிடுவதற்கு வெறும் எண்கள் போதுமா? அவரது சக ஊழியர்களிடம் அவர் சரியாக நடந்து கொண்டாரா என்பதும் முக்கியம் தானே?
அவர் முடிவெடுப்பதில் தாமதம் செய்பவரா, பணியில் ஆர்வம் காட்டுபவரா என்பதையெல்லாம் அவர்களிடம் கேட்டால் தானே வண்டவாளம் தண்டவாளம் ஏறும்! தவறைக் கண்டிக்காமல், தண்டிக்காமலிருப்பது பெருந்தவறன்றோ!
அண்மையில் இன்போசிஸ் நிறுவனம் ஐகவுண்ட் (iCount) எனும் பணியாளர் கருத்து கேட்பு (feedback) திட்டத்தை அறிமுகப்படுத்தியதைப் படித்திருப்பீர்கள். இதற்கான செயலி வழியாகவே ஒரு குழுவில் பணி செய்பவர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு அவர்களது பணி குறித்த விமர்சனங்களை அவ்வப்பொழுது சொல்லமுடியும்!
பல அலுவலகங்களில் பார்த்து இருப்பீர்கள். ஒரு அதிகாரி எப்படிப் பட்டவர் என்பதை அங்குள்ள பியூனிடம் கேட்டால் போதும்.
அதிகாரி தப்பான வேலை செய்வாரா மாட்டாரா, கையூட்டு கொடுத்தால் நடக்குமா என்பவற்றுடன் எவ்வளவு எதிர்பார்ப்பார் என்பதைக் கூடப் பிட்டுபிட்டு வைத்து விடுவாரே!
இதைப் போலவே ஒருவரின் திறமையை எடைபோட அவரின் வாடிக்கையாளர்களிடம் அவர் நடந்து கொள்ளும் முறையையும் தெரிந்து கொள்ள வேண்டுமில்லையா?அவர் தொடர்ந்து கனிவாக நடந்து கொண்டால் தானே நீண்ட கால அடிப்படையில் நன்மை பயக்கும்!
சில பன்னாட்டு நிறுவனங்களில் ஒருவரை மதிப்பீடு செய்ய அவரிடம் பொருட்களை விற்போரிடம் (suppliers) கூட விசாரிப்பதுண்டாம்!
ஒருவர் மேலதிகாரிக்கு மட்டும் நல்லவராய் இருந்தால் எப்படி? நிறுவனம் உண்மையான வளர்ச்சி காணவேண்டுமெனில் அவருடன் நடைமுறையில் தொடர்புடைய எல்லோரிடமுமே (all stakeholders) அவர் முறையாக நடந்து கொள்ள வேண்டுமில்லையா?
இவ்வாறு எல்லாக் கோணங்களிலிருந்தும் ஒருவர் பார்க்கப்படுவது தான் 360° மதிப்பீடு!
எல்லோரிடமும், எக்காலத்திலும், அலட்சியப்படுத்தாமல், கடமை தவறாமல் நடந்து கொள்வதுதான் ஒப்பற்ற ஆற்றல் என்கிறது குறள்.
somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago