வங்கிகள் வாரிய குழுவுக்கு அதிகாரம் இருக்கிறதா?

By வாசு கார்த்தி

பொதுத்துறை வங்கிகளில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. வங்கிகள் நிதி திரட்ட வேண்டும், வாராக்கடனை குறைக்க வேண்டும், கடன் வளர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளை சீரமைக்க ஆக்ஸிஸ் வங்கியின் முன்னாள் தலைவர் பிஜே நாயக் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு பல விஷயங்களை பரிந்துரை செய்தது. அதில் ஒன்றுதான் வங்கி வாரிய குழு.

குழுவின் பணிகள்

பொதுத்துறை வங்கியின் இயக்குநர்கள், தலைவர்கள் உள்ளிட்ட நியமனங்களை பரிந்துரை செய்வது, இயக்குநர் குழு உறுப்பினர்கள் பதவி நீட்டிப்பு, நீக்கம், மூத்த அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட விஷயங்களை மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவது. பொதுத்துறை வங்கிகளின் மனித வளத்தை சிறப்பாகக் கையாளுவது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் இயக்குநர் குழு செயல்பாடுகள் குறித்த தகவல்களை உருவாக்குவது, நிதி திரட்டுவதில் உதவுவது, உயரதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்டவை இந்த வாரிய குழுவின் பணிகள் ஆகும்.

இதற்காக சிஏஜியின் முன்னாள் தலைவர் வினோத் ராய் தலைமையில் வங்கிகள் வாரிய குழு உருவாக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த குழு உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் முதல் இந்த குழு செயல்படத் தொடங்கியது. அரசியல் தலையீடுகள் இருக்காது, வங்கியின் முடிவுகள் வர்த்தக ரீதியில் மட்டுமே எடுக்கப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அப்போது தெரிவித்தார். 2016-ம் ஆண்டு ஏப்ரலில் இந்த குழுவின் முதல் கூட்டம் நடந்தது.

குழுவின் முக்கியமான பணியே வங்கிகளின் தலைவர் பதவியை பரிந்துரை செய்வதுதான். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் பதவி கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி முதல் காலியாக இருந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த வங்கிக்கு தலைவரை விரைவில் பரிந்துரை செய்வோம் என வினோத் ராய் அறிவித்தார். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதியில்தான் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். சுமார் 7 மாதங்களுக்கு மேல் தலைவர் பதவி காலியாக இருந்துள்ளது.

வாராக்கடன் அதிகமாக இருக்கும் வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ஒன்று. இந்த சூழ்நிலையில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபரை நியமனம் செய்ய இவ்வளவு காலம் ஏன் என்னும் கேள்விக்கு தெளிவான பதில் இல்லை.

சொல்லப்படும் காரணம்?

வங்கிகள் வாரிய குழு என உருவாக்கப்பட்டாலும், இந்த குழுவுக்கு பிரத்யேக அதிகாரங்கள் எதுவும் கிடையாது. தற்போதைய நிலைமையில் இந்த குழு பரிந்துரை மட்டுமே செய்யமுடியும். ஆனால் இறுதி முடிவை மத்திய அமைச்சரவை நியமன குழுதான் எடுக்கும். (appointments committee of the cabinet) இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என்றால் பரிந்துரை மட்டுமே செய்வதற்கு இந்த குழு எதற்கு என்னும் கேள்விகளை இந்த துறை வல்லுநர்கள் எழுப்புகிறார்கள்.

தவிர மத்திய அரசு நினைத்தால் இந்த குழுவின் அனுமதி இல்லாமல் இயக்குநர்களை நியமனம் செய்யமுடியும், இந்த குழுவின் பரிந்துரையை நீக்கவும் முடியும். தவிர சில தினசரி அலுவல் அல்லாத இயக்குநர் நியமனம் இந்த குழு வசம் இல்லை. அந்த இயக்குநர்களை மத்திய அரசு நேரடியாக நியமனம் செய்யும். பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியின் செயல் இயக்குநர் மகேஷ் குமார் ஜெயினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவராக்க வாரியம் பரிந்துரை செய்தது. ஊழல் தடுப்பு ஆணையமும் இவர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியது. ஆனால் அவருக்கு தலைவர் பதவி வழங்கப்படவில்லை என முன்னணி ஆங்கில செய்திதாள் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

பல கட்ட பரிசீலனைக்கு பிறகு இந்த குழு பெயரை பரிந்துரை செய்தாலும், நிதி அமைச்சகம் மீண்டும் ஒரு முறை சோதனை செய்த பிறகு வங்கி வாரிய குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

காலியாகும் தலைவர் பதவிகள்

பல மாதங்களாக காலியாக இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் பதவி இப்போதுதான் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த நிதி ஆண்டில் 9 பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர் பொறுப்புகளில் இருப்பவர்கள் ஒய்வு பெற இருக்கிறார்கள். ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது சரியா, இல்லை ஓய்வு பெற்ற பிறகு நேர்காணல் நடத்துவது சரியா என்பது கூட தெரியாதது அல்ல வங்கி வாரியக் குழு.

சம்பள விகிதம்

வாராக்கடன் உள்ளிட்ட சில பிரச்சினைகள் இருந்தாலும், பொதுத்துறை வங்கிகளின் முக்கிய பிரச்சினை அதிகாரிகளின் சம்பளம். தனியார் வங்கிகளை எடுத்துக்கொண்டால் கீழ்நிலை பணியாளர்களுக்கு மிக மிக குறைவான சம்பளம் இருக்கும். ஆனால் உயரதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் இருக்கும். மாறாக பொதுத்துறை வங்கிகளில் கீழ்நிலை பணியாளர்களுக்கு ஒப்பீட்டு அளவில் அதிக சம்பளம் இருக்கும். ஆனால் உயரதிகாரிகளுக்கு மிக மிக குறைவான சம்பளம் இருக்கிறது. இதனால் தகுதி வாய்ந்த பணியாளர்களை சந்தையில் இருந்து கொண்டு வருவது என்பது சிரமம். இதற்காக வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சம்பள விகிதங்களில் மாற்றம் செய்யப்படும், வங்கி பங்குகள், ஊக்கத்தொகை வழங்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வினோத் ராய் தெரிவித்தார். ஆனால் மார்ச் மாதம் ஆகியும் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

ராஜனின் கருத்து

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வங்கி வாரியக் குழுவின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சி ஒன்றில், வங்கி வாரியக் குழுவுக்கு மேலும் அதிகாரத்தை அரசு வழங்க வேண்டும் என்றார். விரைவில் வங்கி வாரிய குழு இயக்குநர்களை நேரடியாக நியமனம் செய்யும் நிலை வர வேண்டும். வங்கிகள் தொழில்முறை வல்லுநர்களால் நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

மற்றொரு நிகழ்ச்சியில் பேசும் போது, வங்கிகளுக்கு அதிக தலையீடு இருக்கிறது. ரிசர்வ் வங்கி, நாடாளுமன்றம், நிதி அமைச்சகம், வங்கி வாரிய குழு, என பல அமைப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. தவிர ஊழல் தடுப்பு ஆணையத்துக்கும் பதில் சொல்ல வேண்டும். இவற்றை சரி செய்யும் பட்சத்தில்தான் வங்கிகள் சிறப்பாக செயல்பட முடியும் என கூறினார்.

இன்னும் சில நாட்களில் ஒரு வருடத்தை பூர்த்தி செய்ய இருக்கிறது வங்கிகள் வாரிய குழு. எதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டதோ, அந்த பணிகள் நிறைவேறவில்லை எனில் இந்த குழு அமைக்கப்பட்டதன் நோக்கமே பயனற்றதாகிவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்